தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டி குட்டி சைக்கிள்!

குட்டி குட்டி சைக்கிள்!

குட்டி குட்டி சைக்கிள்!


PUBLISHED ON : மே 31, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னா ஒரு ஏழைப் பையன். சிறுவயதிலேயே குடும்பத்தை காப்பாற்றும் கடமை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால், வேலை செய்யக் கிளம்பிட்டான்.

சின்னா, பக்கத்து ஊரிலிருந்த ஒரு கிழவரின் வீட்டில் வேலை செய்து வந்தான். மாதா மாதம், அவர் கொடுக்கும் சம்பளத்தை ஊருக்கு அனுப்பிவிடுவான். இப்படியே, ஒரு வருஷமாயிற்று.

ஒருநாள் சின்னாவிற்கு, தன் அம்மாவை பார்க்க வேண்டும்போல ஆசையாக இருந்தது. தன் விருப்பத்தை கிழவரிடம் சொன்ன போது, அவர் சின்னாவிடம் வாத்து ஒன்றை கொடுத்து, ''இதன் காதில் நான் சொல்லும் மந்திரத்தைச் சொன்னால், இது உடனே, ஒரு தங்க முட்டையிடும். ஆனால், நடுவழியில் எங்கேயும் தங்காதே... தங்கினாயோ வாத்தை யாராவது தட்டிக்கொண்டு போய்விடுவர்,'' என்று எச்சரித்து அனுப்பினார்.

சின்னாவும் கிளம்பினான். நடுவழியில் அவனுக்கு பசியும், தாகமும் ஏற்பட்டது. அப்போது தூரத்தில் ஒரு சிறுவீடு தென் பட்டது. அதைக் நோக்கிப் போனான். அந்த வீட்டுக்காரன் அப்போதுதான் தோசை வார்த்துக் கொண்டி ருந்தான். அதன் வாசனை சின்னாவை அந்த இடத்தை விட்டு நகரவிடாமல் செய்தது. சின்னா அங்கேயே இளைப்பாற தங்கி விட்டான். தோசை தின்று களைப்பாறிய பிறகு சின்னா, தாத்தாவின் வார்த்தையைப் பரீட்சிக்க, வாத்தை எடுத்து வைத்துக் கொண்டு, அதன் காதில் மந்திரவார்த்தையை சொன்னான். என்ன ஆச்சரியம்? அது 'டக்'கென்று ஒரு பொன்முட்டையிட்டது. அதை கதவிடுக்கின் வழியாக கவனித்துக் கொண்டிருந்தான் அந்த வீட்டுக்காரன். சின்னா தூங்கியதும், தன்னிடமிருந்த ஒரு சாதாரண வாத்தை அவன் பக்கத்தில் வைத்துவிட்டு, பொன் முட்டையிடும் வாத்தை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான்.

சின்னா வீட்டுக்குப் போனதும், அம்மாவிடம் தன் அதிசய வாத்தைப் பற்றிச் சொல்லி, பொன் முட்டையிடும் மந்திரத்தை வாத்திடம் கூறினான். ஆனால், வாத்து முட்டையிடவில்லை. அது மந்திர வாத்தாக இருந்தாலல்லவா? தான் தாத்தாவின் வார்த்தையை மறந்து, வழியில் தங்கியதை நினைத்து வருத்தமடைந்து, சின்னா மறுபடியும் தாத்தாவின் வீட்டிற்குப் போனான்.

ஒரு வருஷம் வேலை செய்தான். வருஷக் கடைசியில் ஊருக்குக் கிளம்பும் போது, தாத்தா ஒரு சின்ன சைக்கிள் வண்டியைக் கொடுத்து, ''இது மந்திர சைக்கிள்... நீ ஏறி உட்கார்ந்து, 'குட்டி குட்டி சைக்கிளே! நீ என்னைச் சுமந்து ஓடு,ஓடு சைக்கிளே!' என்று சொன்னால் சைக்கிள் தானாக ஓடும். நிற்க வேண்டுமானால், 'குட்டி குட்டி சைக்கிளே! நீ ஓட்டமாக ஓடியது போதும், நில்லு!' என்று சொல். ஆனால், போன தடவை போல வழியில் நிற்காதே,'' என்று சொல்லி அனுப்பினார்.

சின்னாவும் மந்திரத்தைச் சொல்லிவிட்டுச் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான். சைக்கிள் வெகு வேகமாகப் பறந்து சென்றது.

ஆனால், சின்னாவுக்கு பாதி வழி வந்ததும், பசி காதை அடைத்தது. அதே வீட்டிற்குப் போனான். அந்த மனிதனும் சின்னாவை அடையாளம் கண்டுக் கொண்டு, அவனை ரொம்ப உபசாரத்தோடு வரவேற்று, உணவளித்தான். சின்னா இந்த தடவை தூங்காமல் உடனே சைக்கிளில் ஏறிக்கொண்டான்.

சின்னா மந்திர வார்த்தையைச் சொன்னதும், சைக்கிள் தானாக ஓடுவதை ஒளிந்திருந்து கேட்ட அந்த மனிதன் உடனே வெளியே ஓடி வந்து, ''தம்பி! தம்பி! நேற்றுதான் லட்டு செய்தேன். ரொம்ப ருசியாக இருக்கும். வாங்கிக் கொண்டு போ... வழியில் பசித்தால் உதவியாக இருக்கும்,'' என்றழைத்தான்.

சின்னா, சைக்கிளை விட்டு இறங்கி, உள்ளே போனான். மறு நிமிஷம், சின்னாவின் மந்திர சைக்கிள் மாயமாக மறைந்தது. அந்த இடத்தில் அதேபோல ஒரு சைக்கிளை வைத்து விட்டான் அந்த ஆள். சின்னா மறுபடி வந்து ஏறிக் கொண்டு மந்திரத்தை சொன்னபோது, சைக்கிள் ஓடவில்லை.

பாவம் சின்னா, தன் வீட்டுக்கு கால் வலிக்க, அதை உருட்டிக் கொண்டே போய் சேர்ந்தான். அவனுக்கு அழுகையாக வந்தது. மறுபடி தாத்தாவை பார்க்க வெட்கமாக இருந்தது.

மந்திர சைக்கிளைத் திருடிய மனிதன், சின்னா போனதும், அதன்மேல் ஏறிக் கொண்டு, சின்னா கூறியபடியே அதனிடம் ஓடும்படி கூறினான். சைக்கிள் பறக்க ஆரம்பித்தது. வேகமாக ஓடிற்று. நாடு, நகரம், காடு, மலை எல்லாம் சுற்றி சுற்றி வந்தான். ரொம்ப களைத்துவிட்டான். ஆனால் சைக்கிள் நிற்கவே இல்லை; என்னென்னவோ, செய்து பார்த்தான். உஹூம் அது நிற்கவே இல்லை. நிற்க வைக்கும் மந்திரம் அவனுக்கு தெரிந்தால்தானே. ரொம்பக் களைப்படைந்த அந்த மனிதன் சின்னாவின் வீட்டுக்குச் சைக்கிளை கொண்டு போனான்.

சின்னா வாசலில் நின்று கொண்டிருந்தான். அவனை நெருங்கியதும், ''தம்பி! தம்பி! இந்த சைக்கிளை நிறுத்தச் சொல்லேன். நாள் கணக்கா ஓடிக்கொண்டே இருக்கே!'' என்று சொல்வதற்குள் அவனையும், அவன் வீட்டையும் தாண்டி வெகுதூரம் ஓடிவிட்டது. வெகுநேரம் சென்று, மறுபடி சின்னாவின் வீட்டை வந்து, அதே போல பரிதாபமாக வேண்டினான். இந்தத் தடவை சின்னா, ''நீதானே என் வாத்தையும் திருடிக் கொண்டவன்? வாத்து இருக்குமிடத்தைச் சொல்... சைக்கிளை நிறுத்துகிறேன்,'' என்றான்.

சைக்கிளுடன் ஓடிக் கொண்டே, ''வாத்து என் கொல்லைப்புறத்தில் ஒரு பெட்டிக்குள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே, சைக்கிளுடன் வெகு வேகமாகச் சென்று மறைந்தான் அந்தத் திருடன்.

சின்னா அவன் வீட்டிற்குச் சென்று வாத்தையும், அது இவ்வளவு நாட்களாக போட்டிருந்த பொன்முட்டைகளையும் எடுத்துக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்த போது, சைக்கிள் மறுபடி இவன் வீட்டுப் பக்கம் வெகுவேகமாக அந்த மனிதனுடன் வந்தது.

சின்னா உடனே, ''குட்டி குட்டி சைக்கிளே! நீ வேகமாக ஓடியது போதும், நில்லு!'' என்றான்.

சைக்கிளும் நின்றது. அந்த மனிதன் பொத்தென்று தரையில் விழுந்து மூர்ச்சையானான். அவனை தன் வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போய், அவன் களைப்பைப் போக்கி அனுப்பினான் சின்னா . அந்த மனிதன், 'இனி பிறர் பொருளை தொடுவதே இல்லை' என்று சபதம் செய்து கொண்டான்.

சின்னா, வாத்தையும், சைக்கிளையும் எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us