PUBLISHED ON : ஜூலை 24, 2015

ஹூம்... என்னமாய் என்னை தூக்கி எறிந்து பேசி விட்டாள். 'இவள் கலெக்டரின் அம்மாவானால் இவளுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கு!' என்றல்லவா சீறுகிறாள். அப்பப்பா... வார்த்தைகளில் நஞ்சைத் தோய்த்து வீசுவதில் இவளுக்கு நிகர் இவள் தான்... இவள் உடம்பில் ஓடுவது ரத்தமல்ல... ஆலகால விஷம்தான்.
அப்பப்பா! இந்த ராட்சஸி... (அவள்தான் என் எதிரி) மேல் நாட்டு மருமகள் என்ற பட்டத்துடன் இங்கு வந்து சேர்ந்த போது (இவளுக்கு சொந்த ஊர் ஆப்ரிக்கா) இவளைப் பார்க்க வந்த நம்ப ஊர் ஜனக்கூட்டம் ஐய்ய...ச்சே... சுதந்திரம் வந்து இவ்வளவு வருடங்களாகியும் நம் ஜனங்களுக்கு என்னவோ இன்னும் மேல்நாட்டு மோகம் தீரவே இல்லை.
என்னை ஒதுக்கி விட்டு இவளுடன் என் கணவர் அடித்த கொட்டம்... அம்மாடி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளலாம்.
ஆனால், என் சோகக் கதையை பிரசுரிக்க எந்த ஆசிரியர்தாம் முன் வருவார்? அதுவும் 'கலெக்டர்' பற்றிய சமாச்சாரம் என்றதும் ஆபீஸிற்குள்ளேயே அனுமதிப்பாரோ என்னவோ?
அச்சம்... நாணம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் இந்த வெளிநாட்டு மோகினி போட்ட ஆட்டங்கள் கொஞ்சமா என்ன? அவளை பற்றி பேசினாலே எனக்கு கோபம், கோபமாக வருது.
திடீரென்று அந்த வெளிநாட்டுக்காரிக்கு உடம்பு சுகமில்லையாம்... டாக்டர்கள் வருவதும் போவதுமாய், ஊசிகள் போடுவதுமாய் ஒரே அமர்க்களம். விஷயம் என்ன தெரியுமா?
இந்த வெளிநாட்டுக்காரிக்கு இந்த, 'க்ளைமேட்' ஒத்துக் கொள்ளவில்லையாம்! இவள் என்னவோ வண்டி வண்டியாய் வேலை செய்து குப்பை கொட்டுபவளைப் போல், இவளுக்கு, 'கம்ப்ளீட் ரெஸ்ட்' தேவை என்று டாக்டர்களும் முழுநீள சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு, அவளை தனி அறையில் அடைத்து விட்டனர்.
உடனே என் கணவர் அவளிடம் செல்வதை நிறுத்தி விட்டு, என்னிடம் அன்பாக நடந்து கொண்டார். முதலில் நான் அவரிடம் கோபமாக நடந்து கொண்டாலும், பிறகு நானும் அவரிடம் அன்பாக நடந்து கொண்டேன்.
ஓ! அன்று காலை... எனக்கு திடீரென்று என்ன ஆகிவிட்டதென்று புரியவில்லை. அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டேன். கண் விழித்த போது சோகம் கப்பிய முகத்துடன் என் கணவர், என் அருகே நின்றிருந்தார்.
என்னை பரிசோதிக்க வந்த டாக்டர், முகத் தில் புன்னகை தவழ என்னை மிக அன்போடு தட்டிக் கொடுத்து விட்டு அவர் பக்கம் திரும்பி, ''கன்கிராட்ஸ் மை டியர் பாய்... யூ ஆர் கோயிங் டு பிகம் எ பாதர்... நத்திங் டு ஒர்ரி,'' என்று இவர் முதுகிலும் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
விஷயம் கேள்விப்பட்ட அந்த மேல் நாட்டுக்காரி, பொறாமையால் வெந்து மருக... அதை துளியும் கண்டு கொள்ளாமல்... இவர் என்னை விட்டு நிமிடமும் அகலாமல் இருந்தார்.
அப்பப்பா... இத்தனை வருடங்களுக்கு பிறகு என் கனவு பலித்து விட்டது. நான் ஒரு மிக அழகிய பெண் குழந்தைக்கு தாயாகி விட்டேன். என் கண்மணி, 'சரிகா' பிறந்த அன்று இவளைப் பார்க்க ஜே...ஜே என்று எவ்வளவு கூட்டம் தெரியமா? இவளும் தன் சின்னக் கண்களைத் திறந்து எல்லாரையும் கொட்டக் கொட்ட பார்த்துக் கொண்டே இருந்தாள்... பிறந்த குழந்தைக்கு கொஞ்சமாவது பயம் வேண்டாமா? அவள் அப்பாவைப் போல் ரொம்பவும் துணிச்சல்காரியாக இருப்பாள் போலிருக்கு!
இன்று காலை நம் ஜனாதிபதி கூட தன் குடும்பத்தாருடன் எங்களை பார்க்க வந்திருந்தார்... எங்களுடன் சேர்ந்து போட்டோ கூட எடுத்துக் கொண்டார்.
எங்கள் zoo சூப்ரெண்டெண்ட் சிவானந்த் ஷெய்கல், ''யுவர் எக்ஸலென்ஸி! இந்த 'சரிகா!' பிறந்த பின் எங்கள் பணப் பிரச்சனையெல்லாம் தீர்ந்து விட்டது. நாங்கள் இந்த zoo வின் நுழைவுக் கட்டணத்தை இவள் பிறந்த பின் ஐந்து ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்திய பின்னரும் கூட இவளைப் பார்க்க வரும் கூட்டத்திற்கு அளவே இல்லை. ஓ! இந்த சரிகா தான் எங்களின் பிக்கஸ்ட் மணி கலெக்டர்,'' என்றார்.
''ஓ! அப்படியானால் இவளுக்கு, 'கலெக்டர் சரிகா' என்றே பெயர் சூட்டி விடுங்கள்!'' என்றார் நம் ஜனாதிபதி... எத்தனை பொருத்தமான பெயர்.
ஆமாம்... பொறாமை பேய் பிடித்து அலைகிறாளே இந்த மேல்நாட்டுக்காரி... இவளைப் போல் என் நெற்றியில் இரண்டு கொம்புகள் விகாரமாக நீட்டிக் கொண்டிருக்கவில்லை. ஆனால், அழகாக, அளவாக ஒரே ஒரு கொம்பு இருப்பதால், இவளின் அகந்தை நிரம்பிய கண்களுக்கு அது தெரியவில்லை போலும்... அதனாலதான் ஒரே போடாகப் போடுகிறாள், அட... இவள் ஒரு கலெக்டரின் அம்மா என்பதால் இவளுக்கு இரண்டு கொம்பா முளைத்திருக்கிறது?' என்று... போனால் போகட்டும் விட்டுத் தள்ளுங்கள்.
ஆப்பிரிக்க காண்டாமிருகத்தின் நெற்றியில் இரண்டு கொம்புகள் பெரிதாக நீட்டிக் கொண்டிருக்கும். இந்திய காண்டாமிருகத்தின் நெற்றியில் ஒரே ஒரு கொம்புதான்... அதுவும் கூட அளவாக, அழகாக, சின்னதாக இருக்கும் என்ற விவரம் எல்.கே.ஜியில் படிக்கும் சின்னக்குழந்தைக்கு கூடத்தெரியும். ஆனால், இந்த அகந்தைக்காரிக்கு தெரியவில்லை என்றால் என் நெற்றியில் கொம்பு இல்லை என்று ஆகிவிடுமா என்ன?
***
