தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷம் (35)

பொக்கிஷம் (35)

பொக்கிஷம் (35)


PUBLISHED ON : டிச 11, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: குணாளன், தளபதியிடம் சுரங்கப்பாதை குறுக்கு வழியாக பொக்கிஷ செல்வத்தை எடுத்துச்செல்வது குறித்து ஆலோசித்தான். இனி-

''ஆம்! நீ சொல்வதும் உண்மைதான். ஒன்று செய்யலாமே... அந்த மயன் பெரியவரிடமே அதற்கான உபாயத்தையும் கேட்டு விடுவோமே!''

''தளபதியாரே! ஒவ்வொரு பொக்கிஷ மாளிகையும் சிறிது நாழிகை மட்டுமே நம்மை அனுமதிக்கும். அவர் வேறு எந்த உதவியும் செய்ய மாட்டார். வேண்டுமானால், சுரங்கபாதை வழியாக அள்ளிச் செல்வதற்கு அனுமதி உண்டா என்று மட்டும் கேட்போம்,'' என்றான் குணாளன்.

''முடியாது அற்ப மானிடர்களே... அது கனவிலும் நிகழாது. இந்த பொக்கிஷ ரகசியம் அந்த நாட்டின் மன்னனுக்கு மட்டும் தெரியும் அல்லது தெரிவிக்கப்படும் ரகசியம் ஆகும். மற்றவர்களுக்கு அல்ல!''

''பெரியவர் மயன் அவர்களே... இப்போது தளபதிதான் விஜயபுரியின் மாமன்னர்,'' என்றான் குணாளன்.

தளபதியும் பெருமையுடன், ''ஆம்... ஆம்... நான் தான் மன்னன்,'' என்றான்.

''ஏற்க முடியாது. ஒரு கழுதை தன்னை குதிரை என்று சொன்னால் மற்றவர்கள் ஏற்பார்களா? அதுபோல் தான் உன் நிலையும்!''

''அய்யோ பெரியவரே. நான்தான் மன்னன். இந்த நாட்டின் மன்னன் தன் ஆயுளை கணக்கிட்டபடி பாழும் கொடிய பாதாள சிறையில் இருக்கிறான். அதனால், நானே என்னை மன்னனாக ஏற்று செயல்பட்டு வருகிறேன்!''

'ஹா...ஹா...' மயன் அந்த மலையே அதிரும்படி சிரித்தார்.

''முட்டாள் மானிடர்களே... நீங்கள் உங்கள் கீழ்செயலால் மக்களை ஏமாற்றலாம் அல்லது வீரர்களை ஏமாற்றலாம். ஆனால், எங்களை போன்ற மயன்களை ஏமாற்ற முடியாது. காரணம், எந்த மன்னர் இந்த நாட்டின் மன்னராக முடிசூட்டிக்கொண்டாலும் யாரும் அறியாதபடி முதலில் இந்த பொக்கிஷ காவலர்களான மயன்கள்தான் அட்சதையையும், மலர்களையும் தூவுவர். அந்த மாதிரி நான் விக்கிரம சிங்கனுக்கு பிறகு யாரையும் ஆசிர்வதிக்கவில்லை. எனவே, ஏமாற்றும் செயலை விடுத்து உடனே இந்த மாணிக்க கற்களை எடுத்து செல்ல முயலுங்கள். காரணம், இந்த பொக்கிஷ கட்டடம் மூடும் நாழிகை வந்து விட்டது,'' என்றார் மயன் சற்று கோபமாகவே.

செய்வதறியாது தவித்த தளபதியும், குணாளனும் உடனே நல்லானை அழைத்தனர்.

''சொல்லுங்கள் தலைவா!'' என்று கைகட்டி நின்றான் நல்லான்.

''நாங்கள் செல்லும் அடுத்த மாளிகைக்கு நீ வரவேண்டாம். அதேசமயம் இங்கு சுரங்க வழி எங்கிருக்கிறது என்று பார்த்து வை. நாங்கள் எப்படியும் மீண்டும் இங்கு வருவோம். அப்போது இங்கு இருக்கும் எல்லா மாணிக்க கற்களையும் அந்த சுரங்கத்தின் வழியாக எடுத்து செல்ல வசதியாக இருக்கும். இது என் கட்டளை,'' என்று குணாளன் கூறவும், தளபதியும் அதை ஆமோதித்தான்.

உடனே மற்ற வீரர்கள் இருக்கும் இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாணிக்க கற்களை எடுத்து மூட்டை கட்டி காத்து நிற்க, குணாளனும், தளபதியும் அடுத்த பொக்கிஷ மாளிகை செல்ல தயாராகினர்.

''என்ன சிறுவர்களே! உங்களுக்கு இந்த முத்துக்குவியலும், பொக்கிஷம் இல்லையா?'' மயன் கேட்டார்.

''இல்லை... இல்லை இவை யாவும் எங்களுக்கு பொக்கிஷமே இல்லை,'' என்றனர் சிறுவர்கள் ஒருமித்த குரலில்.

''சரி பொக்கிஷ மலையின் அடுத்த கட்டம் வாருங்கள்,'' என்று மயன் கூறவும், முத்துக் கதவுகள் மூடிக்கொண்டன. அதே சமயம், அழகு கொஞ்சும் கோமேதகக்கதவுகள் திறந்து கொண்டன.

ஆனால், சிறுவர்கள் இவையெல்லாம் பொக்கிஷம் இல்லை என்று மறுத்தே சொல்ல அவர்களுக்கு மரகதம், நீலம், பவளம், வைடூரியம் மற்றும் அரியவகை நாகரத்தினம் இருக்கும் பொக்கிஷ கட்டங்களும் காட்டப் பட்டன. சின்னதம்பி அவ்வளவையும் பொக்கிஷம் இல்லை என்று மறுத்து வர மற்ற சிறுவர்களும் அதை ஆமோதிக்க இப்போது மயன் பேசினார்.

''என் அருமை சிறுவர்களே! இப்போது நீங்கள் செல்ல இருக்கும் இடம்தான் இந்த பொக்கிஷ மலையின் கடைசி அதிசயம். காணக்கிடைக்காத கண்களை பறிக்கும் மனதை மகிழ்விக்கும் அதே சமயம், விலைமதிப்பற்ற அத்தனை பொக்கிஷங்களையும் நீங்கள் பொக்கிஷம் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் கடைசியாக ஒன்று கூறுகிறேன். கடைசி கட்டத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று எனக்கு தெரியாது. அதையும் பார்த்து விடுவோம். இந்த விஜயபுரியின் மயன்களால் உருவாக்கப்பட்ட இந்த மாணிக்க மலையின் அதிசய பொக்கிஷங்களை பொக்கிஷம் அல்ல என்று நிராகரித்து அதை விட ஏதோ ஒன்று இன்னும் இங்கு இருப்பதாக நினைத்து வர இருக்கும் என் இனிய சிறுவர்களே உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இப்பவும் கூறுகிறேன். கடைசி பொக்கிஷத்திலும் ஒன்றும் இல்லாவிடில் உங்களுக்கு எதுவுமே கிடைக்காமல் போய்விடும். அதனால் இந்த உயர்ந்த தெய்வ லோகக்கன்னியர் மட்டுமே அணியும் நாகரத்தின கற்களையாவது எடுத்துச் செல்லுங்கள். பிறகு உங்கள் இஷ்டத்துக்கே விட்டு விடுகிறேன்,'' என்று கூறி பேச்சை நிறுத்தினார் பெரியவர் மயன்.

''அய்யா எங்களுக்கு நாழிகை ஆகிறது. நாங்கள் பார்த்த அத்தனை பொருட்களும் இந்த உலகில் இருப்பவை தான். விலை மதிப்பற்ற அவைகளை நாங்கள் பொக்கிஷங்களாக ஏற்கவில்லை. காரணம், எங்களை பொறுத்த மட்டில் அவை வெறும் கற்களும், கட்டிகளும் தான். அரசு கஜானாவில் இருக்க வேண்டியவைகளை ஏன் இப்படி ஒரு அருமையான மலை உருவாக்கி அதை குடைந்து அத்தனை விலை மதிப்பற்ற தங்க, வைர, வைடூரிய, மரகத, மாணிக்க, முத்து மற்றும் நாகரத்தினக்கற்களை மறைத்து அதை பாதுகாக்க மயன்களும் உதவவேண்டும்.

''இந்த உலகத்தில் ஒரு அரிய பொக்கிஷம் இருக்கிறது. அதுதான் உண்மை. அதை இதுவரை யார் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் உங்கள் வாயிலாக அறிய ஆசைப்படுகிறோம். அதனால் கடைசி கட்டத்துக்கு வருகிறோம். அங்காவது நாங்கள் விரும்பும் பொக்கிஷம் கிடைக்குமா என்று பார்க்கிறோம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை. நம் நாட்டை காக்க உடனே செல்கிறோம்,'' என்றான் சின்னதம்பி.

''ஹா... இதுவல்லவோ சிறுவர்கள் மனது. ஆனால், உங்களுக்கு பின்னால் வரும் இந்த நாட்டின் தளபதியும், அவன் உளவாளி குணாளனும் மற்றும் பல வீரர்களும் சாக்கு மூட்டைகளை நிரப்பியவாறு தூக்க முடியாமல் சில வீரர்களுடன் வருகிறார்கள். பல வீரர்களை ஒவ்வொரு கட்டத்திலும் நிறுத்தி அங்குள்ள சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளான் அந்த குணாளன். அவர்களுக்குத்தான் இந்த பொருள்கள் மீது எவ்வளவு பற்று. இதுதான் பேராசைக் காரர்களின் புத்தி. சரி கடைசி கட்டத்தை திறக்கலாமா?''

''திறக்கலாம். திறக்கலாம். இதில் எந்த மாறுதலும் இல்லை,'' என்றனர் சிறுவர்கள்.

''நல்லது. ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும். இந்த அரும்பெரும் பொக்கிஷ மலையின் ரகசியம் காண வந்திருக்கும் சிறுவர்களே... நீங்கள் கதவு திறந்தவுடன் கண்களை இறுக மூடிக்கொள்ள வேண்டும். நான் திற,'' என்று சொல்லும் போதுதான் திறக்க வேண்டும் சரியா?

''ஓ! அப்படியே செய்கிறோம்!'' என்றனர் சிறுவர்கள்.

கதவு திறந்தது. அனைவரும் கண்களை இறுக மூடியபடி உள்ளே பிரவேசித்தனர். அனைவரும் உள்ளே நுழைந்ததும் பெரியவர் கண்களை திறக்கலாம் என்றார்.

அனைவரும் கண்களை திறந்தனர். என்ன ஆச்சரியம். அந்த இடமே கடும் இருட்டாக காணப்பட்டது. ஒருவரை ஒருவர் பார்க்கக் கூட முடியவில்லை. என்ன இது புரியாத புதிராக அல்லவா இருக்கிறது. சின்னதம்பி மனதில் நினைக்கவும் பெரியவர் பேசினார்.

''பொக்கிஷத்தின் ரகசியம் காணவந்திருக்கும் சிறுவர்களே. சற்று நாழிகை வேடிக்கை பாருங்கள். பிறகு நான் கண்களை மூடுங்கள் என்று சொன்னதும் நீங்கள் கண்களை மூட வேண்டும். திற என்றதும் தான் திறக்க வேண்டும்... இதுதான் ரகசியத்தை கடைசி நிலை நீங்கள் தயாரா?''

''தயார்!'' என்று சிறுவர்கள் கூறவும், இப்போது அந்த இடத்தில் மெல்ல, மெல்ல சூரிய ஒளிபரவியது. இருள் மறைய ஆரம்பித்தது. அவர்கள் இருந்த இடத்தை முழுதும் நோக்கினார்கள். சுற்றிலும் எங்கு நோக்கினும் பெரும் கருப்பு திரைச்சீலைகள் சுவற்றை மூடியிருந்தன.

''உடனே, கண்களை மூடுங்கள்!'' என்றார் பெரியவர்.

அனைவரும் கண்களை மூடினர். பெரியவர் உரத்த குரலில், திறக்கலாம் என்றதும் அந்த இடத்தில் ஆயிரம் சூரியன் பிரகாசிக்கும் ஒளி ஏற்பட்டது. அனைவரும் ஒரு புத்துணர்வுடன் காணப்பட்டனர். இதுவே ரகசியம், இதுவே ரகசியம் என்று அசரீரி பெரும் குரல் கொடுக்க, சுவரை மூடியிருந்த அனைத்து சீலைகளும் ஒரு சேர கீழ விழுந்தன.

என்ன ஆச்சரியம். அனைத்தும் உருவம் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். ஒவ்வொரு வரும் தங்கள் முகத்தை அதில் பார்த்த போது ஒரு சேர இதுதான் விஜயபுரி பொக்கிஷத்தின் ரகசியம். ஆம் சிறுவர்களே கண்ணாடியில் கண்டீர்களே... நீங்களே இந்த நாட்டின் ரகசியம். ஏன் இறைவன் படைப்பில் இந்த உலகின் ரகசியம்.

- தொடரும்...

- பூரணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us