PUBLISHED ON : டிச 11, 2015

ஒருநாள் அக்பரின் அரசவைக்கு புகழ்பெற்ற கருமான் ஒருவன் வந்தான். அவன் அரசர்களுக்கு இரும்புக் கவசங்கள் செய்து தருவதில் வல்லவன். அவனிடம் பல மன்னர்கள் போர்க்களம் செல்லும்போது தாங்கள் அணிந்து செல்லக் கூடிய இரும்புக் கவசங்களை விலைக்கு வாங்கிக் கொள்வர்.
அந்தக் கருமான் அக்பரிடம் விற்பதற்காக எஃகினால் செய்யப்பட்ட அழகிய கவசம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தான். அந்தக் கவசம் அழகிய முறையில் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது. அதன் அழகைக் கண்டு மயங்கிய அக்பர், ''இந்தக் கவசம் எவ்வளவு அழகாகச் செய்யப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா?'' என்று அரசவையில் இருந்தவர்களிடம் கூறினார்.
அக்பர் கூறியதைக் கேட்டு மிகவும் கர்வமடைந்த அந்தக் கருமான், ''அரசே, இந்த கவசம் அழகாக மட்டும் செய்யப்பட்டதல்ல. மிகச் சிறப்பான முறையில் உறுதியாகவும் செய்யப்பட்டது. இதை எவ்விதம் வேண்டுமானாலும் சோதனை செய்து பார்க்கலாம்,'' என்று கூறினான்.
''அப்படியா!'' என்று வியந்த அக்பர் சக்கரவர்த்தி பக்கத்திலிருந்த வீரன் ஒருவனை அழைத்து அந்தக் கவசத்தின் மீது அவனுடைய உடைவாளை வீசச் சொன்னார்.
வீரன் அக்பர் கூறிய படியே தன் உடைவாளை அந்தக் கவசத்தின் மீது ஓங்கி வீசினான். உடனே அந்த இரும்புக் கவசம் துண்டு, துண்டாக உடைந்து விட்டது.
அதனைக் கண்ட அக்பர் சக்கரவர்த்திக்கு மிகவும் கோபம் வந்து விட்டது.
''நீ செய்து வந்திருக்கும் கவசத்தின் மீது உடைவாளை வீசியதும் துண்டுதுண்டாக உடைந்து போய்விட்டதே... இதை அணிந்து கொண்டா போர்க்களத்திற்குச் செல்வார்கள்? நீ என்ன கருமான். சிறப்பாகவும், உறுதியாகவும் செய்யப்பட்டதாகக் கூறிய இந்தக் கவசத்தின் கதியே இப்படியாகி விட்டதென்றால் சாதாரணமாகச் செய்யப்படும் கவசம் எந்த மாதிரி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. வீண் பேச்சு எதற்கு? இன்னும் உனக்கு முப்பது நாட்கள் தவணை தருகிறேன். அதற்குள் மிகச்சிறந்த, உடையாத, உறுதியுடைய கவசம் ஒன்று செய்து வரவேண்டும். அந்தக் கவசத்தின் மீது உடைவாளை எவ்வளவு வீசினாலும் உடையக்கூடாது. சோதனை செய்து பார்ப்பேன். கவசம் உடைந்தால், உன் தலை உருண்டு விடும். எச்சரிக்கையாயிரு!'' என்றார் அக்பர்.
அந்த கருமானும் மிகவும் சிரத்தையுடன் முன் செய்ததைவிட சிறந்ததாக புதிய கவசம் ஒன்றை இரவு பகலாக உழைத்து செய்து முடித்தான். அதை முடித்த பிறகு அவனுக்கு ஓர் ஐயம் தோன்றியது.
'அரசர் இதனை சோதனை செய்து பார்க்கும்போது இதுவும் உடைந்துவிட்டால் என் தலை உருண்டுவிடுமே! சோதனையின் போது கவசம் உடையாமலிருக்குமா? ஐயோ உடைந்து போய் விட்டால்? நினைக்கவே பயமாக இருக்கிறதே!' என்று நடுங்கினான்.
கடைசியில் அவனுக்கு பீர்பலின் நினைவு வந்தது. அவர் அக்பரிடம் அடைந்துள்ள செல்வாக்கும், அவருடைய அறிவுக் கூர்மையும் அவன் நினைவுக்கு வந்தன.
'அவரிடம் சென்று யோசனை கேட்டால் அவர் ஏதாவது சொல்லமாட்டாரா?' என்ற எண்ணத்துடன் பீர்பலிடம் சென்றான். தன்னுடைய குறையை அவரிடம் முறையிட்டான்.
அந்தக் கருமான் கூறியதை மிகவும் அனுதாபத்துடன் கேட்டார் பீர்பல். முடிவில், ''நாளைக்கு நீ செய்திருக்கும் புதிய கவசத்துடன் அரசவைக்கு வா. மேற்கொண்டு ஏதாவது நடந்தால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். பயப்படாமல் வீடு போய்ச் சேர்,'' என்று அவனுக்கு ஆறுதல் கூறி அவனை அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள், அரசவையில் கருமான் தான் செய்து எடுத்து வந்திருந்த புதிய கவசத்தை மாமன்னரிடம் காட்டினான்.
அதைக் கண்ட அக்பர் சக்கரவர்த்தி, ''சரி இந்தக் கவசத்தை நீயே அணிந்துகொள். நீ அணிந்து கொண்டிருக்கும் கவசத்தின் மீது என் வீரனை உடைவாளால் வெட்டச் சொல்லுகிறேன். அப்போது இந்தக் கவசம் உடையாமலிருந்தால் நீ உயிர் பிழைத்தாய். இல்லையெனில், நான் தனியாக உனக்கு மரண தண்டனை தர வேண்டிய அவசியமும் இருக்காது. கவசம் உடைந்ததும் நீயே இறந்து விடுவாய்,'' என்றார்.
கருமான் பயத்துடனும், நடுக்கத்துடனும் தான் செய்து எடுத்து வந்திருந்த புதிய கவசத்தை அணிந்தான்.
அக்பரின் ஆணைப்படி வீரன் உடை வாளால் அந்தக் கருமான் அணிந்திருந்த கவசத்தின் மீது ஒரே வெட்டாக வெட்டப் போனான். அப்போது அந்தக் கருமான் சட்டென்று அந்தச் சேவகனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
இதைக் கண்ட அக்பருக்கு சொல்ல முடியாத கோபம் வந்தது.
''என்ன காரியம் செய்தாய்? நான் என்ன சொன்னேன் என்பது உனக்குத் தெரியவில்லையா? நீ அணிந்து கொண்டிருக்கும் கவசத்தின் மீது உடைவாளை வீசி சோதனை செய்து பார்க்கச் சொன்னால், என் ஆணையை நிறைவேற்ற முடியாதபடி ஏன் அவன் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாய்?'' என்று மிகக் கோபமாக கருமானைப் பார்த்துக் கேட்டார்.
அப்போது அரசவையிலிருந்து பீர்பல் எழுந்து, ''அரசே! கவசத்தின் மூலம் மட்டும் வாள் வீச்சிலிருந்து உயிர் தப்ப முடியுமானால் கைகளை கட்டிக் கொண்டே வெறுங்கவசத்துடன் சண்டை போடலாம். ஆனால், அப்படியன்று, உயிருக்கு ஆபத்து வரும்போது கை தானாகவே உதவிக்கு வரும். இது இயற்கை. போர்க்களத்திலும் இதே கதைத்தான். எனவே, கருமான் செய்ததில் தவறொன்றுமில்லை,'' என்றார் அமைதியான குரலில்.
பீர்பல் சொன்ன விளக்கத்தை கேட்டதும், அக்பர் மகிழ்ந்து தம் கருத்தை மாற்றிக் கொண்டு, அந்தக் கருமானுக்கு பல பரிசுகள் அளித்து கவசத்தை பெற்றுக் கொண்டார்.
அதே சமயம், கருமானும், பீர்பலுக்கு தம் நன்றியை தெரிவித்து கொண்டான்.
