தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீரமங்கை (2)

வீரமங்கை (2)

வீரமங்கை (2)


PUBLISHED ON : பிப் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆற்காடு நவாபு சிவகங்கை மீது படையெடுத்து என் அரசைக் கைப்பற்றி ஆண்டு வருகிறான். அவனுடைய கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். என் மக்களை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டும். நாங்கள் அவன் மீது படையெடுக்க உங்கள் உதவி தேவை. 5,000 படை வீரர்களும் நவீன ஆயுதங்களும் தேவைப்படுகிறது. இப்போது செய்யும் உதவிக்கு இரண்டு மடங்காகப் பிரதிபலன் பின்னர் அளிக்கப்படும்' என்று அக்கடிதம் எழுதப்பட்டது.

நாட்கள் ஓடின -

திப்புவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. வேலுநாச்சியார் பொறுமையை இழக்கவில்லை. நம்பிக்கைக்கு உகந்த வீரர்கள் இருவருடன் ஆண் வேடம் அணிந்து திப்புவைச் சந்திக்கத் தானே நேரில் திண்டுக்கல்லுக்குப் புறப்பட்டாள்.

''வேலுநாச்சியார் வரவில்லையா?'' என்று வந்திருந்த மூவரையும் பார்த்துக் கேட்டார் சுல்தான்.

''இதோ, நான் இங்கிருக்கிறேனே,' என்று கூறிய வேலுநாச்சியார் ஆண் உடையைக் களைந்தாள். பின்னர், தைரியமாகத் திப்பு சுல்தான் முன் நின்று உருது மொழியில் தங்கு தடையின்றி தன் வேண்டுகோளைச் சொன்னாள். அவளுடைய வீரத்தையும், உறுதியையும், மொழி ஆற்றலையும் கண்டு அசந்து போன திப்புசுல்தான், அந்த வீர மங்கைக்கு உதவ முன்வந்தார். பொன்னும், பொருளும் கொடுத்ததோடு, நவீன ஆயுதங்களையும் வழங்கினார். குதிரைப் படைகளைத் தந்தார். மேலும், போர் வீரர்களுக்குத் தேவையான போர்ப்பயிற்சியையும் அளிக்க ஒப்புக்கொண்டார்.

திண்டுக்கல்லில் தங்கி, வேலுநாச்சியார் படைகளுக்குப் பயிற்சி அளித்தாள். வீரமுழக்கம் செய்து வீரர்களை ஊக்குவித்தாள். அப்போது அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவள் குயிலி. குயிலியின் தலைமையில் பெண்கள் படை ஒன்று தயார் செய்யப்பட்டது. தனக்காக உயிரை விட்ட உடையாள் பெயரை வேலுநாச்சியார் அந்தப் பெண்கள் படைக்குச் சூட்டினாள். எல்லா வகையிலும் திப்பு சுல்தான் உதவியாக இருந்தார். வேலு நாச்சியார் வழிபடுவதற்காக அந்தக் திண்டுக்கல் கோட்டையில் ராஜேஸ்வரி அம்மன் கோயில் ஒன்றையும் வேற்று மதத்தினரான திப்புசுல்தான் கட்டிக் கொடுத்தார்.

நவாப்பின் ஆட்சியில் குழப்பம் பெருகியது. அமைதியற்ற சூழ்நிலையில் இருந்த மக்கள் மீண்டும் வேலுநாச்சியார் அரசியாக வருவதை விரும்பினர். மறைமுகமாக அவளுக்கு மனமுவந்து உதவி செய்தனர். பல இளைஞர்களும் வேலு நாச்சியாரின் படையில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டனர். செல்வந்தர்கள் பணமும், பொருளும் கொடுத்து ஆதரவு தந்தனர்.

எட்டு ஆண்டுகள் மிகக் கவனமாக திட்டமிட்டு வேலுநாச்சியாரின் படைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. கி.பி.1780ல் நவாபையும், அவனுக்குத் துணையாக இருந்த ஆங்கிலேயரையும் எதிர்க்க பெரும்படையுடன் புறப்பட்டாள் இந்த வீரமங்கை.

கர்னல் மார்டின், கர்னல் பான்ஸோர் மற்றும் நவாப் ஆகியோர் பெரும்படையுடன் இவர்களை எதிர்த்தனர். தங்களிடமிருந்த பீரங்கிப் படையைக் கொண்டு அச்சுறுத்தினர். ஆனால், வேலுநாச்சியாரின் படை தளர்ச்சியடையவில்லை. திப்பு சுல்தான் அளித்திருந்த சிறப்பு பீரங்கிப் படை இவர்களை ஆதரித்து நித்தம், 'சக்கர வியூகம்' என அழைக்கப்பட்ட வகையில் படை வீரர்களை அமைத்து அவர்களை எதிர்த்தாள் வேலுநாச்சியார்.

அவளது படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் எதிரிப்படைகள் தடுமாறியது. தாக்குதலுக்குப் பயந்து போர்க் களத்தை விட்டு எதிரி வீரர்கள் ஓடத் தொடங்கினர். ஒளித்து வைத்திருந்த பீரங்கி படையுடன் பாய்ந்து சென்று தாக்கினாள் வேலுநாச்சியார். எதிரிகளின் அமைப்புகளைத் தகர்த்தபடியே வேலுநாச்சியார் படை சிவகங்கைக் கோட்டையை அடைந்தது.

கோட்டையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோட்டைக்குள் நுழைவது எளிதானதாக இல்லை. அப்போது வேலுநாச்சியார் புத்திசாலித்தனமாக ஒரு திட்டத்தை மேற்கொண்டாள். விஜயதசமி அன்று கோட்டைக்குள் இருக்கும் ராஜேஸ்வரி கோவிலுக்குச் சென்று வழிபட பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சேலையில் ஆயுதங்களை ஒளித்து வைத்துக் கொண்டு குயிலியின் பெண்கள் படையுடன் வேலு நாச்சியார் கோட்டைக்குள் சென்றாள்.

விஜயதசமி அன்று பூஜை செய்வதற்காக நவாப்பின் ஆயுதங்கள் ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இதை அறிந்த குயிலி தன் சேலையில் எண்ணெயை ஊற்றி தீயைப் பற்ற வைத்தாள். அப்படியே அந்தக் கிடங்கினுள் அவள் பாய்ந்தாள். அங்கிருந்த வெடி மருந்துகள் தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கின. அவற்றுக்கிடையே அதற்குக் காரணமாக இருந்த குயிலியின் உடல் தீயில் கருகிக் கிடந்தது. எதிரிகளின் ஆயுதங்கள் பெருமளவில் சேதமடைந்தன. தேசப்பற்றுமிக்க வேலுநாச்சியாரின் போர் வீரர்கள், கோட்டைக்குள் இருந்த எதிரி படையைத் தாக்கி தோற்கடித்தன. இத்தகைய வீரமான தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாமல் நவாப்பின் படை தோல்வி அடைந்தது.

எதிரிகளை அழித்து வெற்றிவாகை சூடினாள் வேலுநாச்சியார். அரசியாக முடிசூடிக் கொண்டாள். மக்களுக்கு எல்லா நலன்களையும் செய்து கொடுத்தார். எல்லாருடைய அன்பையும், ஆதரவையும் பெற்று நீண்ட நாட்கள் நல்லாட்சி செய்தாள் வீரமங்கை வேலுநாச்சியார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார் என்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.

முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us