PUBLISHED ON : ஜூன் 15, 2018

வடநாட்டில் பொருட்களை விற்பனை செய்வதற்காக, மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார் ஒரு வியாபாரி. அடர்ந்த காட்டில், மாட்டுக் காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டு விட்டது. அதனால், மேற்கொண்டு வண்டியை இழுத்துச் செல்ல முடியவில்லை.
எவ்வளவோ முயன்றும், மாட்டை குணப்படுத்த முடியவில்லை. எனவே, தலைச்சுமையாக பொருட்களை, பக்கத்து கிராமத்தில் வியாபாரம் செய்தார்.
சில தினங்களில் மாடு குணமாகி விட்டது. காட்டில் அலைந்து திரிந்து நன்றாக மேய்ந்து கொழுத்தது.
ஒரு நாள் -
கங்கை நதிக்கரையில், மேய்ந்து கொண்டிருந்த போது, பெருங்குரல் எடுத்துக் கத்தியது, மாடு.
நதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த காட்டின் ராஜா சிங்கம், இந்தக் கத்தலை கேட்டு மிரண்டது.
தண்ணீர் பருகுவதை நிறுத்தி விட்டு, சுற்று முற்றும் மிகுந்த எச்சரிக்கையோடு பார்த்தது.
எந்த மிருகத்தையும் காணவில்லை; ஆனால், சத்தம் மட்டும் மறுபடியும் பலமாக வந்தது.
இப்போது சிங்க ராஜாவை பயம் பிடித்து விட்டது.
'சத்தம் மிகவும் கடுமையாக இருப்பதால், நிச்சயமாக அது பயங்கர மிருகமாக இருக்கலாம்' என நினைத்து, இருப்பிடம் நோக்கி விரைந்தோடியது.
இதை, மறைவாக நின்று கொண்டிருந்த இரண்டு நரிகள் கவனித்து விட்டன.
''ஏதோ ஒரு மிருகத்தின் பயங்கர சத்தம் கேட்டு, சிங்க ராஜாவே பயந்ததை பார்த்தயா...'' என்று முதல் நரி கேட்டது.
''ராஜாவே பயப்படுகிறது என்றால், அது மிகப்பயங்கர மிருகமாத்தான் இருக்கும்; வா, நாமும் ஓடி விடலாம்...'' என்று எச்சரித்தது இரண்டாவது நரி.
''சிங்க ராஜாவே பயந்து கிடக்கிறார்; இதைப் பயன்படுத்தி, அவரோடு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளலாம்...''
''சிங்கம் ஒரு முரட்டு மிருகம்; நாம் நல்லெண்ணத்தில் பழகினாலும், திடீரென்று ஒரு நாள் அதன் முரட்டுக் குணத்தை காண்பித்து விடும்; எனவே, இது தேவையில்லாத விஷப்பரீட்சை...''
''அப்படி எல்லாம் எதுவும் நடக்காது; அதன் நட்பு கிடைத்து விட்டால், மற்ற மிருகங்களுக்கு நம் மீது, ஒரு பயம் கலந்த மரியாதை வரும்; நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் காட்டை சுற்றி வர முடியும். நல்ல சாப்பாடு கிடைக்கும்; சந்தோஷமாக வாழலாம்...'' என்று, ஆர்வமும், கனவும் மிளிரச் சொன்னது முதல் நரி.
இதை இரண்டாவது நரி ஏற்க மறுத்து விட்டது. எனவே, சிங்கத்தை வளைத்துப்போட முடிவு செய்து, சிங்க ராஜா முன் போய் நின்று, பவ்யமாக வணக்கம் சொன்னது முதல் நரி.
''உன்னை பார்த்து ரொம்ப நாளாயிற்று; எப்படி இருக்கிறாய்; காடு எப்படி இருக்கிறது; மற்ற மிருகங்கள் எல்லாம் எப்படி இருக்கின்றன...'' என்று ஆர்வமாக கேட்டது, சிங்க ராஜா.
''எல்லாரும் நன்றாக இருக்கின்றனர். ஆனால், நீங்கள் தான் மிரண்டது போல் இருக்கிறீர்கள்...'' என்று துாண்டில் போட்டது, நரி.
''ஆமாம்... ஏதோ வித்தியாசமான கத்தலை கேட்டேன்; அதுதான், கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது...'' என்று, மிரட்சியை ஒத்துக் கொண்டது, சிங்கம்.
''இதுதானா விஷயம்... அது என்ன மிருகம் என்று கண்டுபிடித்து வருகிறேன்; அதுவரை கவலைப்படாமல் இருங்கள்...''என்றது நரி.
சந்தோஷத்தில் நரியை அணைத்து, முத்தம் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
ஆங்காங்கே அலைந்த நரி, மாட்டை கண்டுபிடித்து நெருங்கி பேசியது. பின், சிங்க ராஜாவிடம், ''அந்த மிருகத்தை கண்டுபிடித்து விட்டேன்...'' என்று உற்சாகமாக துள்ளிக் குதித்தது. சிங்கம் ஆர்வமாக கேட்டது.
''அது காளை மாடு; நல்ல தீனி உண்டு கொழுத்ததால், குரல் கொஞ்சம் எடுப்பாக இருக்கிறது; அது உங்களுடன் நட்பு கொள்ள ஆர்வமாக இருக்கிறது...'' என்றது நரி.
இதை கேட்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட சிங்கம், அதை அழைத்து வர சொன்னது.
மாட்டை அழைத்து வந்த நரி, சிங்க ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்தது. அவை, நெருங்கிய நண்பர்களாகி விட்டன.
ஒரு கட்டத்தில், காளையை, அமைச்சராக அறிவித்து, மிதமிஞ்சிய அதிகாரத்தையும் வழங்கியது சிங்கம்.
இதன் காரணமாக, அவற்றின் நட்புக்கு பாலமாக விளங்கிய நரியின் மரியாதை வெகுவாக குறைந்தது. அது ஆசைப்பட்டது போல, சுதந்திரமாக அலைய முடியவில்லை; மற்ற மிருகங்களுக்கு, நரி மீது பயமும் வரவில்லை.
இதனால், நரிக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. இரண்டாவது நரியிடம், தன் சங்கடத்தை கூறியது.
முதல் நரியை சமாதானப்படுத்திய, இரண்டாவது நரி, ''நீ நினைத்தது போல காட்டு ராஜாவிற்கு அடுத்த இடத்தில் இருக்க வேண்டுமானால், காளைக்கும், சிங்கத்திற்கும் உள்ள நட்புறவை, தந்திரமாக உடைக்க வேண்டும்...'' என யோசனை தெரிவித்தது.
அது பற்றி தீவிரமாக யோசித்தது நரி.
சிங்கம் தனிமையில் இருக்கிற நேரம் பார்த்து, அதனிடம் போய், வணக்கம் சொன்னது.
''என்னது ரொம்ப நாளாக உன்னை காணவில்லை... திடீர் திடீரென்று வருகிறாய்; அப்புறம் காணாமல் போய் விடுகிறாயே...'' என்றது சிங்கம்.
''காட்டில் அங்காங்கே சென்றால் தானே உண்மையான நிலவரம் தெரிய வரும்...'' என்றது நரி.
''உண்மை நிலவராமா... அப்படி என்றால், இப்போது என்ன நிலவரம் உனக்கு தெரிய வந்தது...'' என்று கேட்டது.
''என் வாயைக் கிளறாதீர்கள்; அப்புறம் நான் உண்மையை சொல்லி விடுவேன்; பாவம் நீங்கள் ரொம்ப வருத்தப்படுவீர்கள்...'' என்று பொய் பேசியது.
இது சிங்கத்தை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏதோ ஒன்றை நரி மறைப்பதாக நினைத்த சிங்கம், அது என்னவென்று அறிவதில், அதிக ஆர்வம் காட்டியது.
மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால், நரி சொல்ல ஆரம்பித்தது...
''தங்களிடம் உண்மையான நண்பனாக இருக்கும் காளை, அதற்கு மிகவும் நெருங்கிய சகாக்களிடம், தங்களுக்குப் பின், இந்தக் காட்டின் ராஜாவாக போவதாக சொல்லி திரிகிறது. அதை மறைந்திருந்து கேட்டு, திடுக்கிட்டுப் போனேன். எதற்கும், காளையிடம் ஜாக்கிரதையாக இருங்கள்...'' என்றது நரி.
முதலில் இதை நம்புவதற்கு சிங்கம் கஷ்டப்பட்டது. பின் கோபத்துடன், ''காளை வரட்டும் அதனிடமே கேட்கிறேன்...'' என்று கர்ஜித்தது.
நரிக்கு துாக்கிவாரி போட்டது. காளையிடம் கேட்டால், உண்மை வெளிப்பட்டு விடும் என்று பயந்த நரி, இதை சமாளிக்க நினைத்தது.
''நீ சொன்னது உண்மையா என்று கேட்டால், காளை தவறை ஒப்புக்கொள்ளுமா சிங்க ராஜாவே... இந்த விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக காளையிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களிடம் சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்...'' என்றது நரி.
இதுவும் சரியென்று தோன்றவே, அப்படியே நடந்து கொள்வதாக சிங்கம் கூறியது. ஆனால், ''காளை என்னை கொல்ல வருகிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது...'' என்று சந்தேகம் கேட்டது, சிங்கம்.
''உங்களைப் பார்த்ததும், அது தன் வாலை முறுக்கிக் கொண்டு கொம்பைப் பலமாக அசைக்கும். அப்படிச் செய்தால், அது உங்கள் மீது பாய தயாராகிவிட்டது என்று அர்த்தம்; உடனே, உங்கள் பலத்தை நீங்கள் பிரயோகித்து விட வேண்டும்...'' என்றது.
பின், அப்படியே காளையிடம் ஓடிச் சென்ற நரி, ''இனிமேல் வாழ்வதே வீண் என்று தோன்றுகிறது; பேசாமல், செத்து விட நினைக்கிறேன்...'' என அழுது புலம்பி நடித்தது.
''ஏன் நரியாரே என்னவாயிற்று...'' என்று ஆறுதலாக கேட்டது, காளை.
''சாதாரணமானவர்கள் நன்றி கெட்டவர்களாக இருந்தால், சரி போகட்டும் என்று விட்டுவிடலாம். ராஜாவே நன்றி இல்லாமல் இருந்தால் என்ன செய்வது...'' என்று சோகத்தோடு பேசியது நரி.
''ராஜாவா... யார் சிங்க ராஜாவையா சொல்கிறாய்...'' என்று குழப்பத்தோடு கேட்டது காளை.
''ஆமாம்... நாளை மிகப் பெரிய விருந்து ஒன்றுக்கு சிங்க ராஜா ஏற்பாடு செய்துள்ளார். அந்த விருந்துக்கு, தன் உண்மையான நண்பனைப் பலியிட்டு, கறி சமைக்க முடிவு செய்துள்ளது; இதை கேட்டதும், எனக்கு சகலமும் ஆடிப் போய் விட்டது...'' என்றது, நரி.
இதைக் கேட்டதும் காளை கலங்கி தவித்தது. தன்னை எதற்காக சிங்கம் பலியிட வேண்டும் என்று நினைத்தது.
''காட்டுக்கு ராஜா என்ன செய்தாலும், எதிர்த்துப் பேச முடியுமா...'' என்றது நரி.
இதைக் கேட்டதும், காளைக்கு ஆத்திரம் அதிகமானது; உண்மையான நண்பனைப் போல நடந்து விட்டு, இப்போது தன்னைக் கொல்லப் பார்க்கிறதே என நினைத்தது.
அன்று மாலையே கோபத்தோடு, சிங்க ராஜாவை பார்க்க சென்றது காளை. சிங்கமோ, காளை மீது சந்தேகத்துடன் இருந்ததால், சரியாக முகம் கொடுத்துப் பேசாமல் இருந்தது.
இதைப் பார்த்ததும், 'நரி சொன்னது உண்மை தான் போலும்' என நினைத்த காளைக்கு கோபம் வந்தது; அதன் வால் முறுக்கேறியது; கொம்பை அப்படியும், இப்படியும் அசைத்தது.
ஓரக்கண்ணால் இதைப் பார்த்த சிங்கத்திற்கு, நரி சொன்னது நினைவுக்கு வந்தது. 'உண்மையிலேயே காளை கொல்லத்தான் வருகிறது' என்று நினைத்து, அதன் மீது பாய்ந்து பயங்கரமாக தாக்கியது.
சிங்கத்தின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத காளை துடி துடித்து செத்து விழுந்தது.
ஓரமாக நின்றிருந்த நரி, உடனே, அங்கு வந்து காளை உடலை நரிகளுக்கெல்லாம் உணவாக வழங்கியது.
குட்டீஸ்... யார் என்ன சொன்னாலும் ஆராய்ந்து பார்க்கணும். அப்படி செய்யலன்னா, காளைக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும். ஜாக்கிரதையா இருங்க...
