தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆவிகள் இல்லையடி பாப்பா! (6)

ஆவிகள் இல்லையடி பாப்பா! (6)

ஆவிகள் இல்லையடி பாப்பா! (6)


PUBLISHED ON : ஜூன் 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: பெரிய ராஜா அறைக்குள் காளியப்பன் சென்றான். சிறிது நேரத்தில், அந்த அறையில் இருந்து ராமுவின் தந்தை கோவிந்த நாத சிம்மர் வெ ளியே வந்தார். திகிலடைந்த சிறுவர்கள் ஓட்டம் பிடித்தனர். இனி -

''டேய் ராமு, டேவிட் எங்கடா ஓடறீங்க... நான் இங்கதான் இருக்கேன்; வாங்க,'' என்றான் ஆசாத்.

இருவரும், திரும்பி பார்த்தனர். அவன் நின்றது, நந்தவனத்துக்கும், இடுகாட்டுக்கும் இடைப்பட்ட பகுதி.

''ஏண்டா, என் மேலே அவ்வளவு கோபமா...'' என்று கேட்டான் ஆசாத்.

''ஏய்... நீ செஞ்சது நியாயமாடா...'' என்று சூடானான் ராமு.

''நீ ஒரு நம்பிக்கை துரோகி,'' என்றான் டேவிட்.

''பிரெண்ட்ஸ், கூல்... கூல்... என்ன ஆச்சு உங்களுக்கு... ஏன் என் மீது பாய்றீங்க... நான் அப்படி என்னடா தவறு செஞ்சேன். தவறு உங்களது; நியாயமா நான்தான் கோபப்படணும்,'' என்று அமைதியாக பதில் அளித்தான் ஆசாத்.

''ஏய் ஆசாத்! வாழ்வோ, சாவோ மூவரும் சேர்ந்து அனுபவிப்போம்னுதானே சத்தியம் செய்தோம். இப்ப நீ அதில் இருந்து தடம் புரண்டுட்டியேடா. இனிமே, உன்னை நாங்க எப்படி நம்புறது... நம்பிக்கை துரோகி,'' என கத்தினான் டேவிட்.

''எதுடா நம்பிக்கை துரோகம்; நான் செஞ்சதா... இல்ல நீங்க எனக்கு செஞ்சதா...'' என்று பதிலுக்கு, சத்தமிட்டான் ஆசாத்.

''காளியப்பனை நாங்களும் பார்த்தோம்... ஆசாத், நீயும் பார்த்தாய். இன்று வெள்ளிக்கிழமை; அவர் எப்போதும் புதன் கிழமை தான் பெரிய ராஜா அறையை சுத்தம் செய்து, விளக்கு ஏற்றுவார்ன்னு ராமு சொன்னான்... அப்ப அவர் ஏன் இன்னைக்கு வரணும்; இதுல ஏதோ விஷயம் இருக்கு.

''அதாவது, நாம் அவர் அறையை பார்க்க கூடாதுங்கறதுக்காக காளியப்பன் மனச உசுப்பி, வரப் பணித்திருக்கிறார். அதனால், அவரும் அங்கு வந்திருக்கிறார். இது உனக்கும் தெரிஞ்சிருக்கணும். அவர் கதவு சாத்தும் வரை நிதானத்தில் இருந்த நீ, கதவை சாத்தியதும் தலைதெறிக்க ஏன் ஓடணும்,'' என்று கேட்டான் டேவிட்.

''ஆம்... அதையே தான் நானும் கேட்க இருந்தேன்; ஆசாத், நீ செய்தது தவறு. நாங்க காளியப்பன் திரும்பி வருவதற்காக காத்திருந்தோம்; அவர் இன்று ஏன் வந்தார்னு கேட்க இருந்தோம். ஆனா, நீ எதுவுமே சொல்லாம எங்களை விட்டு ஓடினாயே அது ஏன்...'' என்றான் ராமு.

''முட்டாள்களே... மூவரும் ஒரே குறிக்கோளுக்காக உயிரை பணயம் வெச்சி வந்துள்ளோம். ஒருவருக்கு துன்பம்னா அது மத்தவங்களுக்கும் தானே... எப்போ நான் ஓடினேனோ, என் பின்னாடி நீங்களும் வந்திருக்க வேணாமா... இல்லியா... அப்ப என்ன தெரியுது... இந்த ஆசாத்தை நீங்க நம்பல்ல; என்னை நீங்க தவறா எடை போட்டுட்டீங்க... இப்போ ஒரு உண்மையை சொல்றேன்... நான் ஏன் ஓடி வந்தேன் தெரியுமா...''

''ஏன்... சொல்லு சொல்லு...'' அவசரப் படுத்தினான் டேவிட்.

''காளியப்பன் மரியாதையா முழுவேட்டியை தொங்கவிட்டு, நெத்தியில சந்தனம் குங்குமம் இட்டு, இடுப்பில் துண்டை சுற்றி வந்தார் அல்லவா...''

''ஆமாம்... அப்படித்தான் வருவார்... இதில் என்ன அதிசயம் இருக்கு,'' என்றான் ராமு.

''அவசரப்படாதே... காளியப்பன் நம்மை முறைத்து பார்த்தார். பின் பெரிய ராஜா அறைக்கு சென்றார். அது வரைக்கும் தான் நீங்க பாத்திருப்பீங்க... ஆனா, நான் தனியா இருந்ததால, இன்னும் அதிகமா பாத்தேன். அவர் இடுப்பில சுற்றியிருந்த துண்டை உதறி தோளில போட்டுட்டு, தொங்க விட்டிருந்த வேட்டியை மடிச்சிக் கட்டினார். அத பாத்ததும் ஓட்டம் எடுத்தேன்,'' என்ற ஆசாத், இதயம் வேகமாக அடித்தது.

''இதில் என்ன மரியாதை குறையை கண்டாய்... அதுக்கு நீ ஏன் எங்களிடம் சொல்லிக்காம ஓடணும்,'' என்றான் டேவிட்.

''முட்டாள்களே... அவர் வேட்டிய மடிச்ச போதுதான் கவனிச்சேன். அவருக்கு இரண்டு கால்களுமே இல்ல. அப்படின்னா... அது பெரிய ராஜாவின் ஆவி,'' என்று கூறிய ஆசாத்துக்கு, மீண்டும் இதயம் படபடத்தது.

''அப்படியா... நாங்க தான் தவறு செஞ்சுட்டோம் ஆசாத்... மன்னிச்சிடு; நாங்க இருந்ததும் ஒருவிதத்தில் நல்லதா போச்சு; நாங்க நெனச்சத நீ உறுதிப் படுத்திட்டே,'' என்றான் டேவிட்.

''சரி... நீங்க ஓடிவந்தது எதுக்கு,'' என்று கேட்டான் ஆசாத்.

''நாம, காளியப்பன், பெரிய ராஜா அய்யா அறைக்கு போனதை பாத்தோம் இல்லியா. ஆனா, அதுவே அவர் ஆவி என, நீ முதலிலே தெரிஞ்சு ஓடிட்டே; நாங்க காத்திருந்தோம்; மீண்டும் அறைக்கதவு திறந்தது. ஆனா திரும்பி வந்தது காளியப்பன் இல்ல... என் தந்தை, கோவிந்த நாத சிம்மர்,'' என்றான் ராமு.

''ஓ... அப்ப பெரியராஜாவின் ஆவி, யாரிடம் வேணாலும் போகும் போலும். யாரைப் போல வேணாலும் உலாவும்... இனி ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...'' என்று ஆசாத் கூற, பின்னால் ஒரு சத்தம் கேட்டது.

மூவரும், அச்சத்துடன் திரும்பினர். காளியப்பனும், கோவிந்தநாத சிம்மரும் சிரித்து பேசிக்கொண்டு வந்தனர்.

''என்னடா ராமு... உனக்கு இந்த அரண்மனை மறந்து போச்சா... நந்தவனத்தை சுத்திக் காட்டச் சொன்னா, பெரிய ராஜா அய்யாவை புதச்ச இடுகாட்டுக்கு வந்திருக்கியே...'' என்று கேட்டார் அவன் தந்தை.

''சாரிப்பா... நாங்க சுவாரசியமா பேசிட்டே வந்ததுல பாதை மாறிட்டேன்,'' என்றான்.

''சரி சரி அதுவும் நல்லதுக்குத்தான்,'' என்ற கோவிந்த நாத சிம்மர், காளியப்பனை பார்த்தார்.

''அய்யா சொல்லுங்க,'' என்றபடி கைகட்டி நின்றான் அவன்.

''நீ பெரிய ராஜா அய்யா புதைச்ச இடத்தை இவங்களுக்கு காட்டு. அய்யா நிறைய ஆசி கொடுப்பாரு... இவங்களும் நிறைய மார்க் எடுப்பாங்க...'' என்று கூறியவர், ''என்ன தம்பிங்களா நான் சொன்னது கேட்டுச்சுல்ல... பெரிய ராஜா ஆசி வேண்டி, அவ்வளவு பேர் அவரை பார்க்க வருவாங்களாம். அவர் ஆசி கூறினா, அது அப்படியே பலிக்குமாம். என்னதான் அவர் கோபக்காரரா இருந்தாலும் ராசிக்காரராம்.

''நந்தவனத்துக்கு போக வேண்டிய நீங்க, இடுகாட்டுக்கு வந்திருக்கீங்கன்னா அதுவும் பெரிய ராஜாவோட ஆசிதான். காளியப்பனோட போங்க... பெரிய ராஜாவ வேண்டிக்கோங்க. காளியப்பா பத்திரமா இவங்களை அழச்சிட்டு வந்து, நந்தவனத்துல விட்டுரு. நேரம் ஆயிடுச்சுன்னா அரண்மனைக்கு அழச்சிட்டு வந்திடு,'' என்று கூறி சென்றார் கோவிந்த நாத சிம்மர்.

காளியப்பன், மூவரையும் அழைத்துக் கொண்டு பெரிய ராஜாவை புதைத்த இடத்துக்கு வந்தான்.

''தம்பிங்களா... நீங்க கும்பிடுங்க. நான் பக்கத்துல எங்காச்சும் பூ இருந்தா பறிச்சி வர்றேன்,'' என்று காட்டு பூக்கள் மலர்ந்திருந்த இடம் நோக்கி சென்றான்.

இவர்களை, அவன் திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றதை கவனித்தனர். அப்போது ராமுவின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

''என்னடா ஆச்சு... ஏன் இந்த நடுக்கம்... எங்க கிட்ட சொல்லுடா,'' என்றான் டேவிட்.

முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தபடி, மெல்ல கையை நீட்டி, ''அ...ங்...க... பா...ருடா,'' என்று கத்தினான் ராமு.

''ஆம்... சப்போட்டா மரம்; அதுல எவ்வளவு பழம் இருக்கு,''என்றான் டேவிட்.

அவனை பேசாதிருக்குமாறு கண்ஜாடை காட்டினான் ஆசாத்.

இன்னமும் பீதியில் இருந்தான் ராமு.

''எல்லாமே அச்சமாக இருந்தால், இந்த பணியை எடுத்திருக்கவேக்கூடாது ராமு... காவலர் வேலைக்கு சேர்ந்துட்டு, திருடனுக்கு பயந்தால் எப்படி...'' என்று ஆசாத் கூற, அதை கேட்டு, டேவிட் சிரிக்க உடன் ராமுவும் சிரித்து விட்டான்.

''ஏண்டா ராமு, உன் கனவில் இந்த பழத்தை எடுத்த போதுதானே உன்னை பெரிய ராஜாவின் ஆவி துரத்தியது. அதே போல் இந்த பழத்தை கொடுத்ததும் தானே என் அப்பாவும், மயக்கம் போட்டார் ,'' என்று கேட்டான் ஆசாத்.

''ஆம்!'' என்று தலை அசைத்தான் ராமு.

''சரி அப்படின்னா நாம அந்த மரத்தடியில போயி, ஆளுக்கு ஒரு சப்போட்டா பழம் சாப்பிடலாம்... என்னதான் நடக்குதுன்னு பாப்போம்,'' என்றான் டேவிட்.

ஒரு திகில் உணர்வுடன் ராமு சம்மதிக்க, மூவரும் சப்போட்டா மரத்தை நோக்கி ஓடினர்.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us