
காட்டில் இருந்த மலைப்பாறையில் கூடுகட்டி வசித்தது கழுகு. இறைவனைக் கண்மூடித்தனமாக நம்பியது; அடிக்கடி பாறையில் அமர்ந்து தியானம் செய்தது. திடீரென, 'நான் தியானிப்பது, இறைவனுக்கு தெரியுமா' என்ற சந்தேகம் கொண்டது. பின், 'இறைவனுக்கு எல்லாம் தெரியும்' என, சமாதானம் கொண்டது.
அன்று அதிகாலை கண் விழித்ததும், 'இன்று உணவு கிடைக்குமா... இறைவன் தான் எல்லாருக்கும் படியளப்பவன் ஆயிற்றே' என எண்ணியடி பறந்தது. பின் தியானம் செய்யும் பாறையில் அமர்ந்து, 'இறைவா... எனக்கு உணவு கிடைக்குமா...' என கூவியது.
விண்ணிலிருந்து, 'உனக்கு இன்றும் உணவு உண்டு...' என்று பதில் வரவே, மகிழ்ந்தது. பின், 'இன்று இரைத்தேடி அலைய வேண்டிய வேலை இல்லை; இறைவன் அருளால் எப்படியும் உணவு கிடைத்து விடும்' என எண்ணியபடி அமர்ந்திருந்தது.
நேரம் கடந்து கொண்டிருந்தது.
கழுகுக்கு நன்றாக பசித்தது. ஆனாலும், கண்களை திறக்காமல், தவத்தில் அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று.
மாலையும் போய் இரவு வந்தது. உணவு கிடைக்கவில்லை.
மிகவும் வருந்தியபடி, 'இறைவன் ஏமாற்றிவிட்டாரே' என, கூட்டுக்கு புறப்பட தயாரானது.
அப்போது ஒரு குரல் கேட்டது.
'குழந்தாய் சாப்பிட்டாயா...'
கழுகுக்கு அழுகை வந்து விட்டது. குரல் வந்த திசையை பார்த்தது.
'சற்று திரும்பி பார்; உனக்கான உணவு, உன் அருகிலே இருக்கிறது...'
சுற்றும் முற்றும் பார்த்தது கழுகு.
பெரிய எலி உடல் ஒன்று பக்கத்தில் கிடந்தது.
மகிழ்ச்சியுடன், 'இறைவா... காலம் தாழ்த்தி கொடுத்தாயே...' என்றது கழுகு.
'உரிய நேரத்தில் உணவு அங்கு இருந்தது... நீ தான் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்தினாய். முயற்சி செய்யாமல் எப்படி உணவு கிடைக்கும்; உழைக்காமல் எப்போதும் உண்ண கூடாது...'
- அறிவூட்டி மறைந்தார் இறைவன். அறிவு பெற்றது கழுகு. அன்று முதல், உழைப்பையே தியானமாக கொண்டது.
செல்லங்களே... உழைப்பவரை வறுமை அண்டாது; முயற்சி திருவினையாக்கும்.
எம்.முருகன்