
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் மாயமானார் இளவரசர். நாட்டின் எல்லைப் பகுதியில் நடமாடிய எதிரிகளை பிடிக்க சென்றது படை. கடும் பின்னடைவு ஏற்பட்டதால், படைத் தளபதி நேரடியாக களத்தில் குதித்தார். அவருடன் சென்ற வீரர்களில் பலரை காணவில்லை. அங்கு நடப்பதை அறிய முடியாமல் தடுமாற்றம் ஏற்பட்டது. இனி -
'நம் வீரர்கள் வீரமிக்கவர்கள். எதிரிகள் தாக்கும் முறையை சிறிது நேரத்திலேயே கண்டுபிடித்திருப்பர்; அதற்கேற்ப தங்களது தாக்குதல் வியூகத்தை மாற்றி அவர்களை சிதறடித்திருப்பர்...'
தளபதியிடம் விளக்கினான் மகேந்திரன்.
தப்பி வந்த வீரனைப் பார்த்தார் தளபதி.
'நீ பார்த்த போது, நம் வீரர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தனரா எதிரிகள்...'
'இல்லை. எண்ணிக்கையில், குறைவாக இருந்ததால் தான், நேரடி தாக்குதலை தவிர்த்து, மறைமுகமாக தாக்கினர்...'
'அப்படியென்றால், நம் வீரர்கள், எதிரிகளை துரத்தி சென்றிருப்பர்...'
தளபதியின் முகத்தில், மலர்ச்சி வந்தது.
'சிறிது நேரம் இங்கே காத்திருக்கலாம். குதிரைகளை மேய விடுங்கள்; எதிரிகளை துரத்தி சென்ற நம் வீரர்கள் திரும்பி வரட்டும்; ஓரிருவரையாவது சிறை பிடித்து, வருவர் என நினைக்கிறேன்...'
கூறியபடி, குதிரையிலிருந்து கீழே இறங்கினார் தளபதி.
நேரம் கடந்தது -
ஆனால், வீரர்கள் யாரும் திரும்பி வரவில்லை.
பதற்றம் தொற்றி நின்றனர் தளபதியும், சக வீரர்களும்.
'நேரம் தான் கடக்கிறது. இன்னும், நம் வீரர்கள் திரும்பி வரவில்லையே...'
கவலையுடன் கேட்டார் தளபதி.
'இந்நேரம் வீரர்கள் வந்திருக்க வேண்டும்; அந்தி சாயும் நேரம் நெருங்குகிறதே தளபதி...'
'ஆம்... வாருங்கள்... சென்று பார்க்கலாம்...'
குதிரைகளில் ஏறி, மானோடை வழியாக சென்றனர்.
நீண்ட துாரம் கடந்தும், வீரர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை.
குழப்பம் மிகுந்தது; காட்டுக்குள் நடப்பதை ஊகிக்க முடியாமல் தவித்தபடி, 'எந்த முயற்சி எடுத்தாலும், அவையெல்லாம் முட்டுக்கட்டையாகவே முடிகிறதே' என்று நினைத்தார் தளபதி. பின், சோர்வுற்ற நிலையில், 'வாருங்கள்... கோட்டைக்கு திரும்பலாம்...' என உத்தரவு பிறப்பித்தார்.
வீரர்கள், வைத்திய குழு மற்றும் உதவியாளர்களுடன் கோட்டைக்கு திரும்பி வந்தார் தளபதி.
அமைச்சரை சந்தித்து, காட்டில் நடந்ததை விவரித்தார்.
'ராஜகுருவிடம் ஆலோசித்தீர்களா...'
தளபதியை கேட்டார் அமைச்சர்.
'இல்லை அமைச்சரே... நாங்கள் வந்தது தொடர்பாக அவருக்கும், தகவல் அனுப்பியுள்ளோம்...'
'அவர் வரட்டும் தளபதி...'
ராஜகுருவுக்காக காத்திருந்தபடியே, சிந்தனையுடன் உலாவினர் அமைச்சரும், தளபதியும்.
'தளபதி... இந்த விஷயத்தில், எனக்கு எதுவோ நெருடுகிறது...'
'அமைச்சரே... அந்த நெருடல் தான் என்ன...'
'காட்டுக்குள் களமிறங்கி இருக்கும் எதிரிகளை, நம் தரப்பில் யாரெல்லாம் நேரடியாக பார்த்துள்ளனர்...'
'ஏன் கேட்கிறீர்...'
'காரணம் உள்ளது; சொல்லுங்கள்...'
'முதலில், தகவல் கூறிய ஒற்றன். அடுத்து, காட்டுக்குள் சென்ற குதிரை வீரர்களில் பிடிபட்டு தப்பி வந்த ஒருவன். அதற்கடுத்து, உளவாளிகளாக அனுப்பிய தேன் எடுக்கும் பெண்கள் மற்றும் முதியவர் என நால்வர். பின், ஆயுதங்கள் கோரி ஓலை எடுத்து சென்ற ஒற்றர்களில் ஒருவன் மற்றும் களநில மன்னருக்கு, ஓலையுடன் வைத்தியன் போல சென்ற துாதுவன். இறுதியாக, உளவு பார்க்க அனுப்பிய, என் நம்பிக்கைக்குரிய ஐவர் குழு...'
'நம்பிக்கைக்குரிய ஐவர் குழுவை கணக்கில் சேர்க்காதீர். அவர்கள், கூடாரத்தை மட்டும் தான் பார்த்துள்ளனர்; எதிரிகளை அல்ல...'
'அமைச்சரே... நீங்கள் சொல்வது சரி தான். ஐவர் குழுவை விட்டு விடலாம்; மானோடையில், எதிரிகள் இருப்பதாக கூறிய துாதுவன், அந்த இடத்திற்கு, எதிரிகளை தேடி சென்ற போது, சண்டையிட்டு தப்பி வந்த இரு வீரர்கள்...'
'மொத்தம், 11 பேர் மட்டும் தான். அப்படி தானே தளபதி...'
தளபதி தலையசைக்க, தொடர்ந்தார் அமைச்சர்.
'இவர்கள் பார்த்ததாக கூறுவது, நான்கு அல்லது ஐந்து பேர் என்ற எண்ணிக்கையில் உள்ள சிறு குழுவை தான்...'
'அவர்களிடம் பிடிபட்டு தப்பிய குதிரை வீரன் மட்டும், 50 பேரை பார்த்ததாக கூறினான்...'
'ஆனால், எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்ட வீரர்களின் கணக்கை கூறுங்கள் தளபதி...'
'தற்சமயம், மானோடையில் காணாமல் போன வீரர்களையும் சேர்த்தால், 150க்கும் மேல் இருக்கும்...'
'இதில், உங்களுக்கு ஏதும், சந்தேகம் எழவில்லையா...'
அமைச்சர் கேட்டதும், குழப்பத்துடன் பார்த்தார் தளபதி.
'காட்டுக்குள், சிறு குழுவாக இருப்போர், போர் பயிற்சி பெற்ற, 150க்கும் மேற்பட்ட நம் வீரர்களை சிறை பிடித்து செல்ல முடியுமா... ஒரு வீரனாக அல்ல... தளபதியாக சிந்தியுங்கள்...'
அமைச்சர் எழுப்பிய ஐயப்பாட்டில், அர்த்தம் இருப்பதாகவே தெரிந்தது.
'அப்படியென்றால், திரும்பாத வீரர்கள் நாட்டுக்கு, துரோகம் செய்து, எதிரிகளுடன் சேர்ந்து விட்டனர் என்கிறீர்களா...'
'உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா...'
'வேழமலை வீரர்களை, எதிரிகள் ஆசை காட்டி கவர்ந்திருப்பரோ' என சிந்தித்தார் தளபதி.
நம்ப முடியவில்லை; அதேசமயம், நடந்த நிகழ்வுகளை எண்ணினால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
'அமைச்சரே... என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை...'
குழப்பத்துடன் கூறினார் தளபதி.
- தொடரும்...
ஜே.டி.ஆர்.