PUBLISHED ON : செப் 19, 2020

தென்காசி மாவட்டம், இலஞ்சி, ராமசுவாமிபிள்ளை உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
வீட்டில் பூஜையறை, விபூதிப்பையில் காசு வைத்திருப்பர். ஒருநாள், யாருக்கும் தெரியாமல், 50 காசுகள் எடுத்து, சினிமாவுக்கு போய் திரும்பி உறங்கி விட்டேன். சட்டைப் பையிலிருந்த, சினிமா டிக்கெட், என் அம்மாவின் கண்ணில் பட்டிருக்கிறது.
இரவில் நன்றாக படித்ததாக, அப்பாவிடம் கடிதம் பெற்று, வகுப்பாசிரியரிடம் தினமும் கொடுக்க வேண்டும். அதை, 'ராப்பாட சீட்டு' என்போம்.
மறுநாள் காலை, ராப்பாடச் சீட்டு தர மறுத்து, கோவிலுக்குச் சென்று விட்டார் அப்பா.
அழுதபடியே, பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணீரை துடைத்து தேற்றிய அம்மா, ஒரு துண்டு சீட்டை சட்டை பையில் திணித்து, 'ஆசிரியரிடம் கொடு...' என்றார். அது, 'ராப்பாட சீட்டு' என எண்ணி, நிம்மதியாக புறப்பட்டேன்.
சீட்டைக் கொடுத்ததும், பிரித்த ஆசிரியர் முகம் மாறியது.
'சுந்தர கணபதி ராப்பாடம் படிக்கவில்லை. பொய்யும், களவும் அவனைப் பிடித்து விட்டது. அதை விரட்ட கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, சுந்தரியம்மாள்...' என வகுப்பில் உரக்க வாசித்தார்.
என் காதில் துளை போட்டபடியே, 'என்ன ஐயரே... சினிமாவிற்கு போனீராக்கும்... துட்ட களவாண்டேராக்கும்...' என்றார்.
பயத்தில் சிறுநீர் கழித்து விட்டேன். மாணவ, மாணவியர் சிரித்தனர். கண்ணீருடன் நின்றிருந்த என்னை, 'போல... போய் காயப்போட்டு வா...' என்றார்.
வெளியில் சென்று கால்சட்டையை அலசி, உலர்த்தி அணிந்து வந்தேன். அன்றுடன் களவும், பொய்யும் காணாமல் போனது.
தற்போது, என் வயது, 68; பெண்டுலம் மூலம் ஜோதிடத் தொழில் செய்கிறேன். பொய், புரட்டு இன்றி மக்களின் அன்பைப் பெற்று வாழ்கிறேன்.
- சுந்தர கணபதி, விருதுநகர்.
தொடர்புக்கு: 93607 61661
