sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வயலின் வனிதா (18)

வயலின் வனிதா (18)

வயலின் வனிதா (18)


PUBLISHED ON : ஜூன் 28, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: திருடர்களை பிடிக்க தகவல் கொடுத்த வனிதாவை அனைவரும் பாராட்டியதோடு, தக்க சன்மானமும் கொடுத்து போலீசார் அழைத்துச் சென்றனர். இனி-

''வனிதா என்ன இது, போலீசோடு வந்திருக்கே? என்ன தகராறு?'' என்று கடுகடுத்தாள்.

''தகராறு ஏதுமில்லையம்மா... போலீசைக் கண்டாலே வேறு எண்ணம் ஏதும் தோன்றுவ தில்லை உங்களுக்கெல்லாம். திருடர்களைப் பிடிக்க இந்தப் பெண் உதவினாள். இவள் திறமைக்காக நீங்கள் பெருமைப்படலாம்,'' என்று நடந்ததைச் சுருக்கமாக விளக்கினார் இன்ஸ்பெக்டர்.

அங்கு தனக்கு அளிக்கப்பட்ட வெகு மதியைப் பற்றி அவர் கூறாதிருக்க வேண்டுமே... என்று தவித்துப் போனாள் வனிதா. நல்ல காலம் அவர் அதைக் குறிப்பிடவில்லை. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அத்தையிடம் அவர் விடைபெற்றுக் கொண்டபோது, வனிதாவை வாஞ்சையோடு முதுகில் தட்டிக் கொடுத்து விட்டுப் போனார் இன்ஸ்பெக்டர்.

அத்தையிடம் கிடைக்கப் போகும் திட்டை நினைத்து நடுங்கலாயிற்று அவள் உள்ளம்.

''பரசுராமின் கடைக்குப் போகாதே! என்று சொன்னேனில்லையா? ஆனால், என் வார்த்தையை நீ அலட்சியம் செய்து, அங்கு போய் அவர் கூறிய வேலையைச் செய்ய, கோஸ்வாமி வீட்டைத் தேடி போயிருக் கிறாய். என்ன நெஞ்சழுத்தமும், திமிருமிருந்தால் நீ இப்படிச் செய்வாய்? தருதலையான உனக்கு, சொன்ன பேச்சைக் கேட்காத அடங்காப்பிடாரிக்கு போலீஸ் பாராட்டு வேறே?'' எகத்தாளமாகத் தன் எரிக்கும் விழிகளால் சுட்டாள் காமாட்சி.

குரோதத்தோடு வனிதாவையே பார்த்துக் கொண்டு நின்ற லீலா, ''பெரிய சங்கீத மேதையோட பெண் இல்லையா? பிரபல மியூசிக் டைரக்டர் கோஸ்வாமியோட அசிஸ்டெண்டாகலாம்னு திட்டம் போட்டிருப்பா! உன் பேச்சைக் கேட்டா... உலகப் புகழ் பெற்ற வயலின் மேதையாக முடியுமா?'' என்றாள்.

''இன்றிரவு உனக்கு சாப்பாடு கிடையாது. உன் திமிரை அடக்க ஒரு வழி பண்றேன் இரு!'' என்று கூறியபடி உள்ளே போனாள் காமாட்சி.

உதட்டைப் பிதுக்கி ஒரு வெட்டு வெட்டியபடி அலட்சியமாக அம்மாவைப் பின் தொடர்ந்தாள் லீலா.

குளம் கட்டி நின்ற விழிகளை உயர்த்தி அவர்கள் போவதைப் பார்த்து, 'ஒரு நாள் நான் வயலின் இசையில் இணையற்றவ ளாக விளங்கத் தான் போகி றேன். அது சத்தியம்! இன்று கேலி பேசும் நீ, அன்று தலை குனியப் போகிறாய்' என்று மனதுக்குள் சபதம் செய்தாள் வனிதா. பட்டினிதான்; பசிதான். ஆனால், அதற்காக அவள் அத்தையிடம் போய் சாதம் போடும் படி கெஞ்சப் போவதில்லை. அத்தனை பேரின் பாராட்டும், பரிசும் அவள் பசியை மறக்கச் செய்தது. நாளைக்குப் பரசுராமிடம் போய் பணத்தைக் கொடுத்து, தன் வயலினை மீட்கப் போவதை எண்ணி, பட்டினியோடு படுத்துக் கொண்டாள்.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் அவள் தோழிகளெல்லாம் வனிதாவை பாராட்டினர். கோஸ்வாமி வீட்டில் திருடன் புகுந்ததையும், பிடிபட்டதையும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக வாசகர்களின் கவனத்தைக் கவரும்படி குறிப்பிட்டிருந்தன.

''வனிதா, நீ திருடர்களைப் பிடித்துக் கொடுத்தியாமே! பேப்பரில் உன் சமயோசித புத்தியையும், தீரத்தையும் பிரமாதமாகப் புகழ்ந்திருக்கின்றனர். உனக்கு பயமாக இல்லையா. நாங்கன்னா திருடன் என்றாலே நடுங்கி ஓடிடுவோம்,'' என்றாள் ஒரு தோழி.

''எனக்கு ஏதோ பயப்படணும்னு தோணவே இல்லை. கோஸ்வாமியின் பொருள்களைத் திருடர்கள் கொண்டு போகாமல் செய்ய வேண்டும் என்ற ஒரே நினைப்புதான் எனக்கு அப்போது இருந்தது. ஆபத்துக் காலத்தில் உடனே போலீஸ் உதவியை நாடணும்ங்கறதை டீச்சர் கூறி இருந்தது நினைவுக்கு வந்தது. அதிர்ஷ்ட வசமாக கோஸ்வாமியோட பங்களாவின் முன் வராந்தாவில் டெலிபோனைப் பார்த்தும் ஞாபகம் வரவே, செயல்பட்டேன் அவ்வளவுதான். இதுக்குப் போய் எல்லாரும் ஏகமாகப் பாராட்டுராங்க ஏன்னு தெரியல்லே,'' என்றாள் அப்பாவியாக வனிதா.

அன்று மாலை தன் தோழி சுமதியுடன் வயலினை மீட்க, பரசுராமின் கடைக்குப் போனாள். வனிதாவைக் கண்டதும், பரசுராமன் மகிழ்ச்சி பொங்க தன் இருக்கை யிலிருந்து எழுந்து வந்து வரவேற்றார்.

''வனிதாப் பொண்ணு, உன்னைப் பத்தி பத்திரிகையிலே படிச்சு சந்தோஷப்பட்டேன். அது மட்டுமா? கோஸ்வாமி காலையில் கடைக்கு வந்தார். நடந்ததைக் கூறி உன்னை ரொம்பப் பாராட்டினார்,'' என்ற அவர் அவளை அன்போடு அணைத்துக் கொண்டார்.

''இப்படி எல்லாரும் பாராட்ட நான் அப்படி என்ன சார் பெரிய தீரச்செயல் புரிந்து விட்டேன்? போலீசுக்கு போன் செய்தேன். அது என் கடமைதானே?'' என்றாள் அடக்கமாக வனிதா.

''நான் என் வயலினை மீட்க, பணத்துடன் வந்திருக்கேன் சார் ,'' என்று வனிதா கூறியபோது-

''உன் வயலினா... மீட்கப் போகிறாயா?'' என்று வியந்து போனார் பரசுராமன்.

பரசுராமின் கடையில் விற்பனைக்காக இருந்த வயலின், 'தன்னுடையது!' என்று வனிதா கூறியபோது அவர் வியந்தார். அதைத் திரும்ப வாங்கிக் கொள்ள விரும்பு வதாக வனிதா கூறினாள்.

''நான் வயலின் வாசிக்கக் கூடாது என்பதற்காகவே, அதை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வந்து உங்களிடம் விற்றிருக்கிறாள் என் அத்தை. அது என் அப்பாவின் வயலின். நான் அதன் மீது என் உயிரையே வைத்திருக் கிறேன். அதை என்னிடமிருந்து பறிக்கப்பட்டதை என்னால் தாங்க முடியவில்லை. அதனால்தான் நான் உங்கள் கடையைத் தேடிக் கொண்டு வந்தேன். அடிக்கடி அதைப் பார்த்துக் கொண்டாவது இருக்கலாமே என்று.

''என் அதிர்ஷ்டம், என் வயலின் அருகாமையில் இருக்க, அதைத் தொட்டு மகிழ, வாசித்து திருப்திப்பட இங்கே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. என் வயலினை நானே எப்படியாவது வாங்கிக் கொள்ளுவது என்று தீர்மானித்தேன்!'' என்றாள்.

''உன் அத்தை இந்த வயலினை என்னிடம் விற்றபோது, இதைப் பற்றி வேறு விதமாகக் கூறினாள். இந்த வயலின் அவர்கள் குடும்ப சொத்து என்றும், இது அவர்கள் குடும்பத்தில், அவள் வாழ்க்கையில் பல சோக நிகழ்ச்சிகளுக்குக் காரணமாக இருந்த தென்றும், இனி அது தன் வீட்டில் இருக்கக் கூடாதென்றும், அதை விற்பதாகவும் கூறினார். எனக்கு இந்த மாதிரி எண்ணங் களில் நம்பிக்கை கிடையாது. வயலின் நல்ல நிலையில் நன்றாக செய்யப் பட்டதாக இருந்தது. வாங்கிக் கொண்டேன்,'' என்றார் பரசுராம்.

அந்த வயலினைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார். காணாமல் போன குழந்தை திரும்பக் கிடைத்த தாயின் பரி வோடு தன் வயலினைக் கண்டு மகிழ்ந்தாள் வனிதா.

''நீ விரும்பினால் வழக்கம் போல சனிக் கிழமைகளில் இங்கு வரலாம். உன் கவனிப்பை எதிர்பார்த்து, என் கடைப் பொருள்கள் காத்திருக்கும்,'' என்றார் பரசுராம்.

''ரொம்ப நன்றி சார்! நான் வரேன் சார்! என்று கூறியபடி தன் வயலினை மீட்டுவிட்ட பெருமையும் திருப்தியும் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்க, தன் தோழியுடன் கிளம்பி னாள். வீட்டை நெருங்க நெருங்க அவள் மகிழ்ச்சியும், மன அமைதியும் கரைய லாயிற்று. தன் அருமை வயலினை மீட்டு விட்டாள். ஆனால்... ஆனால்... அதை அத்தை வீட்டுக்குள் எப்படிக் கொண்டு போவது? காமாட்சி வயலினைப் பார்த்தால், கடையிலிருந்து அவள் அதை மீட்டதை அறிந்தால், ராட்சசியாக மாறி விடுவாளே! கவலையும், தவிப்பும் வனிதாவிடம் வேகமாக வளரலாயிற்று, என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? என்று அலைபாய்ந்த உள்ளத்தில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது.

''சுமதி! எனக்கு ஒரு உதவி செய்வியா? இந்த வயலினை நீ உன் வீட்டுக்குக் கொண்டு போ. என் அத்தை இதைக் கண்டால், மறுபடி என்னிடமிருந்து பிடுங்கி பீரோவில் வைத்துப் பூட்டி விடுவாள்,'' என்று தன் தோழியை கேட்டபோது அவள் குரல் கரகரத்தது.

''இதென்ன பெரிய கஷ்டமான காரியமா? உன் வயலினை நான் என் வீட்டில் வைத் திருந்து, நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு வருகிறேன். நீ கவலைப்படாமல் வீட்டுக்குப் போ,'' என்று வனிதாவிடமிருந்து வயலின் பெட்டியை வாங்கிக் கொண்டாள் சுமதி.

வனிதாவின் மனம் லேசாகியது. தோழியின் தோளை நன்றிப் பெருக்கோடு அழுத்திச் சிரித்தப்படி அவளிடம் விடை பெற்றாள். டீச்சரிடம் கெஞ்சிக் கேட்டு அவர் அறையில் தன் வயலினை வைத்துக் கொள்ள அனுமதி பெற்று விடலாம் என்று திட்ட மிட்டது அவள் மனம்.

'டீச்சர் ரொம்ப நல்லவர். வீட்டில் வயலின் வாசிப்பது என் அத்தைக்கு தொல்லையாக இருக்கிறது. அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுவார். ஆகவே, என் அத்தைக்குத் தொல்லை தர விரும்ப வில்லை. நான் தினமும் வீட்டில் சாதகம் செய்ய முடியாது. வகுப்பு முடிந்ததும், மாலை வேளையில் சிறிது நேரம் ஸ்கூலி லேயே பிராக்டீஸ் செய்து விட்டு, வீடு திரும்புகிறேன். அப்போதுதான் இசைக் குழுவில் என்னால் நன்றாக வாசிக்க முடியும். என் வயலினை உங்கள் அறையில் வைத்துக் கொள்ள அனுமதியுங்கள்!' என்று கேட்கலாம் என நினைத்தாள் வனிதா.

மறுநாள் சுமதி தான் கூறியபடி, வனிதாவின் வயலினை ஸ்கூலுக்குக் கொண்டு வந்து அவளிடம் ஒப்படைத்தாள். மதியம் உணவு வேளையின் போது, வனிதாவின் டீச்சர், ஆசிரியர்கள் ஓய்வறையில் தனியாக இருந்த போது, வனிதா அவரிடம் சென்றாள்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us