
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 9ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
திருவாவடுதுறை மடம் சார்பில், பன்னிரு திருமுறை நுாலான தேவாரம் குறித்த போட்டி எங்கள் பள்ளியில் நடந்தது. கண்காணிப்பாளராக, அறிவியல் ஆசிரியர் சுப்பையா இருந்தார். வினா தாளுடன், விடை எழுத வெள்ளை தாளும் வழங்கிய பின், அடுத்த அறையை கவனிக்க சென்றுவிட்டார்.
இதை பயன்படுத்தி, புத்தகத்தை பார்த்து விடை எழுதினோம். சிறிது நேரத்திற்கு பின் திரும்பியவரிடம், காப்பியடித்த விபரத்தை வகுப்பு நண்பன் சீனிவாசன் கூறி விட்டான். கடும் கோபத்தில் பிரம்பால் விளாசி வெளியேற்றினார்.
மறுநாள் தனித்தனியாக அழைத்து, 'இதுபோல் செய்யக் கூடாது; காப்பியடித்து முன்னேற நினைத்தால் எதிர்காலத்தை பாதிக்கும்; கவனத்துடன் படித்து தேர்வு எழுதுவதை குறிக்கோளாக கொள்ளுங்கள்...' என அறிவுரைத்தார்.
அடுத்த ஆண்டு தீவிரமாக முயன்று, அந்த போட்டியில், இரண்டாம் பரிசு பெற்றேன்; என்னை பாராட்டி பேனா ஒன்றை பரிசளித்தார் ஆசிரியர்.
எனக்கு, 65 வயதாகிறது. வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியர் கற்றுத் தந்த நல்லொழுக்கம் வாழ்வில் உயர்த்தியுள்ளது.
- ஆர்.சங்கரன், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 97906 36765