தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷம் (8)

பொக்கிஷம் (8)

பொக்கிஷம் (8)


PUBLISHED ON : ஜூன் 05, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: தளபதியின் வீரன் குணாளனால் ஆற்றில் வீசப்பட்ட சின்னதம்பியை, சித்தப்பா மகன் வாண்டு மீட்டு கரை சேர்த்தான். சின்னதம்பியின் அம்மாவும் அங்கு வந்தார். இனி-

''ஆபத்து! இப்ப நான் செத்துட்டதா நினைச்சிருக்கிற தளபதியின் வீரன், நிச்சயம் நம்ம வீடு தேடி வருவான். அவனுக்கு நம்ப மேல ஒரு சந்தேக கண். அதனால நாம உடனே தளபதி மற்றும் அவன் ஒற்றனிடம் இருந்து தப்ப வேண்டும். நாம் இருக்கும் இடத்தை மாற்ற வேண்டும். அத்துடன் வாண்டு என்னை காப்பாற்றியது தெரிந்தால், அந்த சதிகாரர்கள் அவனையும் கொன்றுவிடுவர். உடனே, நாம் தப்ப வேண்டும்,'' சின்னதம்பி தெம்பில்லாமல் பேசி முடித்தான்.

''ஏண்டா நமக்குத்தான் அமைச்சர் உதவி கிடைக்குமே. பின் நாம் ஏன் இடத்தை மாற்ற வேண்டும்?''

''அய்யோ அம்மா அந்த தளபதி அயோக்கியன். அவனுக்கு அமைச்சரை பிடிக்காது. பேச நாழி இல்லை. உடனே புறப்படு. ஆபத்து இன்று இரவுக்குள் நமக்கு வர இருக்கிறது!''

ஒன்றும் புரியாமல், 'சரி' என்று ஒப்புக்கு தலையாட்டியவள், ''தம்பிகளா கொஞ்சம் பொறுங்க. நாம கிளம்பி போறதுக்குள்ள ஏதாச்சும் சாப்பிட்டுவிட்டு போவோம். வீட்டுல சோளம் சுட்டு கம்பங் கூழ் வெச்சிருக்கேன். நான் போய் வெகு சீக்கிரம் வந்து விடுகிறேன்,'' என்றவள் யார் பதிலுக்கும் காத்திராமல் குதிரை யில் ஏறினாள். அதை லாவகமாக காலினால் உதைக்கவும் அதுவும் காற்றோடு காற்றாக பறந்து சென்றது.

சின்னதம்பி தன் அம்மாவின் திறமையில் மெய் மறந்து பார்த்து இருக்க, வாண்டு வாய் பிளந்தபடி குதிரை சென்ற திசையையே பார்த்த படி இருந்தான்.

அடுத்த சில நாழியில் திரும்பி வந்தாள் மீனாட்சி.

''தம்பிங்களா சட்டுப்புட்டுன்னு சோளத்த கடிச்சு கம்பங் கூழை குடிங்க. அப்பத்தான் நாம உடனே இங்கிருந்து கிளம்ப முடியும்!'' என்று தாய் அவசரப்படுத்தினாள்.

சின்னதம்பிக்கு மிகவும் பிடித்தது சோளம். உடனே அதை எடுத்து கடிக்கலானான். வாண்டுவும் அதை ருசித்து தின்றான்.

'ஏதோ நடந்திருக்கு. பிள்ளைங்க என்னவோ மிரண்டு இருக்கு. காலையில சின்னதம்பிக்கிட்ட கொடுத்த சிகை அலங்கார பெட்டியையும் காணவில்லை. இவன் எப்படி கங்கையில் விழுந்து இங்கு வந்து எழுந்தான். இந்த வாண்டு பயல எங்க பார்த்தான். உசிருக்கு ஆபத்து. இங்கிருந்து உடனே புறப்படனும்னு வேறு சொல்றானே. அப்படி என்ன தளபதிக்கு நாம தீங்கு செஞ்சிட்டோம். இந்த நாட்டு உளவாளியா இருந்தா அது தப்பா?'

''என்ன தம்பிங்களா சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா? நாம போகலாமா?'' என்று அவள் கேட்டாள்.

''ஓ! போகலாம். சின்னதம்பிக்கு புதுத்தெம்பு வந்திருந்தது. வாண்டுவும் தயாரானான்.

''தம்பிங்களா முதல் குதிரையில வீட்டு சமையல் சாமான்கள், அடுப்பு அப்படி, இப்படின்னு கோணியில வெச்சிருக்கேன். அதை கழுத்தில மாட்டியிருக்கேன். அதனால நாம ரெண்டாவது குதிரையில ஏறி போவோம். ரெண்டு பேரும் முன்னால் உட்கார்ந்துகிடுங்க. நான் அதை சவாரி செஞ்சுட்டு வர்றேன். நீங்க கீழே விழாம இருக்கமா பிடிச்சுட்டு வந்தா போதும். குதிரைகள் எல்லாம் ராஜ குதிரைகள். ரொம்பவும் விசுவாசம் மிக்கது. நல்லா பழக்கி இருக்கேன். அதனால குதிரையை பத்தி அச்சம் வேண்டாம். புரியுதா?''

வாண்டு முதலில் குதிரையில் ஏறினான். அடுத்து சின்ன தம்பி ஏறினான். கடைசியில் மீனாட்சி தான் பயணிக்கப்போகும் குதிரையிடம் வந்தாள். அது மிக கம்பீரம் கொண்ட பெரிய குதிரை.

''பெரியண்ணே எங்களை ஜாக்கிரதையா கொண்டு போய் சேர்ப்பீங்களா?'' குதிரையிடம் பேசினாள்.

அது வேகமாக தலையாட்டியது. இதை கண்டு வாண்டு மகிழ்ந்தான்.

அடுத்த குதிரை சற்று உயரத்தில் குறைவாக இருந்தாலும், அதுவும் கம்பீரத்துடன் நின்றிருந் தது. அதை தடவி கொடுத்தாள் மீனாட்சி.

''சின்ன அண்ணே! நாங்க உங்க அண்ண ணோட எங்கெல்லாம் போறமோ, அங்க எல்லாம் நீங்களும் தொடர்ந்து வர வேண்டும். செய்வீங்களா?'' என்று அவள் கேட்டதும், அந்த குதிரையும் தலையாட்டியது.

இப்போது வாண்டு கைதட்டி மகிழ்ந்தான். அவ்வளவுதான் மனம் மகிழ்ந்த மீனாட்சி ஒரே தாவலில் பெரிய குதிரையில் ஏறினாள். பின் காற்றோடு காற்றாக கலந்து கங்கை தீரத்தில் இருந்து வேகமாக மறைந்தாள்.

''அம்மா இப்ப நாம எங்கே போறோம்?'' சின்ன தம்பி கேட்டான்.

''தம்பி இப்ப வாண்டு நம்ம கிட்ட இருக் கான். அவன் இல்லாம இந்நேரம் அவன் தாய் என்ன பாடுபட்டு நிப்பாளோ. அதனால, மொதல்ல அவனை அவன் தாயிடம் ஒப்படைக்க வேண்டும். பிறகுதான் நாம என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். அத்தோடு கேசரி அண்ணன் அவரோட குடும்பத்தையும் நாம கவனிச்சிக் கிடனும்னு சொல்லியிருக்காரு. அதனால நாம எங்க போனாலும் அந்த தங்கச்சியையும், வாண்டுவையும் அழச்சிட்டுதான் போகணும். மொதல்ல அவங்க குடிசைக்கு போவோம். பிறகு ஆற அமர அமர்ந்து பேசி முடிவுக்கு வருவோம்,'' என்ற மீனாட்சி வேகமாக அய்யனார் கட்டடம் வந்தடைந்தாள்.

அய்யனார் சிலைக்கு அருகில் வரும்போது ஒரு பெண்ணின் அழுகுரலும், சில ஆண்களின் சத்தமும் பலமாக கேட்டன.

வாண்டு பதறினான்.

''அய்யோ! அழுவது என் அம்மாதான்!'' என்று வாண்டு பதறினான்.

மீனாட்சியும் பதறினாள்.

'அப்படி என்றால் அந்த ஆண்கள் யாராக இருக்கும். ஓ! நம் வீட்டுகாரரையும், கேசரி அண்ணனையும் தேட சென்றதாக சொன்ன மேலை நாட்டு வீரர்களாக இருக்குமோ? இந்த வீரர்களை பற்றி நம் வீட்டுக்காரர் ஏற்கனவே சொல்லி சென்றாறே. இனி நாம் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்' என்று முடிவெடுத்து குதிரையை விட்டு இறங்கினாள்.

சின்னதம்பியும், வாண்டுவும் இறங்கினர்.

சின்னதம்பியிடம் அவன் அப்பா கூறிய முழு விவரத்தையும் இப்போது கூறினாள். விஷயத்தின் விபரீதத்தையும், அதன் தாக்கத் தையும் புரிந்து கொண்ட சின்னதம்பி ஒரு உத்தி வகுத்தான். அதை தன் தாயிடம் கூறினான். அவளும் மகிழ்வுடன் தலையாட்டி சம்மதித்தாள்.

வாண்டு அழுதபடி பதட்டத்தில் இருந்தான்.

வீரர்கள் அவன் தாயை அடிக்க, அவள் அழுகுரல் அந்த அய்யனார் கட்டடத்தையே குலுக்கியது. சின்னதம்பி வாண்டுவை சமாதானப்படுத்தினான். பின் மூவரும் அந்த குடிசைக்குள் நுழைந்தனர். இவர்களை கண்டதும் வீரர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

''அக்கா என் நிலையை பாத்தியா? இந்த பாவி பசங்க என்ன எப்படி அடிக்கறானுங்க தெரியுமா?'' என்றவள் ஓடி மீனாட்சியை கட்டி தழுவிக்கொண்டாள்.

''அம்மா!'' என்று அழுது கொண்டே வாண்டு தன் தாயை கட்டிக்கொண்டான்.

''யேய் நீங்களெல்லாம் யாரு??'' ஒரு வீரன் அதட்டலுடன் கேட்டான்.

'சின்னதம்பிக்கு சிறு சந்தேகம். இவன் பேச்சு மேலைநாட்டான் போல் இல்லையே. அப்படி என்றால் இவனும் ஒரு தேச துரோகியாக இருப்பானோ?' சமாளிப்போம்.

''அய்யா. நாங்களும் இந்த விஜயபுரியை சேர்ந்தவர்கள் தான் தங்களைப் போல்,'' சின்னதம்பி பொடி வைத்து பேசினான்.

''டேய் என்னடா சொல்ற?'' அந்த வீரன் மீண்டும் அதட்டினான்.

''ஆமாமுங்க. உங்களை பார்த்தா நீங்களும் என் அப்பா மாதிரி ஒரு உளவு பார்க்கிற வீரர்னு தெரியுது!''

''அப்ப உன் அப்பா யாருடா?''

''என் அப்பா மட்டும் அல்ல, இந்த வாண்டு பயல் அப்பாவும் நீங்க தேடிக்கிட்டிருக்கிற உளவாளி தான்!''

''அப்ப நீங்க எங்க எதிரிங்க. சரி இப்ப உங்க அப்பா எங்க இருக்காரு?''

''ஏன் இருக்கிற இடத்தை சொன்னா சுட்டு தள்ளவா? அது நடக்காது. காரணம், உங்க ராஜதந்திரியும், குறும்படைத் தலைவனும் இப்ப இருப்பது என் அப்பாவின் தலைவர் வீட்டில்தான்.

''ஓ!'' அவன் யோசித்தான்.

''சரி யார் உன் அப்பாவின் தலைவர்!'' என்று கேட்டான் வீரன்.

''சொல்ல முடியாது. அது மிக ரகசியம்!''

''அப்ப நீ சொல்வதை நம்ப முடியாது. என்னை ஏமாற்ற பார்க்கிறாய்!''

''அய்யா அமைச்சரின் உளவாளியே...!'' சின்னதம்பி பேச்சை சற்று நிறுத்தி, அந்த வீரனை பார்த்தான்.

- தொடரும்...

பூரணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us