தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இதயம் காத்த பெலிக்ஸ்!

இதயம் காத்த பெலிக்ஸ்!

இதயம் காத்த பெலிக்ஸ்!


PUBLISHED ON : டிச 11, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய நவீன - அவசர உலகில் பலகோடி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது 'மாரடைப்பு' என்கிற ஹார்ட் அட்டாக்.

இந்த கொடூர நாசக்கார நோய் வந்தவுடன், ஆஸ்பிரின் மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றால், மாரடைப்பை தவிர்க்கலாம் என்கிறது இன்றைய மருத்துவ உலகம்.

அத்தகைய உயிர்போகும் நிலையில் மரணத்தை தடுக்கும், 'ஆஸ்பிரின்' மாத்திரையை கண்டுபிடித்தவர், 'பெலிக்ஸ் ஹாப்மன்.'

இவர், 1868ம் ஆண்டு, ஜனவரி 21ம் நாள் ஜெர்மனியிலுள்ள, 'லுட்விக்ஸ் பெர்க்' என்ற இடத்தில் பிறந்தார். தந்தை ஜேக்கப் சிறு தொழிலதிபர்.

இவர், உள்ளூரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் நன்கு படித்தார். 1890ம் ஆண்டு, பார்மஸ்சூடிகல் பரீட்சை எழுதி தேறினார். அடுத்து மியூனிச் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையிலும், வேதியியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தில் நன்கு பயின்று முனைவர் பட்டம் பெற்று சாதனையாளராகத் திகழ்ந்தார். மருந்துகள் தயாரிக்கும் ஆர்வம் அவருக்குள் ஊற்றாக பெருகிக் கொண்டே இருந்தது. இவரின் திறனை அறிந்த, 'பேயர்' என்ற புகழ்பெற்ற மருத்துவ நிறுவனம், அவரை பணியில் சேர்த்துக் கொண்டது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் போது வலி நிவாரணத்திற்கான மருந்துகளை தயாரிப்பதில் தீவிரமாக செயல்பட்டார். இந்த நேரத்தில் அவரின் தந்தையார் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர் இருவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டனர்.

எவ்வளவோ மருந்துகள் கொடுத்தும் நோய் குணமாகாத நிலை. தந்தைக்கான நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இரவும், பகலும் கண் உறங்காமல் ஆய்வில் ஈடுபட்டார். அவரின் தீவிர ஆய்வால் 1897ம் ஆண்டு, ஆகஸ்ட் 10ம் தேதி வலிக்கான மருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த மருந்தின் வேதியியல் பெயர், 'அஸிடைல் சாலி சிலிக் அமிலம்.' இந்த மருந்தை வலி, வீக்கம், ஜுரம் போன்றவையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்து சோதனையிடப்பட்டது.

நோய்களுக்கு நிவாரணம் கிடைத்ததாக நோயாளிகள் சொல்ல, பெலிக்ஸ் மிகவும் மகிழ்ந்தார்.

அந்த மருந்திலிருந்து, புதிய ஒரு மருந்தை தயாரித்து தன் தந்தைக்கு அம்மருந்தை கொடுக்க, மூட்டுவலி குறைந்தது. பெலிக்ஸ் கண்டுபிடித்த மருந்தால் பல நோயாளிகள் பல்வேறு நோய்களிலிருந்து குணமடைவதைக் கண்ட மருத்துவ உலகம் அம்மருந்தை இரு கைகொண்டு வரவேற்றது.

ஜெர்மன் தவிர இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அம்மருந்தைக் கேட்டு வாங்கி, மக்களுக்கு கொடுத்தனர். நோய்கள் குணமாவதைக் கண்ட மருத்துவர்கள், மக்களின் வலிகளுக்கு நிவாரண மருந்தை கண்டுபிடித்த பெலிக்ஸை கடவுளாய் வணங்கினர்.

மருந்தின் பெயர் நீளமாய் இருப்பதைக் கண்ட பேயர் நிறுவனம் அதற்கு, 'ஆஸ்பிரின்' என்ற பெயரிட்டு மார்க்கெட் செய்தது.

ஆஸ்பிரினுக்கு உலகம் முழுக்க பெரும் வரவேற்பு உண்டானது. ஆரம்பத்தில் மருந்து 'தூளாய்' கொடுக்கப் பட்டது. பின்னர், அது மாத்திரை வடிவில் தயாரித்து விற்கப்பட்டது.

மக்கள் தலைவலியா... ஆஸ்பிரின், மூட்டு வலியா... ஆஸ்பிரின், தசை வலியா... ஆஸ்பிரின் என மருத்துவரின் அனுமதியின்றி வாங்கி வாங்கி சாப்பிட்டு நோய்களிலிருந்து விடுதலை பெற்றனர்.

மக்கள் உடல் வலிகளுக்காக ஆஸ்பிரினை கண்டு பிடித்த அம் மாமேதை 1946ம் ஆண்டு, பிப்ரவரி 8ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். என்றாலும் ஆஸ்பிரின் என்ற மருந்து உலகம் உள்ளவரை இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவரை பெலிக்ஸ் மக்கள் மனதில் நிறைத்திருப்பார். அவரின் மறைவுக்குப் பின்னர் ஆஸ்பிரின் வேறு எதற்கெல்லாம் பயன்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் இந்த மருந்து 'இதயத்தை' காக்கும் அற்புதம் என்பதை, 1948ம் ஆண்டு கண்டு பிடித்தனர்.

ஆம்... மாரடைப்பு வந்தவுடன் இம்மருந்தை உபயோகித்தால், இதயத்தை காக்கலாம் என்பதை உணர்ந்த மருத்துவ உலகம், இதய நோயாளிகளுக்கு இதை சிபாரிசு செய்கிறது; இது உண்மையும் கூட. நெஞ்சுவலி, இதய நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் கலந்த மாத்திரைகள் கொடுக்கப் பட்டு வருகின்றன. இதயத்தை காக்கும் 'ஆஸ்பிரின்' தந்த மகானை என்றும் போற்றுவோம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us