PUBLISHED ON : நவ 19, 2022

ரங்கனும், சிம்மனும் நீண்ட கால நண்பர்கள். தோட்டத்தில் மரம் நட குழி தோண்டினர். அதில், ஒரு தங்க காசு தென்பட்டது. இன்னும், ஆழமாக தோண்டினர். எதிர்பார்த்தது போல புதையல் பானை ஒன்று தென்பட்டது.
புதையலை, 'தனியாக அனுபவிக்க வழி உண்டா' என சிந்தனையில் மூழ்கினர். அபகரிக்கும் நோக்கத்தில் திட்டங்களை தீட்டினர்.
'முறைபடி புதையலை அரசிடம் தான் ஒப்படைக்க வேண்டும்; அப்படி செய்வதால், பேரும் புகழும் கிடைக்குமே தவிர, பணக்காரனாக முடியாது...' என்றான் சிம்மன்.
'உண்மை தான்... புதையலை எங்கு எடுத்து சென்றாலும் விற்க முடியாது; எனவே இதை வைத்து பணக்காரராகும் வாய்ப்பு இல்லை. எனவே என்னிடம் கொடுத்து விடு...' என்றான் ரங்கன்.
அதற்குள் ரகசியத் திட்டத்தை தீட்டியிருந்தான், சிம்மன்.
'சரி... ரொம்ப பசிக்குது. ஓட்டலில் சாப்பிட்டு, எனக்கும் உணவுப் பொட்டலம் வாங்கி வா... சாப்பிட்ட பின், புதையலை பற்றி யோசித்து முடிவு செய்யலாம்...' என்றான் சிம்மன்.
ஓட்டலுக்கு சென்றான் ரங்கன். சிறிது நேரத்தில், உணவுப் பொட்டலத்துடன் திரும்பியவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிம்மனை காணவில்லை. தோண்டியிருந்த குழிக்குள் எட்டி பார்த்தான்.
புதையல் பானை அப்படியே இருந்தது.
அடுத்த நொடி, பின் மண்டையில் இரும்பு கம்பி தாக்க சரிந்து விழுந்தான் ரங்கன்.
கண்களில் குரூரச் சிரிப்புடன் நின்ற சிம்மன், உணவு பொட்டலத்தை பிரித்தான்.
தீவிரமாக, 'புதையலை என்ன செய்யலாம்' என யோசித்தபடி உண்டான். உள்ளே சென்ற உணவு, சிறிது நேரத்தில் வேலையைக் காட்டியது. அந்த உணவில் விஷம் கலந்திருந்தது.
மயங்கிய நிலையில் இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மக்கள்.
மருத்துவர் உதவியால் இருவரும் கண் விழித்தனர். அப்போது, அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், 'எதற்கும் பயன்படாத புதையலுக்காக, ஒருத்தரை ஒருத்தர் சாகடிக்க முயன்றீங்களே... இதுக்கு பெயர் தான் நட்பா...' என அறிவுரை கூறினார். இருவருக்கும் புத்தி வந்தது.
குழந்தைகளே... பேராசை பெருநஷ்டம் தருவதுடன், நட்புறவையும் குலைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
