தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வயலின் வனிதா (31)

வயலின் வனிதா (31)

வயலின் வனிதா (31)


PUBLISHED ON : செப் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: ஆடிஷன் டெஸ்டில் கலந்து கொள்வதற்காக அத்தைக்கு தெரியாமல் வீட்டில் இருந்து தப்பித்து சென்றாள் வனிதா. இனி-

நேர்காணல் போட்டி நிகழும் இடத்துக்கு அருகே ஒரு சிறு கோயில். அதன் ஒரு மூலையில் ஒண்டிக் கொண்டிருந்தாள் வனிதா. காலை வேளையில் கோயிலுக்கு வருவோர் அதிகமில்லை. வருபவர்களும் அவசரமாக கடவுள் முன் கன்னத்தைத் தட்டிக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். யாரும் வனிதாவைக் கவனிக்கவில்லை.

'நேரம் நகரவே இல்லையா?' என்று தவித்தாள் வனிதா. அவளுக்கு ஒரே பரபரப்பு. திடீரென்று நேரம் வேக மாகப் போய் மணி பத்தாகாதா என்று இருந்தது.

காலை மணி 10.30. வனிதா கிழிந்து தொங்கும் தன் உடையை, அதில் உள்ள சேற்றுக் கறையை சரி செய்து கொண்டாள். பேட்டி நடக்கும் கூடத்தினுள் நுழைவதற்காக தன்னைத் தயார் படுத்திக்கொண்டாள். தைரியத்தைத் திரட்டிக் கொண்டு மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டாள்.

'என்னை எப்போது கூப்பிடுவார்களோ தெரியவில்லை. எப்போது கூப்பிட்டாலும் சரி, நான் ஹாலில் இருக்க வேண்டும். ஒருவேளை அத்தை நேற்று டெலிபோன் செய்து எனக்கு டைபாய்டு என்று பொய் கூறினாளே... அதை நம்பி இருப்பார்களோ?' இப்படி ஏதேதோ எண்ணமிட்டபடி ஆடிஷன் நடக்கும் ஹாலின் படிகளில் ஏறினாள் வனிதா.

அப்போது-

அவளது கிழிந்த அழுக்கான உடையையும், சோர்ந்த முகத்தையும் கண்ட காவல்காரன் முகம் சுருங்க அவளைப் பார்த்து, ''இங்கே எங்கே வருகிறாய்? உன்னையெல்லாம் இங்கு உள்ளே விடமாட்டாங்க... போ... போ...!'' என்றார்.

''நான்... நான் இங்கு நடக்கும் டெஸ்டில் கலந்து கொள்ள வேண்டியவள். அதற்காகத் தான் வந்திருக்கிறேன்!'' என்றாள்.

காவலாளி கேலியாகச் சிரித்தார்.

''நீயா? டெஸ்டில் கலந்து கொள்ளவா? தமாஷ் பண்றியா?''

''தமாஷில்லே நிஜம். நான் வயலின் வாசித்துக் காட்ட வந்திருக்கிறேன்!'' என்று முன்னேறினாள் வனிதா.

காவலாளி முகம் கடுக்க அவளை வழிமறித்த போது, வனிதா சட்டென்று குனிந்து தாவி அப்பால் போய் உள்ளே புகுந்து வேகமாக நடந்தாள். பிடிக்கு அகப்படாமல் உள்ளே புகுந்த சிறுமியைப் பிடிக்க, காவலாளி பரபரப்பு காட்டியபோது, மைக்கில் ஒருவர் அறிவித்துக் கொண்டிந்தார்.

''அடுத்து பங்குபெற வேண்டிய பெண் குமாரி வனிதா. எதிர்பாராதபடி டைபாய்டு நோய் வாய்பட்டதினால், இன்றைய போட்டியில் அவளால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆகவே...''

''அது பொய்! எனக்கு டைபாய்டு இல்லை... இதோ போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன் !'' என்று மூச்சு வாங்கக் கூறினாள் வனிதா.

அறிவிப்பாளரும்-பார்வையாளர்களும் திடுக்கிட்டு, வனிதாவின் மீது பார்வையைப் பதித்தனர். காவலாளி படபடப்போடு கூறினார்.

''என் தடுப்பை மீறி உள்ளே புகுந்து ஓடி வந்துட்டுது இந்தப் பொண்ணு!'' என்று குழறினார்.

''என்னம்மா... நீ யாரு?'' என்று கேட்டார் அறிவிப்பாளர். அவளின் கிழிந்த உடையும், கலைந்த கேசமும், அழுக்கும், அவர் பார்வையில் வெறுப்பைக் கலந்தது.

''என் பெயர் வனிதா, இன்றைய ஆடிஷனில் கலந்து கொள்ள வேண்டியவள்! எனக்கு டைபாய்டுன்னு பொய் சொல்லி...''

''உன் அடையாளச் சீட்டை வைத்திருக்கிறாயா?''

''இல்லை. அது என்னிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்டது!''

அரங்கில் ஒரே அமைதி. பார்வையாளர்களும், நீதிபதிகளும் வனிதாவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

''அடையாளச் சீட்டில்லாமல் நீ கலந்து கொள்ள முடியாதே!'' என்றார் அறிவிப்பாளர்.

அப்போது, ''அந்த சிறுமியை நான் அறிவேன். அவள் தான் விண்ணப்பதாரரான வனிதா. அவளை அனுமதியுங்கள். பிறகு விளக்கம் கேட்டு அறியலாம்,'' என்றார் நீதிபதிகள் வரிசையிலிருந்த கோஸ்வாமி!

வனிதாவின் முகம் மலர்ந்தது. உள்ளம் துள்ளியது. கோஸ்வாமியை நன்றியோடு பார்த்தாள்.

அறிவிப்பாளர் கோஸ்வாமியின் வார்த்தையை ஏற்றுக் கொண்டார்.

''அது சரி, நீ வயலினோடு வரவில்லையே? எப்படி வாசிப்பாய்?'' என்றார்.

''சிறைபடுத்தப்பட்டிருந்த நான் தப்பி வந்திருக்கிறேன். ஆகவே, என் வயலினைக் கொண்டு வர இயலவில்லை. தயவு செய்து எனக்கு ஒரு வயலின் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் ப்ளீஸ்...'' என்றாள் வனிதா.

அங்கு நடந்தவைகளைப் பார்த்து பிரமிப்புடன் அமர்ந்திருந்த ஒரு சிறுவன், சட்டென்று எழுந்து வந்து, தன் வயலினை வனிதாவிடம் நீட்டினான். அவன் போட்டியில் கலந்து கொண்டு, வயலின் வாசித்துக் காட்ட வந்திருந்தவன்.

சபையில் படபடவென்று உற்சாகக் கைத்தட்டல் எழுந்தது.

வனிதா புன்முறுவலினால், அந்த பையனுக்கு தன் நன்றியை தெரிவித்தாள்.

வனிதா வயலினை தன் இடது தோளில் அழுத்திக் கொண்டு, அதன் தந்திகளில் வில்லை ஓடவிட்டு 'ரிர்ரிங்!' என்று ஒலி எழுப்பியபோது, அவையில் கப்பென்று நிசப்தம் நிலவியது.

தந்தையை மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். கலைவாணியை தியானித்துக் கொண்டாள்.

திடீர் தோற்றத்தினால் சலசலப்பை ஏற்படுத்தி முக்கியத்துவம் பெற்றவளாகி விட்டாள் வனிதா. நீதிபதிகளின், பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தவளாகி விட்டாள் வனிதா. அவளுடைய வயலின் வாசிப்பில் இன்னும் சற்று நேரத்தில் தங்களையே, இழக்கப் போகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை.

வயலினின் தந்திகளோடு குழைந்து குழைந்து பேசினாள் வனிதா. ராகங்களின் வர்ணஜாலங்களைக் காட்டினாள். சப்த ஸ்வரங்களையும் வில்லினால் சுண்டி விளையாடினாள். கண்மூடி தன் வாசிப்பில் லயித்துப் போனாள். கேட்போரும் அவளது வயதுக்கு அவள் வாசிப்பு, அபாரம் என்று ஆமோதித்தனர். தங்களது தீர்ப்பை நிறுத்தாமல் கைதட்டித் தெரிவித்தனர்.

''இந்த சிறுமிக்கு இசை உலகில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது!'' என்று வாய் விட்டுப் புகழ்ந்தனர்.

முகம் கடுக்க வரவேற்ற அறிவிப்பாளர் இப்போது முகம் மலர வனிதாவிடம், ''குழந்தே! அப்படி மேடையில் போய் அமர்ந்து கொள். மற்றவர்களைப் பரீட்சித்து விட்டு, வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்!'' என்றார்.

வனிதா அந்தப் பையனிடம் அவன் வயலினைக் கொடுத்து விட்டு, மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டாள்.

போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த குழந்தைகள் ஒவ்வொருவராகத் தங்கள் திறமையைக் காட்டிவிட்டுப் போய் அமர்ந்து கொண்டனர். இன்னும் ஒரு பையன்தான் பாக்கி. அவன் தன் மிருதங்கத்தை வாசித்துக் காட்டியதும், போட்டி முடிவுக்கு வரும். வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவிப்பார்கள்.

'கடவுளே! எனக்கு நிதி உதவி கிடைக்க வேண்டும். நீதிபதிகள் என் பெயரை சிபாரிசு செய்ய வேண்டும்!' என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தாள் வனிதா.

அறிவிப்பாளர் வெற்றி பெற்றவர்களின் இசைக் கழகத்தின் நிதி உதவிக்கு சிபாரிசு செய்தவர்களின் பெயர்களை அறிவிக்க லானார். ''வாய்ப்பாட்டு வித்யா கிருஷ்ணன், வீணை கோமதி சர்மா, மிருதங்கம்-கோபி, வயலின் வனிதா,'' அவர் அறிவிப்பு, அவள் செவிகளில் தேனாக இனித்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த போது அவள் அருகில் மிருதுவான ஒரு குரல் கேட்டது.

''வனிதா பொண்ணு உனக்கு என்ன ஆச்சு? ஏன் அப்படிப் பரிதாப நிலையில் மேடைக்கு வந்தாய்?'' கோஸ்வாமியும், அன்பே உருவான அவர் மனைவியும் அவளருகே நின்று கொண்டிருந்தனர்.

தன் நிலைமையை யாரிடமும் கூற விரும்பாத வனிதா இப்போது கோஸ்வாமியிடம் கூற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டாள்.

''உனக்கு டைபாய்டு இண்டர்வியூவிற்கு வரமாட்டாள் என்று நேற்று டெலிபோன் செய்தது யார்?'' கோஸ்வாமியின் வினாவிற்கு வனிதா சுருக்கமாக விடையளித்துக் கொண்டிருந்தபோது, ஹாலின் நுழை வாசலில் புயலாகப் பாய்ந்து வந்து கொண்டிருந்தாள் அத்தை காமாட்சியும், மகள் லீலாவும்.

'தொல்லை தொடர போகிறது' என்று நடுங்கினாள் வனிதா.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us