PUBLISHED ON : நவ 25, 2011

ஜப்பான் நாட்டுப் படைத் தளபதி நொபுநாகா மிகவும் திறமையான புத்திசாலி.
ஒரு சமயம் அவர், எதிரியின் மீது படையெடுத்துச் சென்றார். எதிரியின் படைபலத்தைக் கண்ட இவரது படை வீரர்கள், நம்பிக்கை இழந்தனர். 'ஜெயிக்க முடியுமா?' என்ற சந்தேகம் வந்துவிட்டது. பயம் அவர்களைப் பீடித்துக் கொண்டது.
மெதுவாகத் தயங்கித் தயங்கி தளபதி நொபுநாகாவிடம் சென்று, ''நாம் ஜெயிக்க முடியுமா? எதிரியின் படைக்கு முன்பாக நாம் எம்மாத்திரம்?'' என்று கேட்டனர்.
நொபுநாகா யோசித்தார்.
இந்த நேரத்தில் நாம் என்ன சொல்லி தேற்றினாலும் இவர்களது பயம் போகாது என்பதை புரிந்து கொண்டார்.
பிறகு அவர்களைப் பார்த்து, ''சரி... அதை நாம் முடிவு செய்ய வேண்டாம். புத்தர் கோவிலுக்குப் போய் பூவா, தலையா போட்டுப் பார்ப்போம். தலை விழுந்தால் வெற்றி பெறுவோம்; பூ விழுந்தால் போர் வேண்டாம்; திரும்பி விடுவோம். சரியா?'' என்றார்.
எல்லாரும் ஒத்துக் கொண்டனர். கோவிலுக்குச் சென்றனர். ஒரு காசை எடுத்துச் சுண்டினார் நொபுநாகா. அனைவரும் ஆவலோடு குனிந்து பார்த்தனர். அங்கே தலை விழுந்திருந்தது.
எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி... ஆரவாரம்.
'வெற்றி பெறுவோம்' என்று புத்தரே சொல்லிவிட்டார். இனி என்ன கவலை என்ற நம்பிக்கையோடும், உறுதியோடும் போரிட்டனர்... வெற்றி பெற்றனர்.
வெற்றி விழா நடந்தது-
''நமது வெற்றியை புத்தர் நிர்ணயித்து விட்டான். அதனால், நாம் வெற்றி பெற்றோம்!'' என்று எல்லாரும் பெருமையாகப் பேசிக் கொண்டனர்.
அப்போது, தளபதி நொபுநாகா, மெல்லச் சிரித்துக் கொண்டே, தன் கையிலுள்ள நாணயத்தை அவர்களிடம் கொடுத்தார். எல்லாரும் ஆவலோடு வாங்கிப் பார்த்தனர்.
அந்த நாணயத்தில், இரண்டு பக்கமும் தலை தான் இருந்தது. அனைவருக்கும் ஆச்சரியம்.
''வெற்றியை நிர்ணயித்தது விதியல்ல; உங்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்த நம்பிக்கையும், மன உறுதியும்தான். தலை விழுந்ததும் ஜெயிப்போம் என்று நம்பினீர்கள், செயல்பட்டீர்கள், வென்றீர்கள்!'' என்றார் நொபுநாகா.
வாயடைத்து போயினர் மக்கள்.
***
