PUBLISHED ON : டிச 11, 2015

முற்காலத்தில் சேவலுக்குத்தான் வால் பச்சை நிறத் தோகையாகவும், அதில் நீல நிற பொட்டுக்களுடனும் அழகாக இருந்தது. மயிலின் வால் சேவல் போல குட்டையாக இருந்தது.
அழகான வாலுடன் சேவல் மிடுக்காகத் திரிந்தது. மயில் சேவலைப் பொறாமையுடன் பார்த்து ஏங்கியது. சேவலின் வாலை எப்படியேனும் தான் கவர்ந்து கொள்ள வேண்டும் என்று மயில் நினைத்தது.
அதற்காகவே, மயிலும் காத்துக் கொண்டிருந்தது.
ஒருநாள்_
சேவலிடம் வந்த மயில், ''நண்பரே! நான் ஒரு கல்யாணத்திற்குப் போகிறேன். எல்லாரும் அங்கு அலங்காரமாய் வருவர். நீ உன்னுடைய வாலை ஒருநாள் மட்டும் எனக்கு இரவல் கொடுக்கிறாயா?'' என்று கேட்டது.
''நண்பரே! ஒருவருடைய வாலை மற்றவர் இரவல் வாங்கிச் செல்வார்களா?'' என்று வியப்பாய்க் கேட்டது சேவல்.
''என்ன அப்படிக் கேட்டுவிட்டாய்? வாலை இரவல் வாங்கிச் செல்லும் வழக்கம் எல்லா இடத்திலும் நடைபெறுவதுதானே? ஏன் உனக்குத் தெரியாதா?'' என்று திருப்பிக் கேட்டது மயில்.
''ஓஹோ! அப்படியா நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. சரி. நான் என் வாலை உனக்குத் தந்தால் அதை நீ எப்போது திருப்பித் தருவாய்?'' என்று கேட்டது சேவல்.
''நான் கல்யாணத்திற்குப் போய்விட்டு வந்து உன் வாலை திருப்பித் தந்துவிடுகிறேன். நான் சொன்ன சொல் தவறாதவன்! என் நேர்மையை அக்கம் பக்கத்தில் விசாரித்துப் பாரேன்!'' என்றது மயில்.
''உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கல்யாணம் எப்போது முடியும்?''
''நான் போவது செல்வந்தர் வீட்டுக் கல்யாணம். அதனால் கல்யாணம் முடிய எப்படியும் இரவு ஆகிவிடும் என்று நினைக்கிறேன். அதனால் எப்படியும் பொழுது விடிவதற்குள் திரும்பி வந்து உன் வாலை உன்னிடம் கொடுத்துவிடுவேன்!'' என்றது.
''ஒருநாளில் திரும்பத் தந்துவிடுகிறேன் என்று சொல்வதால், என் வாலைத் தரச் சம்மதிக்கிறேன். இன்று ஒருநாள் மட்டும் உன் வாலை நான் பொருத்திக் கொண்டு என் கூட்டிற்குள்ளே இருந்து கொள்கிறேன். ஆனால், நாளை பொழுது விடிவதற்குள் என் வாலை எனக்குத் திரும்பத் தந்துவிட வேண்டும். இல்லையென்றால் கோழிகள் என்னைப் பார்த்து கேலி செய்யும் நிலைமைக்கு ஆளாகிவிடுவேன்,'' என்று நிபந்தனை விதித்தது சேவல்.
''பொழுது விடிவதற்குள் நிச்சயமாக வாலைத் திரும்பத் தந்துவிடுவேன்,'' என்று உறுதி சொன்னது மயில்.
மயிலின் பேச்சை சேவல் நம்பியது. எனவே, அது தன் அழகான நீண்ட வாலை எடுத்து மயிலிடம் கொடுத்தது. மயிலும் அதற்குப் பதிலாக தன் வாலை எடுத்து சேவலுக்குக் கொடுத்தது.
சேவலும், மயிலின் வாலைத் தனக்குப் பொருத்திக் கொண்டு, கூட்டிற்குள் சென்று மறைந்து கொண்டது. மயில் சேவல் தந்த வாலுடன், புறப்பட்டுச் சென்றுவிட்டது.
பொழுது நகர்ந்தது. மாலைப் பொழுது முடிந்து, இரவுப் பொழுதும் வந்துவிட்டது.
'கல்யாணம் இந்நேரம் முடிந்திருக்கும். எப்படியும் பொழுது விடியுமுன் மயில் தன் வாலைக் கொண்டு வந்து தந்துவிடும்,' என்ற நம்பிக்கையோடு சேவலும் காத்திருந்தது.
இரவுப் பொழுதும் முடிந்து, பொழுது விடியும் நேரமும் வந்தது. மயிலைக் காண வில்லை!
'என்ன இன்னும் மயிலைக் காண வில்லையே! ஒருவேளை மயிலால் நடு இரவில் புறப்பட்டு வர இயலவில்லையோ! இருண்ட காட்டில் கண் தெரியாமல், எங்கேனும் வழிமாறிச் சென்றுவிட்டதோ!' என்று பலவாறாகச் சிந்தித்த சேவலால் நிம்மதியாக இருக்க இயலவில்லை.
'சரி? ஒருவேளை நாம் உயர்ந்த இடத்தில் ஏறி கூவினால் மயில் என் இருப்பிடத்தை அறிந்து, வந்து சேர்ந்துவிடாதா?' என்று யோசித்த சேவல், உயர்ந்ததொரு இடத்தின் மீது ஏறி நின்று 'கொக்கரக்கோ' என்று ஒருமுறை கூவிவிட்டு, இறங்கி வந்தது.
சற்று நேரம் சென்றது. இன்னும் மயிலைக் காணவில்லை.
இன்னுமா கல்யாணம் முடிந்திருக்காது? ஒருவேளை பெரிய கல்யாணமாக இருக்குமோ?' என்று நினைத்த சேவல், சற்று நேரம் தன்னிடத்திற்கு வந்து கண்ணயர்ந்தது.
சேவல் உறங்க நினைத்தாலும், அடிக்கடி தன் அழகான வாலின் நினைவு வந்தது. கனவில் மயில் தன் வாலை இரவல் வாங்கிச் சென்றதே மீண்டும், மீண்டும் காட்சியாய் வந்தது. சேவலின் உறக்கம் கலைந்தது. அடிக்கடி சேவல் தன் இறக்கைகளை படபடவென அடித்துக் கொண்டது.
சேவலின் ஆர்ப்பாட்டத்தில் அருகில் உறங்கிக் கொண்டிருந்த கோழிகளும் விழித்துக் கொண்டன.
திடீரென்று கண்விழித்த சேவல், மீண்டும் உயர்ந்த இடத்திற்குச் சென்று, 'கொக்கரக்கோ' என்று ஒருமுறை கூவியது.
சேவல் கூவியதைக் கேட்ட அப்பகுதி பறவைகளும், விலங்குகளும் கண்விழித்துக் கொண்டன.
சேவல் என்ன கூவியும் ஒரு பயனும் இல்லை. மயிலைக் காணவில்லை.
சேவலுக்கு ஒருபுறம் ஏமாற்றமாக இருந்தது. மற்றொரு புறம் மயிலின் மீது நம்பிக்கையும் இருந்தது. எப்படியும் மயில் தன் வாலைத் திரும்பக் கொண்டுவந்து தந்து விடும் என்றே அது நம்பியது.
சேவலுக்கு உறக்கம் கண்களைச் சுழற்றியது. அது மீண்டும் தன் கூட்டிற்குள் வந்து படுத்துக் கொண்டது.
தன்னை அறியாமல் சற்றுநேரம் கண்ணயர்ந்து விட்டது சேவல். அதற்குள் கீழ்வானம் லேசாக வெளுக்கத் தொடங்கி விட்டது.
சிறிது நேரத்தில் சேவலின் உறக்கம் முழுவதுமாக நீங்கிவிட்டது. சேவல் கண் விழித்தது. ஒருவேளை மயில் திரும்பி வந்து தன் வாலை வைத்துவிட்டுச் சென்றிருக்கும் என்று நினைத்தது. ஆனால், மயில் திரும்பி வரவும் இல்லை. வாலைத் திரும்பக் கொண்டுவந்து தரவும் இல்லை.
மயில் சேவலிடம் வாலை இரவல் வாங்கியது திரும்பக் கொடுப்பதற்காக அல்லவே! அது நயவஞ்சகமாக சேவலை ஏமாற்றிவிட்டது. சேவலின் நீண்ட அழகான வாலைத் தான் அபகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லவா இருந்தது.
சேவலிடம் வாலைப் பெற்ற மயில் அந்தக் காட்டைவிட்டு வெதுதூரம் சென்று விட்டது. சேவல் வரமுடியாத மலைப் பகுதிக்குச் சென்று தங்கிவிட்டது.
மயிலின் துரோகத்தை சேவல் அறிந்து கொள்ளவில்லை. மயிலை கூவி அழைத்தால் வழிதவறிப் போன மயில் எப்படியேனும் திரும்பி வந்து தன் வாலைத் தந்துவிடும் என்று நம்பிய சேவல், மீண்டும் உயரமான இடத்திற்குச் சென்று பெருங்குரலெழுப்பிக் கூவியது...
'கொக்கரக்கோ...'
ஆனால், மயில் திரும்பி வரவேயில்லை. காலங்கள் கடந்துவிட்டது.
சேவலிடம் பெற்ற அழகான வாலுடன் மயில், தான் வசித்த இடத்தில் ஒய்யாரமாய் நடைபோட்டது. தன் அழகான தோகையைப் பற்றி பிறரிடம் பெருமை பேசிக் கொண்டது.
சேவலோ... பாவம்! மயிலின் வார்த்தையை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறது. எப்படியும் மயில் திரும்பி வந்து தன் அழகான வாலைத் தந்துவிடும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாள் பொழுது விடியும் போதும், உயரமான இடத்தில் ஏறி நின்று 'கொக்கரக்கோ' என்று கூவிக் கூவி மயிலை அழைத்துக் கொண்டிருக்கிறது.
