PUBLISHED ON : ஜூன் 21, 2019

கும்பகோணம், சாத்தனுார் கிராம பள்ளியில், 1944ல், 5ம் வகுப்பு படித்தேன்.
அங்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் அற்புதமானவர்கள்; பாடத்துடன், புத்திமதிகள், நல்ல கதைகள் கூறி, வகுப்பை சுவாரஸ்யமாக நடத்துவர்.
நான், மிகவும் பயந்த சுபாவம் உள்ளவள். முரட்டுகுணமுள்ள மாணவன் பாலு, அடிக்கடி என்னை சீண்டி, அழ விடுவான். வகுப்பு முடிந்ததும், கோவில் வாசலில் பஞ்சு மரத்தில், கல் எறிந்து விளையாடுவோம்.
ஒரு நாள், பாலு எறிந்த கல், என் தலையில் பட்டு, ரத்தம் கொட்டியது. நான் மயங்கி விழுந்து விட்டேன்; அவன் தப்பி ஓடி விட்டான்.
நான்கு நாட்களுக்குப் பின், பள்ளிக்குச் சென்றேன்.
எனக்கு நடந்த விஷயம், என் வகுப்பு தோழி மல்லிக்கு மட்டும் தெரியும்; அவள், சம்பந்தம் பிள்ளை என்ற ஆசிரியரிடம் சொல்லி விட்டாள். வகுப்பு ஆரம்பித்ததும், பாலுவை அழைத்த ஆசிரியர், 'ஏன் இப்படி செய்தாய்...' என்று கோபித்தார்.
'நான் கல் எடுத்து அடிக்க வில்லையே... ஏய்... பாப்பா உன் தலையில் அடித்தேனா...' என்று அதட்டினான். நான் நடுங்கியபடி, 'இல்லையே... இவன் அடிக்கவில்லை...' என்று உளறினேன்.
என் நிலைமையை உணர்ந்த ஆசிரியர், 'டேய் பாலு... நீ கல்லால் அடித்தது பெரிய குற்றம்! உன் தங்கச்சிய யாராவது அடித்தால், சும்மா விடுவாயா... அடித்து விட்டு இல்லை என்று பொய் சொன்னது, இரண்டாவது குற்றம்...' என்று கண்டித்தார்.
அத்துடன் என்னைப் பார்த்து, 'நீ பயத்தில், உண்மையை மறைத்தாய்... தப்பு செய்தவனை காட்டிக் கொடுக்க தயங்கினாய். பெண்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாமா... ஆபத்துக்கள், இனி தொடர்ந்தபடி தான் இருக்கும்; உண்மையைக் கூறினால் தானே அவனை திருத்த முடியும்...' என்று உணர்த்தினார்.
பாலு என்னிடம் மன்னிப்புக் கேட்டான். ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தற்போது, என் வயது, 84; அந்த நிகழ்ச்சியை நினைத்தால், நெகிழ்ச்சியாக உள்ளது.
- டி.ராதா, சென்னை.
