PUBLISHED ON : ஜூன் 19, 2015

சென்றவாரம்: தளபதியின் ஒற்றர்களிடம் சிக்கிய வாண்டுவின் அம்மாவை மீட்ட சின்ன தம்பி, தன் அம்மா மற்றும் வாண்டுவுடன் ஓர் அடர்ந்த காட்டில் தஞ்சமடைந்தான். இனி-
''அய்யோ பெரியம்மா நாம் இந்த பைத்தியத்திடம் சிக்க போகிறோம்!'' என்று வாண்டு பயந்தான்.
''பேசாமல் இரு. மனிதர்களில் இவன் உயர் ரகம்தான் சமாளிப்போம்!''
அதற்குள் அவன் வந்து விட்டான்.
''அம்மணி அருமையாக பேசினீர்கள். அதனால்தான் என்னவோ நான் எப்போதும் இந்த மலைக்காட்டிலேயே வசித்து வருகிறேன். மதி கெட்ட மனிதர்களை விட மிருகங்கள் எவ்வளவோ மேல்தான் அம்மணி!''
''அய்யா நீங்கள்...!'' மீனாட்சி இழுத்தாள்.
''நான் ஒரு பரதேசி. ஏன் பைத்தியம் என்று கூட நாட்டில் நான் வாழ்த்திருந் தால் சொல்லியிருப்பார்கள்!''
''ஓ. அப்படி என்றால் நீங்கள் பைத்தியமும் இல்லை. சாதாரண மனிதரும் இல்லை. பெரும் மனிதர். ஆம்! சந்தேகமே இல்லை நீங்கள் மாமனிதர். இப்போது எங்களுக்கு தேவை உங்கள் உதவிதான்!'' என்றாள் மீனாட்சி.
''அம்மா இந்த மலைக்காட்டில் நான் என்ன உதவி செய்ய முடியும். அதுவும் இரண்டு பெண்களும், இரண்டு சிறுவர்களும் வந்திருக் கிறீர்கள். இது எவ்வளவு கடினமாக இடம் தெரியுமா?''
''அய்யா. இப்போது எங்களுக்கு இடம் முக்கியம் இல்லை. எங்களின் குறிக்கோள் நிறைவேற வேண்டும்!''
''என்ன குறிக்கோள்?''
''அய்யா நம் மன்னர் மிகவும் நேர்மை யானவர்; சுத்த வீரர். அவருக்கு கள்ளம் கபடம் தெரியாது. ஆனால், அவருக்கு எதிராக பயங்கர சூழ்ச்சி நடக்கிறது. அதில் முக்கிய பங்கு வகிப்பவன் தேசத்துரோகி தளபதி. அவனிடம் கைதேர்ந்த பல உளவாளிகளும், ஒற்றர்களும் இருக்கின்றனர். அமைச்சரை முக்கிய பணி நிமித்தம் பார்த்து விட்டு வந்த என் மகனையே வேவு பார்த்து தளபதியிடம் அழைத்து சென்று அவனை கொல்லும் நோக்கத்துடன் கங்கையில் வீசி எறிந்து விட்டனர்.
''நல்ல வேளையாக இந்த வாண்டு பயல் உதவியால் அவன் தப்பித்து விட்டான்.
''தளபதிக்கு மேலை நாட்டிலும் ஆதரவு உள்ளது என்பதை இப்போது தெரிந்து கொண்டோம். மேலை நாட்டு வீரர்களில் ஒருவனாக தளபதியின் உளவாளியே வந்துள்ளான். என் கணவரையும், என் தங்கை கணவரையும் பிடித்து கங்கையில் வீச அந்த மேலை நாட்டு ராஜதந்திரி போட்ட திட்டத்தை முறியடித்து அவர்கள் வந்த ஒரு கப்பலையும் தீயிட்டு கொளுத்தி மற்றொரு கப்பலில் இரு வரும் முக்கிய உளவாளிகளாக வேவு பார்க்க இப்போது மேலை நாடு சென்றுள்ளனர். ஆனால், அவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
''என் தங்கை மற்றும் அவள் மகன் வாண்டுவை என் பராமரிப்பில் வைத்து பார்த்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுத்தான் என் கணவர் சென்றுள்ளார். அப்படி அவளை அழைத்து வர சென்ற போதுதான் மேலை நாட்டு வீரர்கள் இல்லை... இல்லை நம் நாட்டு துரோகி ஒருவன் உன் வீட்டுக்காரர் எங்கே? என்று கேட்டு அவளை அடித்து துன்புறுத்தி னான். ஆனால், என் மகன் சின்னதம்பியின் சாதுரியமான பேச்சாலும், செயலாலும் தாங்கள் தப்பியதுடன் என் தங்கச்சியையும் அழைத்து வந்து விட்டோம். இப்போது நாங்கள் ஏன் வந்தோம் என்ற விவரம் உங்களுக்கு முழுவதும் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.
''இனி எங்கள் அடுத்த பணி உடனடியாக நம் அமைச்சரை சந்திக்க வேண்டும். அய்யனார் கட்டடத்தில் இருக்கும் வீரர்களை தற்போது நாங்கள் தளபதியின் உளவாளி என்ற கோணத் தில் நம்ப வைத்து, அவர்களை எங்கும் போகாமல் அங்கேயே தங்கி இருக்கும்படி செய்துவிட்டு வந்துள்ளோம். அதன் பொருட்டு தளபதியின் ஒற்றன் குணாளன் பெயரை குறிப்பிட்டு தப்பித்து வந்து விட்டோம். இனி எங்களுக்கு தளபதியாலோ இல்லை குணாளனாலோ எப்போது வேண்டு மானாலும் ஆபத்து வரலாம். அதனால் எங்கள் குறிக் கோள் நிறைவேற தாங்கள் தான் உதவ வேண்டும் அய்யா...'' மீனாட்சி தழுதழுக்கும் குரலில் கூறி அவர் பாதங்களில் விழுந்தாள்.
''சரி! இப்போது என் குடிசைக்கு வாருங் கள். முதலில் கொஞ்சம் பசியாறி பின் ஓய்வு எடுத்துவிட்டு, மற்றவைகளை யோசிக்க லாம்!'' பெரியவர் கம்பீரமாக நடக்கலானார்.
மற்றவர்களும் அவரை பின் தொடர்ந்தனர்.
''அய்யா தாங்கள் தனியாக எப்படி இருக்கிறீர்கள்?'' சின்னதம்பி கேட்டான்.
''தனியாகவா? யார் சொன்னது? எனக்கும் ஒரு ராஜ நண்பர் இருக்கிறாரே!''
''ராஜ நண்பரா..!''ஆச்சரியத்துடன் கேட்டான் வாண்டு.
''வாருங்கள். பின் நீங்களே பாருங்கள்!'' என்ற பெரியவர் அவர்களை தன் குடிசைக்கு அழைத்து வந்தார்.
மலையின் உயரத்தில் பல அடர்ந்த மரங்களுக்கு இடையில் உச்சி வெயிலிலும் காரிருள் சூழ்ந்தார் போல் இருள் நிறைந்த பகுதியில் உள்ள சின்ன குடிசையை கண்டதும் அனைவரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
'இவர் யாராக இருக்கும். இந்த இடத்தில் ஒரு மனிதர் தனிமையில் வாழ்கிறார் என்றால் இவர் சாதாரண மனிதராக இருக்க முடியாது. அமானுஷ்ய மனிதராகத்தான் இருக்க முடியும். இல்லை ஒருவேளை இவர் மனிதர் களை கொன்று புசிக்கும் அரக்கராக இருப் பாரோ. அல்லது மனிதர்களை காளிக்கு பலியிடும் மந்திரவாதியாக இருப்பாரோ. ஒரு வேளை இவர் தளபதியின் ஆளாகக்கூட இருப்பாரோ. நிறைய பேசிவிட்டோமே. நாம் அசட்டுதுணிவுடன் வந்து விட்டோம். நமக்கு ஒன்று என்றால் பரவாயில்லை. என் தங்கச்சி யையும், வாண்டுவையும் அல்லவா அழைத்து வந்து விட்டேன்!' மீனாட்சிக்கு உதறல் எடுத்தது. அச்சத்தால், அந்த உச்சியின் குளிர்ந்த சீதோஷ்ண நிலையிலும் அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
''அம்மா மீனாட்சி ஏன் முகமெல்லாம் இப்படி வியர்க்கிறது?'' பெரியவர் புன் முறுவலுடன் கேட்டார்.
''அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க!'' மீனாட்சி மழுப்பினாள்.
''எப்படியோ உங்கள் அச்சம் தீர்ந்தால் அதுவே எனக்கும் நல்லது!'' என்ற பெரியவர் அனைவருக்கும் பருக தேன் கொடுத்தார்.
சின்ன தம்பி அந்த குடிசையை சுற்றி நோட்டம் விட்டான். பிறகு பெரியவரை ஒரு சந்தேகத்துடன் பார்த்தான்.
தம்பி இந்த பெரியவர் ஒரு ராஜ நண்பர் இருக்கிறார் என்று சொன்னாரே. அவர் எப்படி இங்கு இருக்க முடியும். அப்படி என்றால் இந்த பெரியவர் பொய்யானவரோ என்று நினைக்கிறாய் அல்லவா? இதோ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்றவர் கைகளை தட்டி 'அடே மந்தி ராஜா' என்று குரல் கொடுத்தார். அவ்வளவுதான் ஆறடி உயரத்திற்கு பெரும் குரங்கு ஒன்று ஒரே தாவலில் குடிசைக்குள் நுழைந்தது.
அதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கினர்.
''ராஜா உன்னைக் கண்டு அனைவரும் அச்சப்படுகின்றனர். அவர்களுக்கு பழங்கள் கொடுத்து உன் நட்பை காட்டு. அவர்கள் இப்போது என் விருந்தினர்கள். அதுவும் இல்லாது இந்த விஜயபுரியின் விடியல்கள்!'' என்றார் பெரியவர்.
அவ்வளவுதான் மந்தி ராஜா பாய்ந்து சென்றது. சற்று நாழியில் குடிசை வாசலில் ஒரே சலசலப்பு. பெரும் மந்தி கூட்டம் கையில் வாழை, மாம்பழம், அன்னாசிப் பழம் என்று ஏகப்பட்ட பழங்களுடன் காத்து நிற்க, ராஜா மந்தி ஒவ்வொரு குரங்கிடமும் இருந்து பழங்களை பெற்று அந்த குடிசை முழுவதும் நிரப்பியது. அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். பெரியவர் புன் முறுவல் பூத்தார்.
மந்தி ராஜா நால்வருக்கும் பழங்களை கொடுத்து அசத்தியது. அந்த பசி நேரத்தில் பழங்கள் அவர்களுக்கு தேவாமிர்தமாக இருந்தது. பார்த்து, பார்த்து அவர்களுக்கு பழங்கள் கொடுத்து அசத்தியது மந்திராஜா. அனைவரும் பெரும் குதூகலத்துடன் இருக்க, அவர்களை கண்டு பெரியவர் ஆனந்த சிரிப்பில் திளைக்க, அதே சமயம் பெரியவரின் குடிசைக் கதவை ஒரு இரும்புக் கரம் வேகமாக மூடியது.
- தொடரும்...
- பூரணி
