PUBLISHED ON : ஜூன் 21, 2019

என் வயது, 72. என் மகள், கல்லுாரியில் படித்த போது, சிறுவர்மலர் படித்துக் காட்டச் சொல்வாள். அவள், வேறு மாநிலத்தில் பிறந்து, வளர்ந்ததால், தமிழ் பேச மட்டுமே தெரியும்.
அவளுக்கு படித்து காட்டியே சிறுவர்மலர் எனக்கு பிடித்து விட்டது. என் இளமைக்கால வாழ்க்கையை நினைவுப்படுத்தி, மகிழ்ச்சியை தருகிறது.
அந்த காலத்தில், கூட்டுக் குடும்பமாக இருந்ததால், தாத்தா, பாட்டி வித விதமான கதைகளைக் கூறுவர். பள்ளியிலும், நீதி போதனை வகுப்புகள் உண்டு. இன்று, இந்த குறையை, சிறுவர்மலர் போக்குகிறது.
மந்திர தந்திர கதைகள், புராண கதைகள், நீதி கதைகள், ஓவியம், புதிர், சித்திரக்கதைகள் மனதிற்கு உற்சாகமளிக்கின்றன.
பல விஷயங்களை தந்து, புத்துயிரூட்டி, மாணவர்களைப் படிப்பில் ஈடுபட வைக்கிறது. சிறுவர்மலர் படைப்புகள், நாளைய உலகில், நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.
இந்த பணி, மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!
- கல்யாணி ஸ்ரீதரன், சென்னை.
