தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மொட்டை!

மொட்டை!

மொட்டை!


PUBLISHED ON : நவ 25, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வகுப்பறையில் வினோத் நுழைந்ததும்தான் தாமதம். எல்லாரும் 'கொல்' என சிரித்தனர். அத்துடன், 'மொட்டை மொட்டை...' என கோரஸ் பாடினர்.

வினோத்திற்கு அழுகை அழுகையாய் வந்தது. யாரேனும் அருகில் வருவது தெரிந்தால், நோட்டுப் புத்தகத்தைத் தலைக்கும்மேல் பிடித்து மறைந்துக் கொள்ளப் பார்ப்பான். சில வேளைகளில் புத்தகப் பையையே கிருஷ்ண பரமாத்மா மலையைக் குடையாகக் பிடித்தது போல் பிடித்துப் பார்த்தான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. முடி முளைத்ததும் பள்ளிக்குப் போகிறேன் என அவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் வீட்டில் உள்ளவர்கள் கேட்பதாக இல்லை.

'யார் எதைச் சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் பள்ளிக்குப் போய் வா...! இது சாமி மொட்டை. பயப்படக்கூடாது...!' என்று கண்டித்து விட்டனர்.

அவனுக்கு அவமானமாகவும் இருந்தது. அழுகையாகவும் இருந்தது.

மூன்று நாள்களாகச் வினோத் என்ற பெயர் மறைந்து 'மொட்டை' என்ற பெயரே நிலைத்து விட்டது.

அப்படி அவனை அழைப்பதில் அந்த வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அலாதி மகிழ்ச்சி.

''அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடா. இது சாமி மொட்டைடா. சாமி உங்க கண்ணைக் குத்திடும்டா...!'' என்று, அவன் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிப் பார்த்த பிறகுதான் 'திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை' என்பது போல ஆசிரியரிடம் சொல்லி அழலாம் என்று முடிவெடுத்தான்.

ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்து, இருக்கையில் அமர்ந்ததும், வினோத் தன் இருக்கையிலிருந்து எழுந்து 'ஓவெ'னக் கதறி அழுதான்.

''ஏண்டா அழுகிறாய்? எதுவாக இருந்தாலும் சொல்!'' என்று சற்றுப் பரிவோடு கேட்டார், ஆசிரியர்.

''ஐயா!... என்னை எல்லாரும், 'மொட்டை, மொட்டை'ன்னு சொல்றாங்க. தலையிலே எச்சில் துப்புறாங்க. இவங்க பண்ற தொல்லை தாள முடியலை ஐயா...!'' அழுகையினூடே வார்த்தைகளை அள்ளிப் போட்டான்.

''ஐயையோ...! அப்படிச் சொல்வது தவறாயிற்றே! ஒருவரைப் பற்றிக் கேலி பேசுவது மிகக் கொடிய பழக்கமாயிற்றே! சரி வினோத்தை மொட்டை என அழைத்தவர்கள் யார் யார் எழுந்து நில்லுங்கள்,'' பிரம்பைக் கையால் வைத்துக் கொண்டு சொன்னார்.

ஒரு மாணவன் கூட எழுந்திருக்கவில்லை. எல்லாரும் பவ்வியமாக நல்ல பிள்ளையைப் போல அமைதியாக இருந்தனர்.

ஆசிரியர் சிறிது நேரம் அவகாசம் கொடுத்தார்.

''டேய் பசங்களா... உங்களுக்கு ஐந்து மணித்துளிகள் தருகிறேன். அதற்குள் யார் யார் அவனை மொட்டை எனச் சொன்னீர்களோ அவர்கள் எழுந்து நின்று விட வேண்டும்,'' என்று சொல்லி விட்டு அவர் மட்டும் நின்று கொண்டிருந்தார். வகுப்பறை நிசப்தமாக இருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர். யாரும் யாரையும் காட்டிக் கொடுத்து விடவும் இல்லை. எழுந்து நிற்கவில்லை.

ஆசிரியர் பொறுத்துப் பார்த்துவிட்டு, ''என்னடா வினோத்! ஒருவர் கூட எழவில்லை. நீ வேண்டுமானால் சொல். அவர்களைக் கூப்பிட்டுத் தண்டிக்கிறேன்,'' என்றார்.

''ஐயா...! ஒருவன் பாக்கி இல்லாமல் இந்த வகுப்பில் உள்ள அத்தனை பேருமே என்னைக் கேலி செய்தனர் ஐயா!'' என்றான்.

'சரி... போகட்டும் இனிமேல் வினோத் மொட்டை என யாருமே கேலி பேசக்கூடாது. அப்படிப் பேசினால் கடுமையான தண்டனை வழங்கப்படும்!'' எனக் கண்டிப்புடன் சொல்லிய அவர் மாணவர்களுக்கு வேண்டிய பல அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு மாணவன் அம்பைப் போல் விருட்டென எழுந்து, ''ஐயா... எனக்கொரு சந்தேகம். மொட்டை போடுவது எதற்காக...?'' என்று கேட்டான்.

இப்படியொரு கேள்வி கேட்டதும் நிசப்தமாக இருந்த வகுப்பறை கொல்லென்ற சிரிப்பொலியால் திக்குமுக்காடியது. மாணவர்கள் தலைகள் அனைத்தும் கேள்வி வந்த திசையை நோக்கித் திரும்பின. சந்துரு நின்று கொண்டிருந்தான்.

மற்றவர்களுக்கெல்லாம் மொட்டை போடுவதன் ரகசியம் தெரியும்போது நமக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டதே என்ற நாணம் அவனைக் கவ்வியிருந்து.

''இப்படித்தான் அறிவுள்ள மாணவர்கள் இருக்க வேண்டும்,'' என்றார் ஆசிரியர்.

ஆசிரியர் இப்படிச் சொன்னதும் சந்துருவுக்கு பெருமை பிடிபடவில்லை. சற்றுமுன் தலைகவிழ்ந்து நின்றிருந்த அவன் இப்போது கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வகுப்பறையை நோட்டம் விட்டான்.

''சாமிகிட்ட எனக்காக வேண்டிகிட்டு இந்த 'மொட்டை' போட்டனர்!'' என்றான் வினோத்.

''அதுதான் ஏன்னு கேட்கிறேன். வேறு எதையாவது வேண்டக் கூடாதா? 'மொட்டை' போடுறேன் என்று வேண்டுகிற பழக்கம் எப்படி வந்தது ஐயா?'' என்றான் சந்துரு.

ஆசிரியரே ஒரு கணம் திகைத்துப் போனார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று.

''ஐயா! நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். இந்த மொட்டைக் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்!'' என எழுந்தான் மூன்றாம் வரிசையில் அமர்ந்திருந்த பாலு.

''சரி...பாலு! நான் உட்பட இந்த வகுப்பில் உள்ள அனைவரும் நீ சொல்லும் விளக்கத்தைக் கேட்க ஆவலாய் உள்ளோம். கோவிலில் பக்தர்கள் மொட்டை போட்டுக் கொள்வது எதற்காக?''

''காரணம் ரொம்பச் சாதாரணமானதுதான் ஐயா?''

''அப்படியா சொல்கிறாய்? எங்கே சொல் பார்க்கலாம்!''

''எத்தனை மொட்டை போட்டாலும் முடி வளர்ந்து விடும் என்ற நம்பிக்கைதான். முடி வளராது என்று தெரிந்தால் ஒரு பயலும் மொட்டை போட்டுக் கொள்மாட்டான். இதுதான் ரகசியம்!'' என்று, 'டாண்' எனப் பதில் சொன்னான்.

வகுப்பறை மீண்டும் கேலிச் சிரிப்பில் மூழ்கியது. அதில் மொட்டை வினோத் சிரிப்பலையும் சேர்ந்து கொண்டது. அங்கே சிரிக்காமல் நின்றது ஆசிரியர் மட்டும்தான். அவர் உள்ளம் குழம்பிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழப்பத்திற்குக் காரணம் பாலு விட்டெறிந்த கல்தான் என்பதில் ஐயமில்லை.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us