தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எது தியாகம்?

எது தியாகம்?

எது தியாகம்?


PUBLISHED ON : நவ 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புத்தர் சிறு மேளம் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். எங்கே சென்றாலும் அவர் அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.

வியப்படைந்த சீடர்கள், ''பெருமானே! எதற்காக இந்த மேளம்? எப்போதும் வைத்திருக்கிறீர்களே?'' என்று கேட்டனர்.

''நிறைய பேர் எனக்குத் தானம் தர வருகின்றனர். யார் பெரிய அளவில் தானம் தருகிறார்களோ அப்போது நான் இந்த மேளத்தை அடிப்பேன். அவர் தானத்தின் பெருமை உலகத்திற்குத் தெரியும்,'' என்றார் புத்தர்.

பேரரசர் ஒருவர் புத்தர் பெருமானின் சொற்பொழிவைக் கேட்டார். அதில் தன்னை மறந்த அவர், 'ஆ! பொருளைத் துறப்பது இவ்வளவு பெருமைக்கு உரியதா? என் துறவு உள்ளத்தை அறிந்து புத்தர் பெருமானே என்னைப் புகழ வேண்டும்' என்று நினைத்தார்.

அந்தப் பேரரசர் யானைகள் பலவற்றின் முதுகில் விலை உயர்ந்த ஏராளமான பொருள்களை ஏற்றினார். அவற்றை புத்தருக்குக் காணிக்கையாக வழங்குவதற்கு அரண்மனையிலிருந்து ஆரவாரத்துடன் புறப்பட்டார்.

அந்த ஊர்வலத்தின் எதிரில் வயிறு ஒட்டிப் பரிதாபமாகக் காட்சி அளித்த கிழவி ஒருத்தி வந்தாள்.

''பேரரசரே! பசி உயிர் போகிறது. இப்படியே துடித்தால் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன். உதவி செய்யுங்கள்,'' என்று கெஞ்சினாள்.

மாதுளம் பழம் ஒன்றை அவளிடம் தூக்கி எறிந்தார் அவர்.

ஊர்வலம் புத்தர் பெருமானின் இருப்பிடத்தை அடைந்தது. விலை உயர்ந்த காணிக்கைப் பொருள்களை எல்லாம் அவரின் திருவடிகளில் வைத்துப் பணிவாக வணங்கினார் பேரரசர்.

புத்தரும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.

சிறிது நேரத்தில் அந்தக் கிழவி அங்கு வந்தாள்.

தன் கையிலிருந்த மாதுளம் பழத்தைப் புத்தர் பெருமானின் திருவடிகளில் வைத்தாள்.

''பெருமானே! இதை ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்று வேண்டினார்.

புத்தர் பெருமான் தன் கையிலிருந்த மேளத்தை அடித்தார். மேளத்தின் ஒலி எங்கும் பரவியது.

'கிழவி கொடுத்த காணிக்கை மதிப்பிட முடியாதது; உயர்ந்தது; புத்தர் பெருமான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

எல்லாரும் அந்தக் கிழவியைப் பெருமையுடன் பார்த்தனர்.

அங்கிருந்த பேரரசரால் இதைத் தாங்க முடியவில்லை.

''புத்தர் பெருமானே! நான் விலை உயர்ந்த ஏராளமான பொருள்களைக் காணிக்கையாக வைத்தேன். அவற்றை விட இந்தக் கிழவி அளித்த மாதுளம் பழம் உயர்ந்ததா?'' என்று கேட்டார்.

''பேரரசே! பொருள்களின் அளவை வைத்து ஒருவரின் காணிக்கையை மதிப்பிட முடியாது. எந்த உணர்வில் எப்படிப்பட்ட நிலையில் அதைத் தருகிறார்கள் என்பதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். உம்மிடம் அதிகமாக இருந்த பொன்னையும், முத்துகளையும் காணிக்கையாகத் தந்தீர். ஆனால், பசியுடன் துடித்த இந்த மூதாட்டி, தன் உயிர் போனாலும் போகட்டும் என்று மாதுளம் பழத்தை தந்து உள்ளார். அதிகப்படியான இருப்பதைத் தருவது தியாகம் அல்ல... தன் உயிருக்கு உயிரானதையும் மிகவும் இன்றியமையாததையும் தருவதுதான் தியாகம்,'' என்று அவருக்கு விளக்கினார் புத்தர்.

வெட்கத்தில் தலைகுனிந்தார் அரசர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us