PUBLISHED ON : ஜூன் 28, 2013

''நான் சொன்னதைக் கேட்டதால் இதுவரை உனக்கு நன்மை ஏற்பட்டதா? தீமை ஏற்பட்டதா? என்னுடன் வருவதா இல்லையா? என்பதை நீயே முடிவு செய்துகொள். உன்னை வற்புறுத்த மாட்டேன்,'' என்றான் குள்ளன்.
அவன் குரலில் ஏக்கம் தெரிந்தது.
''நான் உன்னுடன் வருகிறேன். எது நடந்தாலும் நடக்கட்டும்,'' என்றான் பொன்னன்.
மறுநாள் பொழுது விடிந்தது. அரசனிடம் சென்ற அவன், ''அரசே! உலக அனுபவம் பெறுவதற்காகப் பல நாடுகளுக்குச் செல்லப் போகிறேன். திரும்பி வந்ததும் இளவரசியைத் திருமணம் செய்து கொள்கிறேன். என்னை இங்கேயே தங்கும்படி வற்புறுத்தாதீர்கள்,'' என்றான்.
அரசனும், இளவரசியும் கண் கலங்க அவனை வழியனுப்பி வைத்தனர்.
குள்ளனுடன் அவன் பல நாடுகளுக்குச் சென்றான். அவ்வப்போது குள்ளன் அவனுக்கு அறிவுரைகள் சொன்னான். இனிய அனுபவங்கள் பல அவனுக்கு ஏற்பட்டன.
''குள்ளனே! எப்போது நாம் நாடு திரும்பலாம்?'' என்று கேட்டான் பொன்னன்.
''இன்னும் சிறிது காலம் பொறுமையாக இரு. எல்லாம் நல்லபடி நடக்கும்,'' என்றான் குள்ளன்.
ஒருநாள் மாலை நேரத்தில் அவர்கள் இருவரும் புதிய நகரம் ஒன்றிற்கு வந்தனர். அங்கே திருவிழா நடந்து கொண்டிருந்தது. எங்கும் ஆட்டமும், பாட்டமும், கும்மாளமுமாக இருந்தது.
அவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்தபடியே நடந்தான் பொன்னன்.
''நான் இவ்வளவு காலம் தேடி அலைந்த கொடியவன் இங்கே இருக் கிறான். அவனைப் பழி வாங்க, நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும்,'' என்ற குள்ளனின் பரபரப்பான குரல் அவன் காதில் கேட்டது.
''அந்தக் கொடியவன் எங்கே இருக் கிறான்? நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் பொன்னன்.
''அவன் இப்போது பெண் வடிவத்தில் உள்ளான். கழுத்தில் பச்சைக் கைக்குட்டை அணிந்து நாட்டியம் ஆடுகிறாளே அவள் தான் மந்திரவாதி.
''நீ அவளிடம் சென்று உன்னுடன் நாட்டியம் ஆட அழை. அவளும் வருவாள். இருவரும் நாட்டியம் ஆடுங்கள். அவள் கழுத்தில் இருக்கும் கைக் குட்டையை எப்படியாவது எடு. உடனே அதைக் கிழித்து எறி,'' என்றான் குள்ளன்.
அந்த நாட்டியக்காரியிடம் சென்றான் பொன்னன்.
''அழகியே! என்னுடன் நாட்டியம் ஆட வா!'' என்று அழைத்தான்.
இருவரும் கை கோர்த்து நாட்டியம் ஆடத் தொடங்கினர்.
வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தான் பொன்னன். அவள் கழுத்திலிருந்து கைக்குட்டையை வேகமாகப் பறித்தான். ஒரு நொடிக்குள் அதைக் கிழித்து எறிந்தான்.
அதிர்ச்சி அடைந்த அவள் உயிரே போவது போல ஓவென்று அலறினாள். அங்கிருந்து ஓடத் தொடங்கினாள். நீண்ட தாடியுடைய பெரியவர் ஒருவர் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினார்.
'என்ன நடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே. மந்திரவாதிக் குள்ளனையும் காணோமே' என்று குழம்பினான் பொன்னன்.
இரவு நேரம் வந்தது. வெண்தாடி மீசையுடன் பெரியவர் ஒருவர் அவனை வணங்கினார். எல்லாரும் மதிக்கும் தோற்றத்துடன் அவர் விளங்கினார்.
''பொன்னா! நீ காப்பாற்றிய குள்ளன் நான்தான். உன் உதவியால் நான் பழைய வடிவம் பெற்றேன். எதிரியான அவன் என்னிடம் சிக்கிக் கொண்டான்.
அந்தக் கைக்குட்டையில்தான் அவன் மந்திர ஆற்றல்கள் அனைத்தும் இருந்தன. நீ அதைக் கிழித்து எறிந்தவுடன் அவன் வலிமை போய் விட்டது. அவனுக்கு அஞ்சி இனி நான் மறைந்து இருக்கத் தேவையில்லை. அதனால் என் சொந்த வடிவத்துடன் வந்துள்ளேன்,'' என்றார் மந்திர குள்ளன்.
அவரை வணங்கினான் பொன்னன்.
''பொன்னா! அந்தக் கொடிய மந்திரவாதி மூன்று இளவரசிகளையும், அவர்களின் கருவூலத்தையும் தூக்கி வந்து, எங்கோ மறைத்து வைத்துள்ளான். இந்த இரும்புத் தடி அவனிடம் இருந்து உண்மையை வர வழைக்கும். நீயும் என்னுடன் வா,'' என்றார் அவர்.
அவரைப் பின்தொடர்ந்தான் பொன்னன். அருகிலிருந்த காட்டிற்குள் சிறிது தொலைவு சென்றார் அவர். அங்கே கயிற்றால் கட்டப் பட்டுப் பந்து போலக் கிடந்தான் ஒருவன்.
''பொன்னா! இவன்தான் அந்த மந்திரவாதி,'' என்றார் அவர்.
''நீ தூக்கி வந்த இளவரசிகள் எங்கே?'' விலை உயர்ந்த கருவூலங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய். உண்மையைச் சொல், என்று தன் கையிலிருந்த தடியால் அவனை அடித்தார் மந்திரவாதி குள்ளன்.
''அடிப்பதை நிறுத்துங்க! எந்த காலத்திலோ நடந்ததை விசாரிக்கிறீர்களே. எதுவும் என் நினைவில் இல்லையே,'' என்று அலறினான் அவன்.
''அடி உதை எல்லாவற்றையும் நினை வுக்குக் கொண்டு வரும். நீ உண்மையைச் சொல்லும் வரை உன்னை விட மாட்டேன்,'' என்ற அவர் தடியில் அவனை ஓங்கி அடித்தார்.
வலி தாங்க முடியாத அவன், ''உண்மையைச் சொல்லி விடுகிறேன். இளவரசிகள் மூவரும் எப்போதோ இறந்து விட்டனர். அவர்கள் கருவூலத்தை மறைத்து வைத்திருக்கும் இடத்தைக் காட்டுகிறேன். என்னை விட்டு விடுங்கள். இனிமேல் தீய வழியில் செல்ல மாட்டேன்,'' என்று அலறினான்.
அவன் கட்டுகளை அவிழ்த்தார் அவர். அவன் வழி காட்ட இருவரும் பாதாள அறை ஒன்றை அடைந்தனர். அங்கே முத்து, பவழம், வைரங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. தங்கக் காசுகள் மலை போலக் கிடந்தன.
''உன் மந்திர ஆற்றலை எல்லாம் அழித்து விட்டேன். பிழைத்துப் போ,'' என்றார் அவர். அங்கிருந்து ஓட்டம் பிடித்தான் மந்திரவாதி.
''பொன்னா! இந்தச் செல்வக் குவியல் அனைத்தும் இனி உன்னுடையது. எனக்கு உதவி செய்ததற்கு நன்றியாக இவற்றைத் தருகிறேன். உலகத்தில் எந்த அரசனிடமும் இவ்வளவு செல்வம் கிடையாது.
இனி நீ ஏழை அல்ல. பெருமிதத்துடன் நீ இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளலாம். மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தலாம். நாம் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது,'' என்றார்.
அவருக்கு நன்றி சொன்னான் பொன்னன். ஏராளமான செல்வத்துடன் நாடு திரும்பினான். அவனைப் பார்த்ததும் இளவரசி மகிழ்ச்சி அடைந்தாள். ஒரு நல்ல நாளில் அவர்கள் இருவருக்கும் சிறப்பாகத் திருமணம் நடந்தது. நீண்ட காலம் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
முற்றும்.
