
மதுரை, ஈஸ்ட் கேட் கான்வென்ட் பள்ளியில், 1959ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது, பாடல், ஆடல் போட்டிகளில் பங்கேற்க முயல்வேன்.
என் வேண்டுகோளை நிராகரித்து, 'கருப்பாக இருக்கும் உனக்கு இதெல்லாம் தேவையா...' என ஏளனம் செய்வர்.
பளிச் நிறத்தில் தோன்றும் தோழி சபிதாவுடன் பள்ளிக்கு வரும் போது, 'அமாவாசையும், பவுர்ணமியும் சேர்ந்து போகுதடா...' என கேலி செய்வர்.
இவற்றால் நான் முடங்கிவிடவில்லை. திறமையை வளர்த்து முன்னேறும் வெறி ஏற்பட்டது. ஆண்டுவிழா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்தேன்.
மதுரை லேடி டோக் கல்லுாரியில் சேர்ந்த போது, முன்னேற நிறம் தடையில்லை என உணர்ந்தேன். கஷ்டப்படாமல், இஷ்டத்துடன் படித்தேன். என் மனநிலை அறிந்து உதவினார் உளவியல் ஆசிரியர்.
ஆர்வம் குன்றாமல் விடாமுயற்சியுடன் படித்து, பி.எஸ்சி., பட்டப்படிப்பில், மாநில அளவில் முதன்மை மதிப்பெண் பெற்றேன். அன்றைய துணை ஜனாதிபதி வி.வி.கிரி கையால் மேடையில் பதக்கம் பெற்றேன்.
தற்போது என் வயது, 79; ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். நிறபேதத்தை தவிடு பொடியாக்க துணை நின்ற ஆசிரியர்களை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- எஸ்.என்.வி.குருவம்மாள் பாண்டியன், கோவை.
தொடர்புக்கு: 99444 20907

