PUBLISHED ON : மார் 12, 2022

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, நாடார் நடுநிலைப் பள்ளியில், 1968ல், 4ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியை சகுந்தலா, மாநிறத்தில் உயரமாக இருப்பார். சரளமாக ஆங்கிலம் பேசுவார்.
அன்று பாடவேளையில் சத்தமாக பேசியபடி இருந்தோம். இதை கவனித்த ஆசிரியை அதட்டியபடி, 'மாணவர்கள் மட்டும் எழுந்து வரிசையாக நில்லுங்க...' என கூறினார்.
அதன்படி நின்றதும், 'எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் புகைப் பிடிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை எனக்கு கொடுங்க...' என்று அன்பு கட்டளையிட்டார். திடீர் என அவ்வாறு கேட்டதால் ஒன்றும் புரியாமல் திகைத்தபடி, சத்தியம் செய்து கொடுத்தோம்.
பள்ளிப் படிப்பை முடித்து, மதுரை நுண்கலை கல்லுாரியில் சேர்ந்தேன். உடன் படித்தவர்கள், புகை பிடித்ததோடு, என்னையும் அதற்கு கட்டாயப்படுத்தினர். ஆசிரியைக்கு கொடுத்திருந்த உறுதியை எடுத்துரைத்து மறுத்தேன்; கேலி செய்து சிரித்தனர்.
படிப்பை முடித்து, புதுச்சேரி அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக சேர்ந்தேன். பல நெருக்கடியான சூழல்நிலையிலும் அந்த சத்தியத்தை பிடிவாதமாக காத்தேன்.
என் வயது, 63; பணி ஓய்வு பெற்றுவிட்டேன். ஆசிரியையிடம் அன்று கொடுத்த உறுதியை கடைபிடித்து நலமுடன் வாழ்கிறேன்.
- ஜெ.மணிகண்டன், புதுச்சேரி.
- தொடர்புக்கு: 94864 17111
