PUBLISHED ON : செப் 20, 2025

என் வயது 56; இல்லத்தரசியாக இருக்கிறேன். குடும்ப சூழ்நிலையால், 3ம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்ல இயலவில்லை. நீதி புகட்டும் கதைகள் மற்றும் சாகசம் நிறைந்த தொடர்களை படிக்க விரும்புவேன். என் அம்மா சத்துணவு பணியாளராக இருந்தார். அவர் பணிபுரியும் பள்ளியில் சிறுவர்மலர் இதழை படிப்பேன். உறவினர் வீடுகளில் கண்டாலும் தவறாமல் படிப்பேன்.
முழுதும் வாசிக்கும் முன், 'நேரமாச்சு...' என அழைத்து சென்று விடுவார் என் அம்மா. ஏமாற்றமாக இருக்கும். கடையில் பொருட்கள் கட்டித்தரும் பொட்டல காகிதங்களில் சிறுவர்மலர் பக்கங்கள் இருந்தாலும் தவறவிடாமல் படிப்பேன்.
எனக்கு, 22ம் வயதில் திருமணம் நடந்தது. புகுந்த வீட்டில் தினமலர் நாளிதழ் வாங்கும் வழக்கம் இருந்தது. அதில் இணைப்பாக வரும் சிறுவர்மலர் இதழை படிப்பது தான் என் பொழுதுபோக்கு.
குழந்தைகளுக்கு கதைகள் சொல்லவும், அறிவுரை கூறவும் சிறுவர்மலர் இதழை பயன்படுத்திக்கொண்டேன். அதில் சுவாரசியம் தரும் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறுவர்மலர் புகழ் என்றும் வளர வாழ்த்துகிறேன்.
- ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.
தொடர்புக்கு: 90925 75184

