PUBLISHED ON : ஏப் 10, 2021

முன்கதை: வீட்டை வீட்டு சிறுவயதில் ஓடிய மகன், பணம் கிடைக்காது என அறிந்த உடன் மீண்டும் ஓடிப்போனான். அவனுக்காக, தபால் நிலையத்தில் சேமித்திருந்த பணத்தை, ஏழை மாணவன் படிப்புக்கு வழங்கினார் லட்சுமி. அந்த மாணவனுக்கு கல்விக் கடனும் வழங்கியது வங்கி. இனி -
ஏழை மாணவன் பன்னீர்செல்வம் படிப்புக்கு கடன் வழங்கிய வங்கி மேலாளர் அருண் குமார், ''நன்றியுணர்வு தான் சமூகத்துக்கு உடனடி தேவை...'' என்று போதித்தார். வங்கியிலிருந்து, ஆசிரியர் பழனிதுரையும், மாணவன் பன்னீர்செல்வமும் விடை பெற்றனர்.'உதவிய பாட்டியிடம், அம்மாவை அறிமுகப்படுத்தி நன்றி சொல்ல வேண்டும்' என எண்ணியபடியே, வீடு திரும்பினான் பன்னீர். பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த அவன் அம்மா, அன்று நேரத்தோடு வீடு திரும்ப இயலவில்லை.அதனால், அவன் மட்டும் லட்சுமியை சந்தித்து, வங்கியில் கல்வி கடன் கிடைத்துள்ள விவரத்தை கூறினான்.மறுநாள் மாலை -மனதில் பாரம் ஏதுமில்லாமல், தெருவில் நடந்து கொண்டிருந்தார் லட்சுமி.பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. வங்க கடலில் புறப்பட்டு ஊருக்குள் புகுந்தது தென்றல். லட்சுமியின் பையில், வங்கி வைப்பு நிதியில் பெற்ற வட்டிப் பணம் இருந்தது.'இந்த மாத செலவுக்கு இதுவே அதிகம்' என்று நினைத்தார். எதிர்க்கொண்டு ஓடி வந்த பக்கத்து வீட்டு சிறுவன் வேலு, ''பாட்டி... எங்கம்மா சொன்னாங்க... பன்னீர் அண்ணனுக்கு நெறைய பணம் கொடுத்து, நீங்க தான் பெரிய கல்லுாரியில சேர்த்து விட்டீங்களாம்... அந்த அண்ணன் இனிமே பெரிய ஆள் ஆயிடுமாமே...'' என்றான்.''அப்படியில்லப்பா ஏதோ கொஞ்சம் போல...'' என்று ஆரம்பித்தார்.அதே நேரம், மிதிவண்டி குறுக்கே வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய பன்னீர்செல்வம், ''பாட்டி... இப்பத்தான் டவுனுல இருந்து திரும்பி வர்றேன்... கல்லுாரி சேர்க்கை நல்லபடியா முடிஞ்சுது...'' என்றான்.''ரொம்ப சந்தோஷம் கண்ணு...''''நானும், என் அம்மாவும் உங்களை மறக்க மாட்டோம்...''''நல்லாயிருப்பீங்கப்பா...''''அம்மா, இன்னும் கொஞ்ச நேரத்துல, உங்களை பார்க்க வீட்டுக்கு வருவாங்க; உங்க கால்ல விழுந்து ஆசி வாங்கணும்ன்னு சொன்னாங்க...''''அதெல்லாம் எதுக்கு ராஜா... நீங்க எல்லாரும் எப்பவும் நல்லாயிருக்கணும்; அதுதான் எனக்கு வேணும்...'' என்றார் லட்சுமி.இடைமறித்து, ''அண்ணா... உங்க புது பள்ளிக்கூடம் ரொம்ப பெரிசா...'' என்றான் வேலு.''ரொம்ப பெரிசுடா தம்பி...'' மகிழ்ச்சியுடன் சொன்னான் பன்னீர்.''அப்ப நானும் பெரியவனாகி, அங்க தான் படிப்பேன்...'' என்றபடி லட்சுமியை நோக்கி, ''என்னையும் அங்கேயே படிக்க வைங்க பாட்டி...'' என்றான் வேலு.''உன்னையும் சேர்த்து விட்டா போச்சு...'' என்றபடி, பன்னீருக்கு அறிவுரை சொன்னார் லட்சுமி.''இப்ப நான் சொல்றதை மனசுல நல்லா பதிய வெச்சுக்க...''''சொல்லுங்க பாட்டி...''''முழுசா கவனம் செலுத்தி படி! அன்னைக்கி பாடத்தை அன்னைக்கே படிச்சிடு. அது தான் முக்கியம்; நாளைக்கு பார்த்துக்கலாம்ன்னு தள்ளி போடாதே... காலம் பொன் போன்றது; திரும்ப வராது...''''நிச்சயம் அது போலவே எண்ணி படிக்கிறேன் பாட்டி...''''இதோ... இந்த வேலு கிட்ட இப்ப அன்பா, ஆதரவா, அண்ணன், தம்பின்னு பேசி பழகற பாரு... இதே போல தான் எப்பவும் எல்லார்கிட்டயும் பழகணும்...''''சரிங்க பாட்டி...''''படிச்சு நல்ல நிலைமைக்கு வந்த பின், உன்னால முடிஞ்ச உதவியை கஷ்ட படுறவங்களுக்கு கண்டிப்பா செய்யணும்... அதையும் கால நேரத்தோட செய்...''''கண்டிப்பா செய்வேன்...''''கை நிறைய பணம் சம்பாதிக்கிறது மட்டுமே முழு வாழ்க்கை ஆகிடாது... நிறைய புண்ணியங்களையும் சம்பாதிக்கணும்... எப்பவும் உண்மையே பேசு... அது கொடுக்கிற நிம்மதியை வேற எதுவும் கொடுக்காது...''''சரிங்க பாட்டி...''''உலகத்துல, கத்துக்கிட்ட கல்வியும், கலையும், ஏழேழு ஜென்மத்துக்கும் கூடவே தான் இருக்கும். அது நம்மோட ஒவ்வொரு ஜென்மத்துக்கும் உதவி செஞ்சிக்கிட்டே இருக்கும். நான் சொல்றதெல்லாம் என்னன்னு புரியுதா...''''நல்லா புரியுது பாட்டி... இதை பத்தியெல்லாம் ஆசிரியர் பழனிதுரை நெறைய சொல்லியிருக்காரு...''''நம்ம ஐயா அதுக்குன்னே பொறந்தவரு... இவரை போல தான் எல்லா ஆசிரியரும் பொறுப்பா இருக்கணும்...''''ஆமாம் பாட்டி... நம்ம ஐயா ரொம்ப நல்லவரு...''''எப்பவும் அவர் கண்பார்வையிலேயே இரு...''''நீங்க கூறியபடியே நடந்துகுவேன்... நிச்சயமாக நல்ல பேர் எடுத்துக்காட்டுறேன் பாட்டி...'' என்று உற்சாகமாக கூறினான் பன்னீர்.''அது போதும்பா...'' நிறைவோடு கூறினார் லட்சுமி.''வாங்க பாட்டி... மிதிவண்டியில வெச்சு ஓட்டிக்கிட்டு போறேன்...''''வேணாம்பா... நல்லா தெம்பாதான் இருக்கேன்... நடந்தே வர்றேன்...''சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர்; நிழல்களும் இணைந்து நடந்தன.அந்த நிழல்களை போல, அன்பு, நம்பிக்கை, உண்மை, உற்சாகமும் துள்ளல் நடையில் இணைந்தன. - முற்றும்.நெய்வேலி ராமன்ஜி

