PUBLISHED ON : மே 31, 2013

இதுவரை: வனிதா வேலை செய்யும் இசைக்கருவிகள் விற்கும் கடைக்கு வந்தாள் அத்தை மகள் லீலா. இனி-
''லீலா! அது உன் மாமா பெண் வனிதா போலிருக்கே... இந்தக் கடையிலே என்னடி செய்யறா?'' என்றாள்.
அப்போதுதான் லீலாவின் கவனம் வனிதாவின் மீது பதிந்தது. அவள் விழிகள் விரிந்தன. கோபமும், குரோதமும் கலவையிட வனிதாவை வெறித்துப் பார்த்தாள்.
லீலாவின் ஈட்டிப் பார்வையில் சிக்குண்ட வனிதா, நிலைகுலைந்து போனாள். ஓடி ஒளிய முடியாத இடம். அவளைக் கண்ட அதிர்ச்சி வேறு. செய்வதறியாது குனிந்த தலையோடு கையிலிருந்த கிளாரிநெட் வாத்தியத்தை வருடியபடி நின்றாள்.
உற்சாகமாக ஏதோ வாங்குவதற்குக் குதிபோட்டபடி உள்ளே வந்த லீலா, வனிதாவையே வெறிக்கப் பார்த்தபடி சில விநாடிகள் மவுனமாக நின்றாள். பிறகு விருட்டென்று கடையிலிருந்து வெளி யேறினாள். தன் தோழிகள் தொடர, வனிதா விடம் ஏதும் கேட்கவில்லை. பரசுராமின் கடையிலும் ஏதும் வாங்கவில்லை.
உள்ளே ஏதோ இசைக் கருவியில் கவனமாக இருந்த பரசுராமன் நாலைந்து பெண்கள் கடைக்குள் புகுந்ததையும், ஆனால் ஏதும் வியாபாரம் செய்யாமல் வெளியேறிய தையும் பார்த்து, 'விசித்திரமான குழந்தைகள்! ஏதோ வாங்க வந்து, உ<ள்ளே வந்ததும் என்ன வாங்க வந்தோம் என்பதையே மறந்து போய் விட்டார்கள் போலிருக்கு... திரும்பிப் போகின்றனர். நல்லவேளை பெண்குழந்தை கள் இளைஞர்களானால் கடையை இரண்டு படுத்தி விட்டுப் போயிருப்பர்!' என்று கூறியபடி தனக்குள் சிரித்துக் கொண்டார்.
வனிதாவின் நிலை பரிதாபமாக இருந்தது. வியர்வையில் அவள் ஆடை உடலோடு ஒட்டிக்கொண்டது. லீலா போய் வெகு நேரத்துக்குப் பிறகுதான் அவள் தன் சுயநிலையை அடைந்தாள்.
லீலா அவளிடம் ஏதும் கேட்காமல் மவுன மாக போனது அவளுக்குப் பெரும் குழப்பத் தையும், பயத்தையும் உண்டாக்கியது.
'நிச்சயம் தன் அம்மாவிடம் போய் இதைச் சொல்லுவாள். அத்தை காமாட்சி அதைக் கேட்டதும் என்ன செய்வாளோ?' தவித்துப் போனாள் வனிதா.
அதன் பிறகு அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. என்ன பொருளை எடுத்தோம். அதை எங்கே வைத்தோம் என்ற நினைவே இல்லாமல் இங்கும், அங்கும் நடமாடினாள்.
''வனிதா, உன் வேலை முடிந்தால் நீ ஆசைப்படும் வயலினை எடுத்து வாசி. நன்றாக வாசிக்கிறாய், நானும் கேட்கிறேன்...'' என்றார் அவளைப் பார்க்கா மலேயே, அவள் முகத்தைப் பார்த்திருந்தால் அவர் அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்.
வனிதாவுக்கு அன்று வயலின் வாசிக்கும் எண்ணம் இல்லை. எப்படி இருக்கும்? அவள் நினைப்பெல்லாம் லீலாவும், காமாட்சியுமாக இருந்ததே!
''இல்லே சார்... இன்னிக்கு... நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும் வேலை முடிந்ததும்!'' என்றாள் வனிதா. தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு.
''அப்படியா? பரவாயில்லை... அப்போ நீ கிளம்பு! நேரமும் தான் ஆயிட்டுதே. இருட்டு வதற்குள் வீட்டுக்குப் போ!'' என்ற பரசுராமன் ஆர்மோனியக் கட்டைகளில் தன் விரல்களை ஓடவிட்டு 'சரி கம ப' ஒலிகளைச் சீராக்கு வதில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்தில் பரசுராமிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள் வனிதா. அன்று தன் அருமை வயலினை இசைத்து மகிழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதை நினைத்தபடியே, வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டை நெருங்க, நெருங்க அவள் நெஞ்சத் துடிப்பு பலமாயிற்று. வீட்டில் தனக்கு எத்தகைய வரவேற்புக் காத்திருக் கிறதோ என்ற நினைப்பு அவளைத் துவள வைத்தது. குற்றவாளிக் கூண்டில் ஏறும் கைதியைப் போல வீட்டினுள் நுழைந்தாள். இரையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கழுகுகளைப் போல, காமாட்சியும், லீலாவும் ஹாலில் அவளை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தனர். அவர் களுடைய குத்தும் பார்வையைச் சந்திக்கும் திராணி இல்லாதவளாக அவர்களைக் கடந்து செல்ல முற்பட்டாள் தலைகுனிந்தபடி.
''நில்...!'' என்று கர்ஜித்தாள் காமாட்சி.
வனிதாவின் கால்கள் பின்னிக் கொண்டன. 'தட் தட்' என்ற நெஞ்சத்துடிப்பு அவள் காதுகளையே செவிடாக்கியது.
''சூழ்ச்சிக்காரி! என்ன துணிச்சல் இருந்தா நீ இப்படியொரு காரியம் செய்வே? உடம்பு பூரா வினை... யாரைக் கேட்டு நீ கடையிலே வேலைக்குச் சேர்ந்தே?'' உறுமினாள் காமாட்சி.
வனிதா பேசவில்லை. பேசும் நிலையில் அவள் இல்லை; தலை நிமிரவும் இல்லை.
''அவள் யாரைக் கேட்கணும்?'' என்று கிளறியது லீலாவின் குரல் கேலியாக.
''உன்னை நாங்கள் பட்டினி போட்டுக் கொடுமைப் படுத்துறோம். சரியாகக் கவனிக்கவில்லை, அதனால நீ கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கேன்று ஊரிலுள்ளவங்க பேசணும்னு உன் நினைப்பு. அப்படித் தானேடி?'' என்றாள்.
பதில் சொல்லாமல் அமைதி யாக நின்றாள் வனிதா.
''பதில் சொல்லேண்டி, ஏன் பேசாம நிக்கறே கல்லு மாதிரி? அழுத்தக்காரி!''
இதற்கு மேலும் வாய் மூடி நிற்க முடியாது என்பதை உணர்ந்த வனிதா, ''நீ... நீங்க நினைக்கிறபடி யெல்லாம் இல்லை... நான் வந்து என் வயலினை மீட்பதற்காகத்தான் அதற்குப் பணம் சேர்க்கத்தான் அவர் கடையிலே...'' பேச முடியாமல், அழுகை கொப்பளிக்கலாயிற்று. சிரமப்பட்டு அழுகையை விழுங்கிக்கொண்டு தொடர்ந்தாள்.
''வாரத்திலே ஒருநாள்தான். அதுவும் சனிக்கிழமை பகலுக்கு மேலே... இசைக் கருவிகளோட உறவாடலாங்கிற ஆசை யினாலேதான் அந்த வேலைக்குப் போனேன்... நீங்க மறுப்பு சொல்ல மாட்டீங் கன்னு நினைத்துத்தான்...'' திக்கித் திணறிய படி பேசினாள் வனிதா.
''இவ பெரிய சங்கீத மேதை... வாத்தியக் கருவிகளிடையே வாழணுங்கிறதையே உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவருடைய லட்சியத்தைப் பாழாக்கி நீ அவளை இங்கே கூட்டிக்கொண்டு வந்துட்டேம்மா... அது உன் தப்பு. பாவம், அந்த இசை ஜீவி, நீரிலிருந்து வெளியே வீசப்பட்ட மீனாகத் துடிக்கிறா...'' கிண்டலும் இடக்குமாகக் கூறினாள் லீலா.
''அந்த வயலினை நீ மீட்கக் கூடாது. அந்த வயலினோட நீ இந்த வீட்டிலே இருக்கவும் முடியாது!''என்றாள் காமாட்சி.
''அத்தே!'' குரல் உடையக் கெஞ்சினாள் வனிதா.
''அத்தையுமில்லே சொத்தையுமில்லே... உன்னோட இந்த நடத்தைக்கு... சொன்ன பேச்சைக் கேட்காமல் திமிர் பிடித்து அலை வதற்கு உன்னை வீட்டை விட்டு விரட்டணும், தெரிஞ்சுதா? என் சகோதரனுக் காக, உன்னை இந்தமுறை மன்னிக்கிறேன்!''
''அத்தே ப்ளீஸ்! கெஞ்சிக் கேட்டுக்கறேன். என் வயலினை மீட்கற வரைக்கும் அவர் கடையிலே வேலை செய்யறேன். அப்புறம் போகலே... நான் வீட்டிலே வயலின் வாசிக்க மாட்டேன்; உங்களுக்குத் தொந்தரவா. வயலின் சாதகம் பண்ணலைன்னா, என் அப்பாவைப் போல வயலினில் பிரபலமடைய முடியாது. வேறு எங்காவது போய் நான் வயலின் வாசித்து சாதகம் செய்யறேன். அதுக்கு என் வயலினை மீட்க வேண்டாமா?'' பரிதாபமாகக் கெஞ்சினாள் வனிதா.
''ஓ! ராணியம்மா பெரிய வயலின் மேதையாகப் போறாங்களா? 'வயலின் வனிதா'ன்னு ஊர் உலகம் பாராட்டத் துடிச்சிட்டிருக்கிற ஒருத்தியை நீ ஏம்மா இப்படி உள்ளே அடைத்து வைச்சிக்கிட்டு...'' எகத்தாளமாகப் பேசினாள் லீலா.
இத்தனை நேரம் லட்சியமே செய்யாமல் அவள் பக்கம் திரும்பியே பார்க்காதிருந்த வனிதா, இப்போது வெறுப்பும், கோபமும் பொங்கப் பார்த்தாள்.
'கேலியா பண்ற? 'வயலின் வனிதா!' என்று ஊர் உலகம் கைதட்டி ஆரவாரமிடத் தான் போகிறது. அதை நீ பார்க்கத்தான் போறே!' என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
காமாட்சி லீலாவை முறைக்கும் வனிதாவைப் பார்த்து, ரொம்ப அமைதியாக அகம்பாவத்துடன் கூறினாள்.
''அவளை ஏன் அப்படிப் பார்க்கறே? உனக்குப் பொழுது போகலைன்னா நான் நிறைய வேலை தரேன். புரிஞ்சுதா? நீ இனிமே அந்தக் கடைக்குப் போகக்கூடாது. வயலின் நினைப்பை மறந்துடு. நான் பரசுராமன்கிட்டே இனி நீ வரமாட்டேன்னு சொல்லிடறேன் போ...'' என்று அவள் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு போனாள்.
லீலா தன் ஸ்டீரியோவில் ஒரு பாப் இசையை முடுக்கிவிட்டு, தான் வஞ்சம் தீர்த்துக் கொண்டதை வெளிப்படுத்தினாள்.
வீடே அதிரும்படி நெஞ்சு வெடித்துச் சிதறும்படி 'கோ'வென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது வனிதாவுக்கு. அப்படி அழுவதற்குக் கூட தனக்கு உரிமையில்லை. இது அந்நியப்பட்ட வீடு என்ற நினைப்பு அவள் துக்கத்தையும் கல்லாக்கியது. கண்ணீர் கூட வெளிப்படக்கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டாள். தன் அறைக்குள் போனாள். படுக்கையில் விழுந்தாள். உணர்ச்சியற்ற ஜடமாகித் தூங்கிப் போய், அவளை சாப்பிட வா என்று காமாட்சி கூப்பிடவில்லை.
வேதனை வடிந்து வெறிச்சோடிப் போன மனத்தோடு காலையில் எழுந்த வனிதாவிற்கு காமாட்சியின் கட்டளை பட்டியல் காத்திருந்தது.
-தொடரும்.
