
நவம்பர் 20ம் தேதி அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும், யுனிசெப் அமைப்பானது கடந்த 1954 டிசம்பர் 14ம் தேதி முதல் கொண்டாட ஆரம்பித்துள்ளது. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஜூன் முதல் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அப்படியிருந்தும் நாம் மட்டும் ஏன் நவம்பர் 14ம் தேதியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம் தெரியுமா குட்டீஸ்... அதுக்கு முழுக்க, முழுக்க நம்ம நேரு மாமாதான் காரணம். வடக்கே சாச்சா நேரு என்றும், தெற்கில் நேருமாமா என்றும் அழைக்கப்பட்ட நம்ம சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நவம்பர் 14, 1889ம் ஆண்டு பிறந்தார். அவர் குழந்தைகள் மேல் மிகவும் பாசம் கொண்டவர். அதனால்தான் அவரோட பிறந்த தினமே இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் என்றதும் நமக்கு மொதல்ல ஞாபகம் வருவது அவருடைய வெள்ளை மனசுதான். எந்தக் கவலையுமே இல்லாம ஆடிப்பாடி விளையாடித் திரியும் அந்தப் பருவம்தான். ஆனால், இப்போதைய குழந்தைகளுக்கு ஏற்படும் அவலநிலையை பார்க்கும் போது மனது பதைக்கிறது. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் சிதைக்கப்படுவதும், ஆண் குழந்தை மோகத்தால், பெண்குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது. இது போக ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இறந்து பிறத்தல், சரியான எடையில் பிறக்காமல் இருத்தல், பிறந்த குழந்தைகளும் தாக்குப் பிடிக்க முடியாமல் சின்ன வயசுலயே இறந்து விடுகிறது. குழந்தைங்க மீது நடத்தப்படுகிற வன்முறைகள் என்று எவ்வளவோ இருக்கின்றன.
இதையும் மீறி அவங்க வளர்வதற்குள் பிரிகேஜி என்ற பெயரில் அவர்களை பள்ளியில் சேர்த்து விடுகிறோம். அதிலிருந்து கொடுமையானது அவர்கள் வேலைக்கு போகும் வரையில் தொடர்கிறது. படிப்பு என்ற பெயரில் ஒரு பெரிய மூட்டையை தோள்களில் தூக்கித் தூக்கி சிறுவயதிலேயே முதுகு வளைந்து போகிறது. அத்துடன் தோள்பட்டைகள் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் வளர்ச்சி கெடுகிறது.
'டிவி', கம்ப்யூட்டர் என்ற அரக்கன் சிறு வயதிலேயே குழந்தைகள் கெட்டுப்போகும் படியான அருவருப்புகளை போட்டு சிறு வயதிலேயே அவர்கள் கெட்டுப் போவதற்கான அத்தனை வழிகளையும் கற்றுக் கொடுத்து விடுகின்றன. இதனால் மைனர் குற்றவாளிகள் என்ற பெயரில் அநேக சிறுவர்கள், சீர்த்திருத்த ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதற்கெல்லாம் நம்ம கூட்டுக் குடும்ப கலாசாரம் அழிஞ்சிட்டு வருவதும், பள்ளியில் நடத்தப்படும் நீதி போதனை வகுப்புகள் நடப்பதில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். அந்த வகுப்புகளுக்கான நேரத்தையும், உடற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரத்தையும், மத்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கறதுதான் இப்பல்லாம் நடக்குது.
இன்றைய குழந்தைகளோடு குழந்தைப் பருவம் வகுப்பறையில் கரும்பலகை முன்னாடியும், அதன்பிறகு தொலைக்காட்சி அல்லது கணினி முன்பாக கழியுது. இதுல எங்கேயிருந்து ஓடி விளையாடுவது?
குழந்தைகளுக்கு அந்தக் காலத்துல நல்லது கெட்டது, நம்ம கலாசாரப் பண்புகள், அப்புறம் மற்றவர்களோட நல்ல உறவு முறைகளை பராமரிக்கச் சொல்லித்தரும் அனுபவப் பெட்டகங்களாக தாத்தா பாட்டிகள் இருந்தாங்க. இப்ப அவங்கல்லாம் முதியோர் இல்லத்துக்குப் போயாச்சு. கதை சொல்லும் தாத்தா பாட்டியின் இடத்தைப் இப்ப தொலைக்காட்சியும், கணினியும் பிடிச்சுக்கிட்டது.
இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும், அஸ்திவாரமாகவும் இருக்காங்க. அப்படிப்பட்டத் தூண்களைப் பலமுள்ளதா ஆக்க வேண்டியது நமது கடமை. குழந்தைகள் நலனை காப்போம். அவர்களை வாழ வைப்போம்! அவர்களது திறமைகளை வெளிக் கொணர்வோம்!
ஹாப்பி சில்ரன்ஸ்டே!