PUBLISHED ON : ஜூன் 15, 2018

நான், எட்டாம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம் இது. எங்கள் பள்ளி, மாணவ, மாணவியரை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
முதலில், தொட்ட பெட்டா சென்றோம்; பின், முதுமலை வனவிலங்கு சரணாலயத்துக்கு சென்றோம். அங்குள்ள மிருகங்களை காட்டிய எங்கள் வகுப்பு ஆசிரியர், 'யானைகளிடம், பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும்; சிங்கத்திடம், கம்பீரத்தை கற்றுக்கொள்ள வேண்டும்; முயலிடம், வேகத்தை கற்றுக் கொள்ள வேண்டும்...' என்று, ஒவ்வொரு மிருகமாக சுட்டிக் காட்டி, அறிவுரை கூறினார்.
அப்போது, ஒரு குறும்புக்கார மாணவன், 'சார்... நாங்க எல்லாத்தையும் மிருகங்க கிட்டே கத்துகிட்டா, உங்க கிட்ட எதை கத்துக்கிறது; அப்ப, அரசு உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது தண்டமா...' என வேடிக்கையாக கூறினான்.
இதை எதிர்பார்க்காத ஆசிரியர், அசடு வழிந்தார். பின், அதை சாதரணமாக எடுத்துக் கொண்டு, 'உங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்க, நான் முதல்ல கத்துக்கணும்...' என்று கூற, நாங்கள் சிரித்த சிரிப்புக்கு, அளவே இல்லை. இப்போது என் வயது, 53. பல ஆண்டுகளுக்கு பின்னும் இந்த சம்பவம் மனதில் பசுமையாக உள்ளது.
- என்.ஜெ.மகாலிங்கம், நீலகிரி.
