PUBLISHED ON : ஆக 15, 2020

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், சுவாமி சிவானந்தா உயர்நிலைப் பள்ளியில், 1967ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, வெள்ளை கதர் சட்டையும், நீல அரைக்கால் சட்டையும் சீருடையாக அணிய வேண்டும்.
திங்கள் தோறும் கொடி வணக்கம். அது முடிந்தவுடன், தேசத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் தியாகம் பற்றி, ஐந்து நிமிடம் ஒரு மாணவர் பேச வேண்டும். இது கண்டிப்புடன் கடை பிடிக்கப்பட்டது.
என்முறை வந்த அன்று, துவைத்த சீருடை கிழிந்து விட்டதால் விடுப்பு எடுத்தேன். மறுநாள், வகுப்பிற்கு சென்றதும், தலைமை ஆசிரியர் பெருமாள் அழைத்தார். 'என்ன தண்டனை தருவாரோ' என பயந்தபடியே சென்றேன்.
நடந்தவற்றை விளக்கமாக கூறினேன். அன்புடன் அருகில் அழைத்து, 'கிழிந்தால் என்ன... தைத்து அணிந்து வரவேண்டியது தானே... இனி, இது போன்ற காரணம் எல்லாம் கூறக்கூடாது...' என்று அறிவுரைத்து, புதிய சீருடை தந்து அனுப்பினார்.
அன்று முதல், எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுத்ததில்லை. தவறாது பள்ளி செல்வதை பழக்கப்படுத்திக் கொண்டேன்.
என் வயது, 68; அன்று, தலைமை ஆசிரியர் கூறிய அறிவுரையை மனதில் பதித்துள்ளேன். என் பேரன், பேத்திகளுக்கும் அதை வலியுறுத்தி வருகிறேன்.
- கி.ஜெகன்மோகன், கோவை.
தொடர்புக்கு: 77089 12512
