
பிரனேஷ் தன் நண்பனை பார்க்க அவன் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். அப்போது தெருக் குழாயில் ஒரு இடத்தில் தண்ணீர் வீணாக கீழே கொட்டிக் கொண்டிருந்தது.
பிரனேஷ் ஓடிச் சென்று குழாயை மூடினான். அப்போது அத்தண்ணீர் குடத்தை எடுக்க வந்தப் பெண்ணை நோக்கினான்.
''அம்மா! ஏனம்மா! தண்ணீரை வீணாக்குகிறீர்கள்! குடம் நிரம்பும் வரை நின்று குழாயை மூடி எடுத்துச் செல்லலாமே,'' என்றான்.
அதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அப்பெண், அத்தெருவைச் சேர்ந்த நான்கைந்து பெண்களையும் சேர்த்தபடி பிரனேஷிடம் சண்டை போட்டாள்.
''ஏனப்பா! இந்தத் தெருவுக்கே புதியவனாக இருக்கிறாய்! நீ இப்போது எங்களுக்கு அறிவுரைச் சொல்லிட வந்து விட்டாயா? மரியாதையாக இங்கிருந்து ஓடிவிடு!'' என்றாள் அந்தப் பெண்.
''அம்மா மன்னித்து விடுங்கள்! இந்த ஊரில் என் நண்பனைப் பார்க்க வந்தேன். வந்த இடத்தில் தான் இக்காட்சியைக் கண்டேன். தண்ணீரை நாம் வீணாக்கினால், பிறகு நமக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். அதனால்தான் தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று சொன்னேன். பிறகு உங்கள் விருப்பம்,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
ஆனால், பிரனேஷ் சொன்ன அறிவுரைகளை அந்த பெண்கள் ஏற்றுக் கொள்ளாமல் தண்ணீரை வீணாக்கினர்.
ஆறு ஏழு மாதங்களுக்குப் பின், அந்த ஊர் மக்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தினால் வாடினர். அந்நேரத்தில் பிரனேஷ், அக்கிராம மக்களுக்கு, 'டேங்க்கர்' லாரியில் குடிநீரை எடுத்துச் சென்றான்.
பிரனேஷ் அந்த ஊர் தெருவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
''நான்தான் இந்த வண்டியின் ஓட்டுனர். உங்களுக்கு நான் தாராளமாக தண்ணீர் கொடுக்கிறேன்,'' என்றான்.
தண்ணீர் குடத்துடன் வந்த பெண்கள், பிரனேஷைப் பார்த்ததும், வெட்கத்தினால் தலைகவிழ்ந்தபடி நின்றனர். பிரனேஷை திட்டியப் பெண்ணோ தன் கையிலிருந்த குடத்தை நழுவ விட்டபடி வெட்கத்தால் தலைகுனிந்தாள்.
''அம்மா! நீங்கள் ஆரம்பத்திலேயே தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியிருந்தால் உங்கள் தெருவில் தண்ணீர் பஞ்சம் வந்திருக்காது! தெருக் குழாயில் நீங்கள் பிடித்துச் செல்லும் நீரை விட, வீணாக்கும் நீரே அதிகமாகயிருக்கிறது. இனிமேலாவது தண்ணீர் சிக்கனத்தைக் கடைபிடியுங்கள்,'' என்றபடி வண்டியில் உள்ள தண்ணீரைக் கொடுத்தான்.
தன் தவறை உணர்ந்த அந்தப் பெண்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த துவங்கினர்.
குட்டீஸ் நீங்களும் தண்ணீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்துங்கள் சரியா!

