PUBLISHED ON : ஜூன் 29, 2018

தங்கத்துக்கு அடுத்து, மனிதனை மோகத்தால், அடிமைப்படுத்திய உலோகம் வெள்ளி. தங்கத்தை போலவே, மனித வாழ்க்கையில் மகத்தான சம்பவங்களால், திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆசாபாசங்களை, கோபதாபங்களை உருவாக்கி இருக்கிறது. சாம்ராஜ்யங்களை உருவாக்கி இருக்கிறது; அழித்தும் இருக்கிறது. தங்கத்தைப்போல், பல குணங்களைக் கொண்ட, இந்த உலோகத்தின் நிறம் வெள்ளை.
உலக நாடுகளை, பணிய வைத்து, முன்னேறி வந்தார் கிரேக்க மன்னர் அலெக்சாண்டர். ஆசியா கண்டத்தில் பல நாடுகளைக் கடந்து, கி.மு., 327ல் இந்தியாவிற்குள் நுழைந்தார். அவரைத் தடுத்து நிறுத்தும் வலிமை யாருக்கும் இல்லை. அப்போது, கிரேக்கப் படையை, ஒரு அபூர்வ நோய் தாக்கியது.
எந்த சக்தியாலும், வெற்றி கொள்ள முடியாத அலெக்சாண்டர் படையை, அந்த வினோத நோய் வெற்றி கொண்டது.
'இனி போரிட மாட்டோம்; நாடு திரும்ப விரும்புகிறோம்' என்ற வீரர்களின் வார்த்தைக்கு, அலெக்சாண்டர் பணிய வேண்டியதாயிற்று. இந்த மாற்றத்தை உண்டாக்கிய நோய், பரவிய காரணத்தை, 2000 ஆண்டுகளுக்கு பின், விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அலெக்சாண்டர் படையில், அதிகாரிகளை நோய் அதிகம் பாதிக்கவில்லை; சாதாரண வீரர்களை மட்டுமே பாதித்தது. இதற்கு விடையாக, வெள்ளியைக் காட்டுவது வியப்பூட்டும் உண்மை.
போரின் போது, உண்பதற்கும், குடிப்பதற்கும் சாதாரண வீரர்கள் பயன்படுத்தியது, 'டின்' என்ற தகரத்தால் செய்த குவளைகள். அதிகாரிகள், பயன் படுத்தியது வெள்ளியால் செய்த குவளைகள். சாதாரண வீரர்களை, 'காஸ்ட்ரோ இன்டஸ்டினல்' என்ற நோய் தாக்கியது. வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்திய அதிகாரிகளுக்கு, இந்த நோய் வரவில்லை.
நீரிலுள்ள, பாக்டீரியா நுண்கிருமிகளைக் கொல்லும் சக்தி, வெள்ளிக்கு உண்டு. வெள்ளி மிகக் குறைந்த அளவில், நீரில், மெதுவாக கரைகிறது, வெள்ளி பாத்திரங்களையும், குவளைகளையும் பயன்படுத்துவதால், உணவில், குடிநீரில் உள்ள பாக்டீரியா அழிக்கப்படுகிறது.
ஒரு லிட்டர் நீரை சுத்தப்படுத்த, ஒரு கிராம் வெள்ளியை, 100 கோடி பாகங்களாக பிரித்து, அதில், ஒரு பாகத்தை பயன்படுத்தினால் போதும். ஹெரடோடஸ் என்ற புராதன வரலாற்று ஆசிரியர், கி.மு., ஐந்தாம் நுாற்றாண்டிலேயே, இதை எழுதி உள்ளார்.
பாரசீக மன்னன் சைரஸ், படை எடுத்துச் செல்லும் போது, குடிநீரை, வெள்ளி பாத்திரத்தில் எடுத்துச் செல்வான். நீரில், பழுக்கக் காய்ச்சிய வெள்ளியை முக்கினால், நீர் துாய்மையாகும் என, நம் நாட்டு நுால்களில் கூறப்பட்டுள்ளது.
குடி நீருக்குப் பயன்படும் கிணறு, குளம் போன்றவற்றில், வெள்ளி நாணயங்களை வீசும் வழக்கம், பல நாடுகளில் இருந்துள்ளது.
இத்தனை உயர்வான வெள்ளியை, சில மன்னர்கள், முறைகேடாகவும் பயன்படுத்தி உள்ளனர். ஆயிரக்கணக்கான குதிரைகளுக்கு, வெள்ளியில் லாடம் அடிக்கும்படி, ரோம சக்கரவர்த்தி ஆணையிட்டார். வெள்ளி சரித்திரத்தில், இது ஒரு இழி செயல் காலம்.
வரலாற்றில், மிக கவுரமான இடத்தையே வெள்ளி பெற்றிருக்கிறது. தங்கத்துக்கு ஏற்பட்ட அபாயமும், தொல்லைகளும், வெள்ளிக்கும் ஏற்பட்டது. வெள்ளியை, சேமிக்க முற்பட்ட போது, அதைக் கொள்ளை அடிக்கவும் ஒரு கூட்டம் திட்டமிட்டது.
தங்கத்தைப் போல, மிக மிருதுவான உலோகம் வெள்ளி; வளையும் தன்மையுடையது. ஒரு கிராம் வெள்ளியில், ஒன்றரை கி.மீ., நீளத்தில் கம்பி தயாரிக்கலாம்; அதை, 0.00003 செ.மீ., கனத்தில் தகடாகவும் வார்க்க முடியும்.
சுத்த வெள்ளியின் நிறம், பளபளக்கும் வெள்ளை. லத்தீன் மொழியில் இதன் பெயர், 'அர்ஜன்டம்!' இந்த சொல், சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது. 'அர்ஜ்டா' என்ற சமஸ்கிருத சொல்லுக்கு, 'ஒளி குறைவானது' என்று பொருள்.
பெயரில் என்ன இருக்கிறது என்று நினைப்போருக்கு, ஒரு ரசமான உண்மை கதை!
கடந்த, 16ம் நுாற்றாண்டில், ஐரோப்பாவில் உள்ள, ஸ்பெயின் நாட்டுக் கடல் பயணி, ஜுவான் டியஸ்டி சோலீஸ் தென் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில், ஒரு பெரிய நதி சங்கமமாவதை கண்டார். அந்த நதிக்கு, தன் பெயரைச் சூட்டினார்.
இதற்கு, 10 ஆண்டுகளுக்கு பின், கேப்டன் செபாஸ்டியன் கபாட் இதே நதியில், உள் நாட்டுக்குள் பயணம் செய்த போது, அவரது பணியாளர்கள், அந்நாட்டுப் பூர்வ குடி மக்களிடம், ஏராளமான வெள்ளியை கைப்பற்றினர். இதை, 'ரியோ டிலா பிளாட்டா' என்றார். ஸ்பானிய மொழியில், வெள்ளி அப்பெயரால் வழங்கப்படுகிறது.
ஆனால், 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், ஸ்பானியர் ஆட்சி, துாக்கி எறியப்பட்டது. துயரத்தை மறந்து விட எண்ணிய அப்பகுதி மக்கள், வெள்ளிக்கு, தங்கள் நாட்டின் ஸ்பானியப் பெயரான, லா பிளாட்டா என்பதை, அர்ஜன்டினா என, லத்தீன் மொழிப் பெயராக மாற்றிவிட்டனர்.
வெள்ளி பெயரில் நாடு பிறந்தது இப்படித்தான். இப்படி வெள்ளியோடு தொடர்புடைய நிகழ்வுகள் ஏராளம்.
எகிப்தியர்களின் கல்லறையான பிரமிடுகளில், வெள்ளி ஆபரணங்கள் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில், கி.மு., 800ல் வெள்ளி, நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கி.மு., 700ல் கிரேக்கர்கள் வெள்ளி நாணயங்களை வார்த்திருக்கின்றனர். கி.மு., 269ல், ரோமனியர்கள் வெள்ளி நாணயங்களை வார்த்து உள்ளனர்.
தங்கக் காசுகள் தோன்றுவதற்கு, 50 ஆண்டுகளுக்கு முன்பே, ரஷ்ய நாட்டில், வெள்ளிக் காசுகள் தயாரிக்க, சீனாவிலிருந்து, வெள்ளி வாங்கியதாக குறிப்பு உள்ளது. ரஷ்யாவில் உள்ள, ஊரல் மலைத்தொடர்ப் பகுதியில் வெள்ளிச் சுரங்கங்களைக் கண்டதாக தகவல் உள்ளது.
******
* ரசாயனக்குறியீடு: Ag
* உருகு நிலை: 960.5 டிகிரி சென்டிகிரேட்
* அளவீடு: டிராய் அவுன்சு
* தங்கத்தைவிட கெட்டியானது; தாமிரத்தைவிட மெதுவானது
* தாமிரத்தைவிடக் கூடுதல் வெப்பம் ஏற்கும்
* மின்சாரத்தை கடத்தும் திறன் அதிகம்
* பிராண வாயுவால் பாதிக்கப்படாது
* கந்தகக் கலவை காற்றில் இருந்தால், பளபளப்பை இழக்கும். இதற்கு காரணம், லேசான சல்பைட் இதன் மீது படிவது தான்
* நைட்டிரிக் அமிலத்தில் மட்டுமே கரையும்
* உற்பத்தியில், முன்னிலை வகிக்கும் நாடு மெக்சிகோ
* துருப்பிடிக்காத தன்மையால், கோவில்களில், சிலைகளுக்கு கவசமாக சாத்தப்படுகிறது.
எப்படிக் கிடைக்கிறது...
கலப்படமில்லாமல், தனித் தன்மையாகவே வெள்ளி கிடைப்பதுண்டு. பொதுவாக, 'சில்வர் சல்பைட்' கனிமமாகவே கிடைக்கிறது. லெட் (ஈயம்) சல்பைட் கலந்து, 'காலனா' என்னும் தாதுப்பொருளாகவும் கிடைக்கிறது.
கி.மு., 2500ல், காலனா கனிமத்தை வெட்டி எடுத்து, உருக்கி, ஈயத்திலிருந்து, வெள்ளி பிரிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பாவில் உள்ள பவேரியா, ஸ்பெயின் நாட்டு பகுதிகளில், வெள்ளிச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய உலகமான, அமெரிக்க கண்டத்தை கண்ட பின், வெள்ளி உலோக உற்பத்தி, மெக்சிகோ, பெரு போன்ற நாடுகளுக்கு பரவியது.
உலகில் வெள்ளி பயன்பாடு...
* நாணயம் தயாரிக்க, 40 சதவீதம்
* பாத்திரங்கள், நகைகள், பல் மருத்துவம் போன்றவற்றுக்கு, 35 சதவீதம்
* புகைப்படக் கலைக்கு, 15 சதவீதம்.
* வெள்ளி குளோரைட், புரோமைட், அயோடைட் போன்றவை, ஒளியால் பாதிக்கப்படுபவை. ஆகவே, புகைப்படக் கலையில், வெள்ளி முக்கியப் பங்கு வகிக்கிறது. பிலிம், போட்டோ பேப்பர் போன்றவை உற்பத்தியில், வெள்ளிக்கு முக்கிய இடம் உண்டு
* மருந்து, அறிவியல் சோதனை, செயற்கை மழை உருவாக்குதல், கண்ணாடிகளுக்கு ரசம் பூசுதல், நுணுக்கமான இயந்திர பாகங்கள் செய்தல், அடாமிக், ரேடியோ பாகம் தயாரிக்க, 10 சதவீதம் பயன்படுகிறது.
