தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மனம் தளராத ஜான் கபாட்!

மனம் தளராத ஜான் கபாட்!

மனம் தளராத ஜான் கபாட்!


PUBLISHED ON : ஜூன் 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழை நாடுகளில், கொட்டி கிடக்கும் செல்வத்தை கொண்டு வர, ஐரோப்பியர் கடல் பயணங்களில் ஆர்வம் காட்டினர்.

உலகம் உருண்டை என்று, நம்பியவர் ஜான் கபாட். கடலில் ஒரு இடத்தில் பயணத்தை துவங்கினால், துவங்கிய இடத்துக்கே, மீண்டும் வந்து விடலாம் என்று நம்பியவர்.

புதிய நிலப்பரப்புகளை காணும் ஆர்வமும், வேகமும், அவரிடம் இருந்தது. முஸ்லீம்களின் புனித ஸ்தலமான, மெக்காவுக்கு போன, கபாட், துார கிழக்கு நாடுகளுக்கு செல்ல, ஐரோப்பாவின் மேற்கு திசையில் கடலில் புதிய வழித்தடம் காண வேண்டும் என்ற உறுதியோடு, தாயகம் திரும்பினார்.

அந்த காலத்தில், கடல் பயணம் என்பது, லேசான விஷயமல்ல; மன்னர்கள், பெரும் வணிகர்கள், நிலப் பிரபுக்களின் உடைமையாக கப்பல்கள் இருந்தன. அவர்கள் மனம் வைத்தால் தான், கடல் பயணம் மேற்கொள்ள முடியும். கப்பல் தவிர, பல நாட்கள் பயணத்துக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வேண்டும்.

ஐரோப்பா கண்டத்தில், ஸ்பெயினும், போர்ச்சுக்கல் நாடும், கடற்பயணம் தொடர்பாக, கபாட் தீட்டிய திட்டத்தையும் வேண்டுகோளையும் நிராகரித்து விட்டன. 'ஏதும் தெரியாத, உலகின் மேற்கு பகுதிகளை ஆராய செலவிட தயாராக இல்லை' என்று கூறி விட்டன.

இதையடுத்து, ஜான் கபாட் இங்கிலாந்துக்கு போனார். அங்கு, ஒரு வணிகர், கடல் வாணிபத்தை பெருக்க ஆர்வமாக இருந்தார். அவர், கபாட் தயாரித்த திட்டத்துக்கு, பொருளுதவி செய்வதாக வாக்களித்தார். கப்பல்களுடன், ஐரோப்பாவின் மேற்கு திசையில், பயணம் துவங்கினார் கபாட். ஆனால், புதிய நிலப்பரப்பு எதையும், காண முடியவில்லை.

கொலம்பஸ், புதிய நிலப்பரப்பை கண்டது பற்றி, கபாட் கேள்விப்பட்டிருந்தார். அவர் சென்ற பாதையை பின் தொடர்ந்து, சீனாவை அடையலாம் என்ற முடிவோடு, இங்கிலாந்துக்கு திரும்பி வந்தார். அவரது முதல் பயணம் தோல்வியில் முடிந்தது.

இங்கிலாந்தை, அப்போது, மன்னர் ஏழாம் ஹென்றி ஆண்டு வந்தார். கொலம்பஸ் புதிய நிலப்பரப்பை கண்டு பிடித்ததால், ஸ்பெயின், பொருளும், புகழும் அடைந்தது போல, தாமும் புகழ் பெற ஆசைப்பட்டார் ஹென்றி. எனவே, சீனாவை அடைய கபாட் தீட்டிய திட்டத்துக்கு, உதவ முன் வந்தார்.

கப்பல் பயணத்தின் போது, காணும் புதிய நிலப்பரப்பு, தீவுகளை இங்கிலாந்து அரசுக்கு, உடைமையாக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன், கபாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் இங்கிலாந்து மன்னர். பயணத்துக்கு தேவையான கப்பல்களையும், மாலுமிகளையும், பொருட்களையும் மன்னர் கொடுத்தார்.

இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் துறைமுகத்திலிருந்து, ஜான் கபாட், கடல் பயணத்தை, மே 2, 1497ல் துவங்கினார். 52 நாட்கள், பயணத்துக்கு பின், ஒரு முனையில் கரை இறங்கினார். அதுதான், சீனாதேசம் என்று நம்பினார்.

உண்மையில், அவர் கரை இறங்கிய பகுதி, வட அமெரிக்காவில் உள்ள, கனடா நாட்டில் இருந்தது. இப்பயணத்தின் போது, வட அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் நியூ பவுண்ட்லாந்து நிலப்பரப்பையும் கண்டார். அப்பகுதியில், ஏராளமான மீன்கள் கொழித்தன. மீன் வாணிபத்துக்கு, மகத்தான வாய்ப்பு உள்ள பகுதி என்று, இங்கிலாந்து கடல் வணிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.

அடுத்த கடல் பயணத்தை, ஐந்து கப்பல்கள், 300 மாலுமிகளுடன், கபாட் துவக்கினார்; ஜப்பானை காணும் ஆசையில் கிளம்பினார். ஏற்கனவே, சீனாவை கண்டு விட்டதாக அவர் நம்பியிருந்தார். பயணத்தின் போது பெரும் புயலில் ஒரு கப்பல் நாசமானது; ஆனாலும், மனம் தளராது பயணித்தார்.

வட அமெரிக்கா பகுதியில் உள்ள கிரீன்லாந்தை, 1498ல் அடைந்தார். அதை, லாபரடார் என்று அழைத்தார். பின்னாளில், கனடா நாட்டின் ஒரு மாகாணம் லாபரடார் என்ற பெயரை பெற்றது. பயணத்தை, வடக்கு நோக்கி தொடர்ந்தார் கபாட். அங்கு, கடல் நீர், உறைபனியால் மூடப் பட்டிருந்தது. கப்பல் பயணிப்பது சிரமமாக இருந்தது; தாங்க முடியாத குளிரால் வாடிய மாலுமிகள் கலகம் செய்தனர்.

'தொடர்ந்து பயணம் செய்ய முடியாது; கப்பல்களை திருப்ப வேண்டும்; இல்லாவிடில், வேலை செய்ய மாட்டோம்...' என்று, மாலுமிகள் ஒத்துழைக்க மறுத்தனர். வேறு வழியின்றி, கிரீன்லாந்துக்கு திரும்பினார் கபாட்; அதன் கடற்கரைப் பகுதிகளை ஆராய்ந்து, ஹட்ஸன் வளைகுடாவை கண்டார். அங்கு வசித்த செவ்விந்தியர்களுடன் வாணிபம் செய்தார். அவரது ஜப்பான் பயணம், கனவாக முடிந்தது.

உலகின், வடக்கு பகுதிகளை, முதன் முதலில் கண்டது; பிரிட்டிஷ் கொடியை, முதன் முதலில் அமெரிக்காவில் பறக்க விட்டது, போன்ற விவரங்களை, அவர் அறியவே இல்லை! ஜப்பான் செல்ல முடியாததால் ஏமாற்றமடைந்தார். வயது மூப்பால், தளர்ச்சியுடனும், 1498ல் பிரிஸ்டல் துறைமுகத்துக்கு திரும்பி வந்தார். அதே ஆண்டின் இறுதியில் இறந்தார் ஜான் கபாட்.

- வாண்டுமாமா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us