
சென்னை, மயிலாப்பூர், புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1986ல், 6ம் வகுப்பு சேர்ந்தேன். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவள் நான். அப்பாவுக்கு, குறளகத்தில் வேலை கிடைத்ததால் சென்னையில் குடியேறியிருந்தோம். புதிய இடம், பள்ளி என்பதால் மலைப்பாக இருந்தது.
வகுப்பு ஆசிரியை மீனாட்சி, நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசி தெளிய வைத்தார். அது எழுச்சியை ஏற்படுத்தியது. பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை முடித்து, பி.ஏ., இளங்கலை பட்டத்துடன், வேலை தேடிக்கொண்டிருந்தேன். தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விண்ணப்பித்தேன்.
நேர்முகத் தேர்வில், 12 பேர் கலந்துகொண்டனர். அதில், 10 பேர் முதுகலைப் பட்டமும், கணினி இயக்குவதில் தேர்ச்சியும் பெற்றிருந்தனர். அந்த தகுதியை மீறி, எனக்கு அந்த வேலை கிடைக்காது என வருந்தியபடி இருந்தேன்.
அப்போது, 'நம்பிக்கையுடன் படித்து தேர்வை எழுது...' என்று, வகுப்பு ஆசிரியை அன்று கூறியது நினைவில் வந்தது. புத்துணர்ச்சியுடன் பங்கேற்றேன். அந்த வேலை கிடைத்தது. என் வயது, 46; சொற்களால் மனதில் நம்பிக்கை விதைத்த அந்த ஆசிரியைக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
- நெல்லைநாயகி, சென்னை.

