sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சபதம்!

/

சபதம்!

சபதம்!

சபதம்!


PUBLISHED ON : நவ 08, 2013

Google News

PUBLISHED ON : நவ 08, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னப்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குக் குழந்தை குட்டி ஏதுமில்லை. மனைவி மட்டுமே இருந்தாள்.

அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இப்படித்தான் ஒருநாள் அவர்களிடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. பெரிய காரணம் ஏதுமில்லை. வீட்டுக் கதவை யார் மூடுவது என்பதில் நீயா, நானா? என்று சண்டை போட்டுக் கொண்டனர்.

அன்று இரவு, அந்த விவசாயி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கதவு தாழிடப்படாமல் இருந்ததால், வேகமாக வீசிய காற்றினால், கதவு திறந்து கொண்டது. கதவை யார் மூடுவது என்ற பிரச்னை அவர்களிடையே எழுந்தது.

''நீதான் போய் கதவை மூட வேண்டும்!'' என்று மனைவியிடம் கூறினான் கணவன்.

''இல்லை! நீங்கள் போய் மூடினால் கதவு மூடாதா என்ன?'' என்று கேட்டாள் மனைவி.

இப்படியே, நீயா, நானா? என்ற வாக்குவாதம் அவர்களிடையே முற்றிக் கொண்டே போனது.

நீண்டு கொண்டுபோன அந்த வாக்கு வாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கணவன் மனைவியிடம், ஒரு யோசனை கூறினான்.

''சரி... நீயும் போக வேண்டாம். நானும் போகப் போவதில்லை. நம்மில் யார் முதலில் பேசுகிறார்களோ, அவங்கதான் எழுந்து போய்க் கதவை மூட வேண்டும்,'' என்பதே கணவன் சொன்ன யோசனை ஆகும்.

கணவன் கூறிய யோசனையை மனைவி ஆமோதித்தாள்.

அன்று இரவு அவர்கள் எதுவும் பேசாமல் படுக்கைக்குச் சென்று விட்டனர்.

கதவு மூடப்படாமல் திறந்தே இருந்தது!

நடு இரவு...! யார் முதலில் பேசப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்ததால், தூங்காமல் ஒருவர் வாயை ஒருவர் பார்த்துக் கண் விழித்துக்கொண்டிருந்தனர்!

அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு காட்டு நாய் அந்த வழியே வந்து வீட்டின் முன் நின்று, திறந்த கதவை நெருங்கி எட்டிப் பார்த்தது. ஆள் அரவம் ஏதும் கேட்கவில்லை. அதனால், வீட்டுக்குள் நுழைந்து மிச்சம் மீதி இருந்த உணவை ருசிபார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைக் கணவனும், மனைவியும் பார்த்து ரசித்துக் கொண்டுதான் படுத்திருந்தனர். இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அவர்கள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட சபதத்தால், காட்டு நாய்க்குத்தான் நல்ல உணவு வேட்டை! அந்த நாயோ, தன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொண்டு ஆர அமர உட்கார்ந்து, இருந்த உணவு முழுவதையும் தின்றுவிட்டு, ஏப்பமிட்டபடி வந்த வழியை நோக்கித் திரும்பிச் சென்றுவிட்டது!

அடுத்தநாள்...!

விவசாயியின் மனைவி தானியம் அரைப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்குச் சென்று விட்டாள். விவசாயி மட்டும் மவுன விரதம் பூண்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தான்.

அப்போது...!

அந்த வீட்டு வழியே முடிதிருத்தும் கலைஞன் ஒருவன் போய்க் கொண்டிருந்தான். வீட்டுக் கதவு திறந்து கிடப்பதையும், உள்ளே ஒருவர் அமர்ந்து இருப்பதையும் கண்டு, வீட்டினுள் நுழைந்தான்.

விவசாயிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால், விவசாயி எதுவும் பேசவில்லை. ''ஏன் பேசாமல் இருக்கிறாய்?'' என்று கேள்வி கேட்டுச் சலித்துப் போனான்.

'இவனை எப்படியாவது பேசவைத்து, மவுன விரதத்தின் காரணத்தைக் கண்டறிய வேண்டும்' என்று தனக்குள் எண்ணினான் முடி திருத்தும் கலைஞன். உடனே கத்தியை எடுத்து, விவசாயியின் தலையைப் பிடித்து மொட்டை அடித்தான்!

விவசாயி அப்போதும் மவுனமாக இருந்தான். மூடிய வாயைத் திறக்கவில்லை!

பிறகு, ஒரு பக்கத்தில் இருந்த தாடியையும் மீசையையும் வெட்டி எறிந்தான். அப்போதும் விவசாயி தன் கடும் மவுன விரதத்தைக் கலைக்காமல் இருந்தான்.

எப்படி முயற்சித்தும் விவசாயியைப் பேச வைக்க முடியவில்லை. 'இவன் ஒரு சரியான பைத்தியம் போல் தெரிகிறது!' என்று சொல்லியபடியே, அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

அவன் போய் ஒருசில நிமிடங்கள் ஆகியிருக்கும்! அப்போது, விவசாயியின் மனைவி, மாவு அரைத்து எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்த்தாள்.

வீட்டில் நுழைந்தபோது அவள் கண்ட காட்சி...!

தன் கணவன் மொட்டைத் தலையுடன் ஒரு பக்கத்தாடியும், மீசையும் இல்லாமல் அலங்கோலமாக இருந்ததைக் கண்ட அவள், ''அய்யோ! உங்களுக்கு என்ன ஆச்சு?'' என்று அலறினாள்.

''ஆ! நீதான் முதலில் பேசினாய். போய்க் கதவைச் சாத்திவிட்டு வா...!'' என்று வெற்றிக் களிப்புடன் கூறினான் விவசாயி.

***






      Dinamalar
      Follow us