
அன்புள்ள ஆன்டி...
நான், 10 வயது சிறுவன்; 5ம் வகுப்பு படிக்கிறேன். எப்போது சாப்பிட்டாலும், சோற்று பருக்கைகளை, தட்டை சுற்றி சிந்தி விடுவேன். சாப்பாடு பிடிக்கவில்லை என்றால், பாதி சாப்பாட்டை தட்டிலேயே வைத்து, கையை கழுவி விடுவேன்.
ஓட்டலில் சாப்பிட்டாலும், ஸ்டைலுக்காக சிறிது சாப்பாட்டை இலையில் மீதம் வைத்து விடுவேன். திருமண வீடுகளில் சாப்பிடும் போதும், இதே கதை தான்.
என் அம்மாவோ, 'அன்னலட்சுமியை வீணடிக்காதே... இப்படியே இருந்தேன்னா, பின்னாளில் சாப்பாடு கிடைக்காது... பிச்சை தான் எடுப்பாய்...' என சபிக்கிறார்.
ஒரு ஐந்து கிராம் சாப்பாட்டை வீண் செய்றது தலை போற விஷயமா... நீங்களே சொல்லுங்க ஆன்டி!
இப்படிக்கு,
க.விக்னேஷ்.
அன்பு மகனே...
உலகிலேயே, ஐரோப்பிய நாடான பிரான்சில் தான், உணவு விரயம் மிக மிக குறைவு. காரணம், அங்கு பூஜ்யம் உணவு விரயக் கொள்கையையும், நிலையான விவசாய கொள்கையையும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தையும் முழுமையாக பின்பற்றுகின்றனர்.
நம் நாட்டில், 10 கோடி பேர் தினமும் இருவேளை பட்டினி கிடக்கின்றனர். இறைவன் அருளால், நமக்கு மூன்று வேளையும் உணவு கிடைத்து விடுகிறது. கிடைக்கும் உணவை வீணடித்து அலட்சியப்படுத்தலாமா...
ஒவ்வொரு அரிசியிலும், உண்பவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாக நம் நாட்டில் நம்பிக்கை நிலவுகிறது. நம் பெயர் பொறித்த சோற்று பருக்கையை வீணாக்குவது முறை தானா...
உலகில், உண்ணாமல் வீணாக கொட்டப்படும் உணவு பொருட்கள் அழுகி வெளியிடும் கார்பன் மாசு, 3.9 கோடி வாகனங்கள் வெளிப்படுத்தும் புகை மாசுக்கு சமமானது.
உணவு விரயமாகாமலிருக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்...
* அன்றாடம் மீதமாகும் உணவை, காற்றுப்புகாத பாத்திரங்களில் அடைத்து மறுநாள் பயன்படுத்தலாம்
* பருப்பையும், காய்கறிகளையும் அன்றாடம் சாப்பிட்டு, அரிசியை மிச்சப்படுத்தலாம்
* உபரி உணவை பிறருடன் பகிரலாம்
* மீந்த உணவுகளை, இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தலாம்
* அன்றாடம் தேவையான அளவில் மட்டும் உணவு வாங்கலாம்
* திருமணங்களில், மிஞ்சிய உணவுகளை, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுக்கலாம்
* குளிர்சாதன பெட்டியை, உணவை பாதுகாக்க பயன்படுத்தலாம்
* காலாவதி தேதி பார்த்து, உணவை வாங்கி பயன்படுத்தலாம்
* மீந்த உணவுகளிலிருந்து தயாரிக்கும், 'அப்சைக்கிள்டு' உணவை, தவறாமல் சாப்பிடலாம்.
'அப்சைக்கிள்டு' உணவு என்றால், மிஞ்சிய இட்லியை, உப்புமா செய்து சாப்பிடுவதாகும். சீவிய காரட் தோலில், சூப் தயாரித்து குடிக்கலாம்; வாழைப்பழ தோல்களில், சாக்லெட் செய்து தின்னலாம்; உருளைக்கிழங்கு தோலை வறுத்து சாப்பிடலாம்.
ஆரஞ்சு தோலில், எண்ணெய் ஊற்றி, மெழுகுவர்த்தி செய்யலாம். முட்டை தோலை நொறுக்கி, பூஞ்செடிகளுக்கு உரமாய் போடலாம். ஆரஞ்சு தோலையும், வினிகரையும் கொண்டு, வீட்டை சுத்தம் செய்யும் திரவம் தயாரிக்கலாம்.
உன் அம்மா சொல்படி கேள். உணவை வீண் செய்யாதே... பந்தாவுக்காக, உணவை இலையில் மீதம் வைக்காதே!
- அன்புடன், பிளாரன்ஸ்