PUBLISHED ON : ஜூன் 05, 2015

சுந்தரபுரி நாட்டை ஆண்டு வந்த மன்னருக்கு விதவிதமாக தலைக் கிரீடங்களை அணிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. தனது எண்ணப்படி புதுமையான, தலைக்கீரிடம் ஒன்றினை செய்திட வேண்டும் என்று ஆவலடைந்தார் மன்னர்.
உடனே அவர் அரண்மனை பொற்கொல்லரை அழைத்தார். அந்தப் பொற்கொல்லரிடம் தனது எண்ணத்தை தெரியப்படுத்தினார்.
மன்னனின் எண்ணத்தையும், அவர் எந்த முறையில் கிரீடம் செய்திடச் சொல்கின்றார் என்பதையும் மிக நன்றாக கேட்டு புரிந்து கொண்டார் பொற்கொல்லர். பின்னர் அவர் கிரீடம் செய்வதற்கான தங்கம் மற்றும் வைரங்கள், முத்துக்கள் இவைகளை எல்லாம் பெற்று கொண்டு சென்றார்.
மன்னர் சொன்ன குறிப்பிட்ட நாட்கள் முடிவடைந்த பின்னரும் அந்தப் பொற்கொல்லர் கிரீடத்தை எடுத்து வந்து மன்னரிடம் காட்டவில்லை.
மன்னரோ அந்தக் கிரீடத்தைப் பார்த்திட வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்தார். பொற்கொல்லர் வராததால், காவலர்களை அனுப்பி பொற்கொல்லரை அழைத்து வருமாறு கூறினார் மன்னர்.
மன்னரின் கட்டளையை ஏற்றுக் கொண்ட காவலர்களும் உடனே பொற்கொல்லரை அழைத்து வந்தனர்.
''அரசே வணக்கம்! தாங்கள் அழைப்பதாக காவலர்கள் தெரிவித்தனர். அதனால்தான் தங்களைக் காண ஓடோடி வந்தேன்,'' என்றார் பொற்கொல்லர்.
''பொற்கொல்லரே! எனது அழைப்பை மதித்து நீர் வந்தமைக்கு மிகவும் நன்றி. தாங்கள் கிரீடம் செய்து முடித்து விட்டீர்களா? தாங்கள் செய்த கிரீடத்தைப் பார்வையிட நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்,'' என்றார் மன்னர்.
''அரசே! கிரீட வேலைகள் எல்லாம் முடியும் தருவாயில் இருக்கின்றன. இருந்தாலும் அவ்வேலைகள் எல்லாம் சிறப்பாக முடிந்திட சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது,'' என்றார் பொற்கொல்லர்.
''கால அவகாசம் என்றால் இன்னும் எத்தனை மணி நேரம்? எத்தனை நாட்கள்? எத்தனை மாதங்கள்? எத்தனை வருடங்கள்?'' என்று அடுக்கிக் கொண்டே கோபத்துடன் கேட்டார் மன்னர்.
மன்னர் மிகவும் கோபத்துடன் இருக்கின்றார் என்பதை பொற்கொல்லர் புரிந்து கொண்டார்.
''அரசே! தாங்கள் எந்த அளவுக்கு கோபப்படுகின்றீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே, எனக்கு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் கொடுங்கள். நான் அதற்குள் எனது கிரீட வேலையினை முடித்து கிரீடத்தைக் கொண்டு வந்து விடுகிறேன்,'' என்றார்.
''சரி பொற்கொல்லரே! நீர் கேட்டுக் கொண்டபடியே ஒரு மாத கால தவணை கொடுக்கிறேன். நீர் சிக்கிரமாக கிரீடத்தை செய்து முடித்து விடுங்கள்,'' என்றார் மன்னர்.
''சரி அரசே! உங்களது கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றார் பொற்கொல்லர்.
அதன் பின்னர் அவர் மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ஒரு மாதம் கடந்த பின்னரும் கூட பொற்கொல்லர் கிரீடத்தை எடுத்து வந்து மன்னரைப் பார்க்கவில்லை.
மன்னர் மேலும் ஆத்திரமடைந்தார். அந்தப் பொற்கொல்லர் திறமை மிக்கவர் என்பதாலும் அவரே தனக்கு எல்லா அணிகலன்களையும் செய்துள்ளார் என்பதாலும் மன்னர் சற்று அமைதிகாத்தார். இருந்தாலும் அவர் கொடுத்த ஒரு மாதக் காலக்கெடு முடிந்ததால் காவலர்களின் உதவியுடன் பொற்கொல்லரை அழைத்து வரச் செய்தார்.
காவலர்களும் பொற்கொல்லரை அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினர்.
''பொற்கொல்லரே! ஒரு மாதம் அவகாசத்தை நீர் கேட்டீர்! நானும் உமக்கு அவகாசம் கொடுத்தேன். ஆனால், அந்த அவகாசம் முடிந்த பின்னரும் கூட நீர் கிரீடத்தைக் கொண்டு வராமல் இருக்கின்றீரே! என்ன காரணம்?'' என்று கேட்டார் மன்னர்.
''அரசே! மன்னிக்கவேண்டும். நான் ஒரு மாத காலத்தில் கிரீடத்தின் வேலைகளை முடித்து விட்டேன். ஆனால், அதில் சிறிய வேலை ஒன்று பாக்கியிருக்கிறது. அவ்வேலை முடிய எனக்கு இரண்டு வார காலம் அவகாசம் தேவை!'' என்றார் பொற்கொல்லர்.
மன்னரோ தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, ''பொற்கொல்லரே! இன்னும் இரண்டு வார காலம் அவகாசம் கேட்கின்றீரே! சரி... சரி... இதுதான் நான் உமக்கு கொடுக்கின்ற கடைசி அவகாசம் என்று நினைத்துக்கொள்ளும். இரண்டு வாரம் முடிந்த பின்னர் கண்டிப்பாக கிரீடத்தைக் கொண்டு வந்திட வேண்டும்,'' என்றார் மன்னர்.
''நிச்சயமாக அரசே! இந்த முறை நான் கால அவகாசத்திற்குள் கிரீடத்தைக் கொண்டு வந்து விடுவேன். இதனை நான் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்,'' என்றபடி சென்றார் பொற்கொல்லர்.
மன்னர் கொடுத்த இரண்டு வார கால அவகாசம் முடிந்ததும் சரியான நேரத்திற்கு கீரிடத்தைக் கொண்டு வந்து மன்னர் முன்னே வைத்தார் பொற்கொல்லர்.
மன்னரோ அக்கீரிடத்தை எடுத்துப் பார்த்து வியப்படைந்தார்.
''பொற்கொல்லரே! நான் என்னுடைய மனதில் என்ன நினைத்திருந்தேனோ அதனை அப்படியே நீர் சிறப்பாக செய்திருக்கின்றீர்! உம்மை நான் எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. நான் தான் உம்மைப் புரிந்து கொள்ளாமல், வீணாக உங்கள் மீது கோபமடைந்து விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடும்,'' என்றார் மன்னர்.
''அரசே! உங்களை நான் மன்னிப்பதா? என்னைத் தான் நீங்கள் மன்னிக்க வேண்டும். நான் குறிப்பிட்ட நாட்களுக்குள் எப்போதோ கிரீடத்தை செய்து முடித்து விட்டேன். ஆனால், நான் கால அவகாசம் கேட்டது வேறு ஓர் காரணத்திற்காகத்தான்,'' என்றார் பொற்கொல்லர்.
''அது என்ன காரணம்?'' என்று வியப்போடு கேட்டார் மன்னர்.
''அரசே! எனக்கு குரு என் தந்தையார்தான். நான் இக்கிரீடங்களைச் செய்யும் தொழிலை என் தந்தையாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நான் எந்த அணிகலன்கள் செய்தாலும் இறுதியில் என் தந்தையிடம் அதனைக் காட்டி ஆலோசனை பெற்றிடுவேன். அதோடு அவர் ஆசியையும் பெற்றிடுவேன். ஆனால், இந்தமுறை நான் கிரீடம் செய்து முடிக்கின்ற நேரத்தில் அவர் நோய் வாய்ப்பட்டிருந்தார். அவர் நோய் குணமடைய கால அவகாசம் தேவைப்பட்டது. அவரது நோய் முழுமையாக குணமடைந்ததும் அவரிடம் இக்கிரீடத்தைக் காட்டி ஆசிப் பெற்று எடுத்து வந்துள்ளேன். இப்போது நான் எதனால் கால அவகாசம் கேட்டேன் என்பதை தாங்கள் புரிந்து கொள்வீர்கள்,'' என்றார் பொற்கொல்லர்.
''பொற்கொல்லரே! உமது தொழில் பக்தியையும், உமது குருவிடம் நீர் வைத்திருக்கும் மரியாதையும், உமது தந்தையாரிடம் நீர் வைத்திருக்கும் பாசமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உமக்கு என்னுடைய பாராட்டுக்கள்,'' என்றவாறு ஏராளமான பரிசுகளைக் கொடுத்து பொற்கொல்லரை கவுரவித்தார் மன்னர்.
***
