
இரட்டையராக பிறந்தவர்கள் ராமனும், லட்சுமணனும். இருவரையும் ஒரே மாதிரியாக அன்பு செலுத்தி வளர்த்து வந்தனர் பெற்றோர்.
படிப்பில் அக்கறையுடன் இருந்தான் ராமன்.
லட்சுமணன் சற்று சோம்பலுடன் திரிந்தான்.
பாடப்புத்தகங்களை ராமன் படிக்கும் போது, லட்சுமணன், 'டிவி'யில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பான். தேர்வு நேரத்தில் படித்தால் போதும் என எண்ணி செயல்படுவான்.
பள்ளியில் ஆண்டு தேர்வு துவங்கவிருந்தது.
பாடங்களை படித்து முடித்திருந்த ராமன், நிதானமாக தேர்வை எதிர்கொள்ள தயாராகயிருந்தான்.
ஆனால், அன்று தான் புத்தகத்தை கையில் எடுத்தான் லட்சுமணன்.
சற்றுநேரம் படித்திருப்பான். கவனம் செலுத்த இயலவில்லை.
பார்த்து வந்த, 'டிவி' தொடர்களில், 'இன்று என்ன நடந்திருக்கும்; யார் ஜெயித்திருப்பர்' என்ற சிந்தனையே லட்சுமணன் மனதில் ஓடியது.
உடனே, 'சிறிது நேரம், 'டிவி' பார்த்து, பிறகு படிக்கலாம்' என முடிவு செய்து எழுந்து போனான்.
பின், அதிலே மனமொன்றி நேரம் போவதே தெரியாமல் பொழுதை கழித்தான் .
வெகுநேரம் கடந்தது.
தேர்வுக்கு முழுமையாக படிக்கவில்லை என்ற உறுத்தலால், 'சரி, இரவில் விழித்திருந்து படிக்கலாம்' என முடிவு செய்தான்.
இரவிலும் படிக்க இயலவில்லை.
துாக்கம் கண்களைத் தழுவியது.
படுத்துவிட்டான்.
ம றுநாள் -
தேர்வு அறையில் திணறலுடன் அமர்ந்திருந்த லட்சுமணன், கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழித்தான்.
அசட்டை பழக்கத்தால் தேர்வில் தவறி விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது.
பக்கத்தில் இருந்தவனை பார்த்து காப்பியடிக்க முயன்றான். இதை கவனித்த ஆசிரியர், திட்டியபடி பிரம்பால் இரண்டு அடியும் கொடுத்தார்.
எல்லார் முன்னிலையிலும் அவமானப்பட்ட லட்சுமணன், தேர்வில் தோல்வி அடைந்தான்.
ஆனால், ராமனோ வகுப்பில் முதன்மை மாணவனாக வந்து பாராட்டும், மரியாதையும் பெற்றான்.
மிகுந்த வருத்தத்தில் இருந்த லட்சுமணனிடம், ''கவலைப்படாதே... உன் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் ஜெயிக்கலாம்... நல்ல காலணி வாங்கி வைத்து விட்டால் மட்டும் போதாது. மாரத்தான் ஓட்டத்தில் ஜெயிக்க வேண்டுமானால் அதை அணிந்து ஓடிப் பழக வேண்டும்...
''மீண்டும் மீண்டும் பயிற்சி எடுக்க வேண்டும். அலுப்பு, சலிப்பால் பின்வாங்கக்கூடாது. வெற்றி பெறும்வரை கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். இதை உணர்ந்தால் ஜெயித்து மரியாதை பெறலாம்...'' என்றான் ராமன்.
வெற்றிக்கு அடிப்படை உழைப்புதான் என்பதை உணர்ந்தான் லட்சுமணன். அன்று முதல் மனம் ஊன்றி படிக்க ஆரம்பித்தான். வாழ்வில் சாதனைகள் புரிந்தான்.
பட்டூஸ்... வெற்றி ஒரே இரவில் வருவது அல்ல. அதை பெற அயராது உழைக்க வேண்டும்.
பெ.பாண்டியன்

