தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வயலின் வனிதா! (17)

வயலின் வனிதா! (17)

வயலின் வனிதா! (17)


PUBLISHED ON : ஜூன் 21, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: இசை அமைப்பாளர் கோஸ்வாமியின் வீட்டில் திருட்டு நடைபெற்றதை கவனித்தாள் வனிதா. அதை போலீசுக்கு தெரிவிக்க போன் செய்தாள். இனி-

மறுமுனையில் அவர்கள் எடுக்கும் முன், ''ஹலோ, ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா? கோஸ்வாமி வீட்டிலே இரண்டு திருடர்கள், மாடியிலுள்ள விலை உயர்ந்த பொருள்களைத் திருடிக் கொண்டிருக்கின்றனர்... உடனே வாருங்கள்,'' என்று அறிவித்து கோஸ்வாமியின் விலாசத்தையும் கூறினாள்.

அதன் பிறகும் கூட அவள் திருப்திப்பட வில்லை.

'போலீஸ் வருவதற்குத் தாமதமானால், அதற்குள் திருடர்கள் திருடிய பொருள்களுடன் தப்பி விட்டால்? உடனே கோஸ்வாமியிடம் விஷயத்தைக் கூறி உஷார் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் திருடர்களைத் தான் பார்த்ததற்கு பலனில்லாமல் போய்விடும்' கூடத்தில் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி ஓடினாள் வனிதா.

தன்னைத் தாண்டிப் போகும் சின்னப் பெண்ணின் மீது காவல்காரனின் கவனம் அப்போதுதான் திரும்பியது.

அவன், ''ஏய், யார் நீ? உள்ளே எங்கே போகிறாய்?'' என்று பரபரத்தான்.

ஆனால், அவன் பிடியில் சிக்காமல் கூட்டத்திடையே புகுந்து, புகுந்து போனாள் வனிதா.

விருந்தாளிகளுக்கான பானங்களை ஒரு தட்டில் அடுக்கியபடி வந்து கொண்டிருந்த பட்லரின் மீது மோதிக் கொண்டாள். அவர் கையிலிருந்த தட்டு நிதானமிழக்க, அதிலிருந்த கண்ணாடி டம்ளர்கள் பானத்தோடு விரிப்பில் சரிந்து சிதற, சினிமா உலகப் பெரும் புள்ளிகள் விஷயம் புரியாமல் முகம் கடுக்க...

''ஏய்! யார் இந்தப் பொண்ணு...? இப்படி எதுக்கு உள்ளே ஓடி வர?'' என்று ஒரு குரல் அதட்டிற்று.

''நான் கோஸ்வாமியை உடனே பார்க்கணும்,'' என்றாள் வனிதா.

அவளுக்கு மூச்சு வாங்கியது. அவள் செயலினால் கூடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எல்லாருடைய பார்வையும் அவள் மீது பதிந்தது.

''யார் நீ? இதென்ன கலாட்டா? இப்படிக் குழப்பம் விளைவிக்க உனக்கு என்ன துணிச்சல்?'' என்று கேட்டு கொண்டே கோபம் கொப்பளிக்க வேகமாக வந்தார் கோஸ்வாமி.

''உங்கள் வீட்டு மாடியில் ஒரு திருடன் புகுந்திருக் கிறான். அங்குள்ள பொருள்களை ஜன்னல் மூலம், கீழே உள்ள மற்றொரு திருடனிடம் தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறான் சார். அதைக் கூறவே நான் ஓடி வந்தேன்,'' தட்டுத் தடுமாறிப் பேசினாள் வனிதா.

திருடன் என்றதும் கூட்டத்தில் பரபரப்பும், சலசலப்பும் உண்டாயிற்று.

''ஐயோ, என் சால்வையை நான் மாடியில் டிராயிங் ரூமில் தானே விட்டு வந்தேன்,'' ஒரு நடிகையின் குரல் இது.

''என் நகைப் பெட்டி...''

''என் ஸ்டீரியோ ரிகார்டர்...''

''இரவு இங்கிருந்து இப்படியே ஸ்டேஷன் போக என் சூட்கேசோடு வந்தேன். அது மாடியில் தான் இருக்கிறது!''

இப்படி ஆளாளுக்குத் தங்கள் பொருள் களை பட்டியலிட்டுப் பதறலாயினர். சிலர் மாடிக்கு ஓடினர்.

''இந்த பெண்ணை இங்கேயே வைத்திருங்கள். நான் மாடிக்குப் போய் பார்க்கிறேன்,'' என்று கோஸ்வாமி மாடிப்படிகளில் தாவினார்.

மாடி அறை காலியாக்கப்பட்டிருந்தது. எடுக்க முடிந்த எல்லா பொருள்களையும் அப்புறப்படுத்தி இருந்தனர் திருடர்கள். வெளுத்த முகத்தோடு வேதனை பிரதிபலிக்க மாடியிலிருந்து கோஸ்வாமி இறங்கி வந்த போது அத்தனை பேரும், ''இந்தப் பெண் கூறியது நிஜம்தானா?'' என்று கேட்பது போல அவரைப் பார்த்தனர். அதேசமயம், வாசலில் ஒரு ஜீப் வந்து நிற்கும் சத்தமும், பூட்ஸ்களின் ஒலியும் கேட்டது.

''நல்லவேளை போலீஸ் வந்து விட்டது!''

''எங்களுக்கு டெலிபோன் செய்த அந்தச் சின்ன பெண் எங்கே?'' என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

எல்லாரும் வனிதாவைப் பார்க்க, அவள் கூச்சத்தோடு முன்னால் வந்தாள்.

''சட்டென்றும் சமயோசிதமாகவும் செயல்பட்ட உன்னால் அந்தத் திருடர்கள் இருவரையும் திருடிய பொருள்களுடன் பிடித்து விட்டோம்,'' என்று சொல்லி இன்ஸ்பெக்டர், வனிதாவின் முதுகை வாஞ்சையோடு தட்டினார்.

''திருடு போன எங்கள் பொருள்கள் எல்லாம் கிடைத்துவிட்டதென்று சொல்லுங்கள். தேங்க் காட்,'' என்றது ஒரு குரல்.

''கைப்பற்றிய பொருள்கள் அனைத்தும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளன. நீங்கள் அங்கு வந்து அவரவர் பொருள்களை அடையாளம் காட்டி, வாங்கிச் செல்லலாம்,'' என்றார் இன்ஸ்பெக்டர்.

அத்தனை பேருடைய நன்றிப் பார்வையும் வனிதாவைக் குளிப்பாட்டின.

''குழந்தே... உன் பேரென்னமா? நாங்கள் இத்தனை பேரும் உனக்குக் கடமைப் பட்டிருக்கிறோம். நீ எப்படி அந்தத் திருடர் களைப் பார்த்தாய்?'' என்று கேட்டார் கோஸ்வாமி.

வனிதா தன் பெயரைக் கூறினாள். தான் வந்த காரணத்தைக் கூறினாள். அவர்களுடைய இசை நிகழ்ச்சியை நேரம் போனது தெரியாமல் தோட்டத்தில் நின்றபடி கேட்டு மகிழ்ந்ததை விவரித்தாள். வீட்டிலுள்ளோரின் கவனமெல்லாம் உள்ளே தொடங்க இருந்த விருந்தில் மூழ்கி இருந்த போது, இருவர் சந்தேகிக்கும்படி உள்ளே நுழைவதைப் பார்த்துதான் கண்காணித்ததையும், அவர்கள் செயலினால் அதிர்ச்சியடைந்து வீட்டிலுள்ளோரை எச்சரிக்க ஓடி வந்ததையும் குறிப்பிட்டாள்.

''போலீசுக்கு போன் செய்யணும்னு தோணித்தே அதுதான் புத்திசாலித்தனம்,'' என்று புகழ்ந்தாள் ஒரு நடிகை.

கோஸ்வாமி உடனே ஒரு காரியம் செய்தார். அங்கிருந்த ஒரு மேஜை விரிப்பை சட்டென்று உருவி எடுத்து இரு கைகளிலும் ஏந்தினார்.

''இந்தப் பெண்ணுக்கு இந்த இடத்திலேயே, இப்போதே, நாம் பரிசளிக்க வேண்டும். அவரவர் தங்கள் சட்டைப் பையில் கையை விடுங்கள் எது கைக்கு அகப்பட்டாலும் அது ஐந்து ரூபாயானாலும், ஐநூறு ரூபாயானாலும் இதில் போடுங்கள்,''என்று கூறி துண்டேந்தினார்.

அத்தனைப் பேரும் அவரவர், தங்கள் கைக்கு வந்ததை எடுத்து, எத்தனை என்று கூடப் பார்க்காமல், கோஸ்வாமி விரித்து நீட்டிய துணியில் போட்டனர். ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என பொபொலவென்று வந்து விழுந்தன ரூபாய் நோட்டுக்கள்.

''சார்...சார்... இதெல்லாம் வேண்டாம் சார்,'' தயங்கியபடி, கூறினாள் வனிதா.

ஆனால், அவள் பேச்சை யாரும் கேட்கவில்லை. எல்லாரும் அவளை மகிழ்ச்சியோடு, திருப்தியோடு, முறுவலோடு பாராட்டினர். கோஸ்வாமி விரிப்பை மேஜை மீது வைத்தார். சேர்ந்திருந்த ரூபாய் நோட்டுக்களைக் குவித்தார். எண்ணவில்லை. அதை அப்படியே வனிதாவின் இரு கைகளையும் குவித்து அதில் வைத்தார்.

அத்தனைபேரும் கை தட்டினர்.

''ரொம்ப நன்றி...'' என்று கூச்சப்பட்டாள். பேச முடியாமல் தவித்தாள் வனிதா.

'இந்த பணத்தைக் கொண்டு நான் என் வயலினை மீட்டுவிடுவேன்' என்று துள்ளிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். ஆனால், எனக்குக் கிடைத்துள்ள இப்பரிசுப் பணத்தைப் பற்றி அத்தையிடம் கூறக்கூடாது' என்றும் உறுதி செய்து கொண்டாள் வனிதா.

வனிதாவை அவள் வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறி, அவளை ஜீப்பில் ஏறிக்கொள்ளச் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

இருட்டி வெகுநேரம் ஆகி விட்டதால், இன்ஸ்பெக்டரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, தன் வீட்டு விலாசத்தைக் கூறினாள். போலீஸ் ஜீப் வனிதாவுடன் கிளம்பியது. சற்று நேரத்தில் அவள் அத்தை வீட்டின் முன்னால் போய் நின்றது.

''ரொம்ப தாங்க்ஸ் சார்,'' என்று கூறி இன்ஸ்பெக்டருக்கு விடை கொடுத்தாள் வனிதா.

ஆனால், அவர் அப்படிப் போவதாக இல்லை.

''உன் திறமையைப் பாராட்டாமல் போகலாமா?'' என்று சிரித்துக்கொண்டு, ஜீப்பிலிருந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர்.

''சார்... எனக்கு அப்பா, அம்மா இல்லை சார்,'' என்றாள் ஈன சுரத்தில் வனிதா. அவர் தன் அத்தையைச் சந்திப்பதை அவள் விரும்ப வில்லை. அதன் விளைவு என்னவாகும் என்பது அவளுக்குத் தெரியும்.

''வீட்டில் யார் இருக்கின்றனர்?'' ஆவலோடு கேட்டார் இன்ஸ்பெக்டர்.

தாய், தந்தை இல்லாத பெண் என்று அறிந்ததும், அவளிடம் அனுதாபம் ஏற்பட்டது.

''என் அத்தையிடம் வளருகிறேன்?'' என்றாள் வனிதா.

''உன் அத்தையைப் பார்க்க வேண்டும். உன்னைப் பற்றிச் சொல்ல வேண்டும்,'' என்று கூறியபடி, அவள் கையைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறினார். .

காலிங் பெல்லின் ஓசைக்குக் கதவைத் திறந்தாள் காமாட்சி. வாசலில் போலீஸ் இன்ஸ்பெக்டரையும், குனிந்த தலையோடு வனிதாவையும் கண்டவளின் முகம் இறுகியது. புருவங்கள் நெறிந்தன.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us