PUBLISHED ON : மார் 21, 2020

குளத்தின் அருகே வலை விரித்து, சிறிது தானியங்களை போட்டிருந்தான் வேடன். வலையில் சிக்கிய பறவைகள், வேடன் கையில் சிக்காதவாறு வலையுடன் பறந்தன. அவற்றை தொடர்ந்து ஓடிய வேடனை பார்த்த முதியவர், 'எங்கே ஓடுகிறாய்...' என்றார்.
'பறவைகளைப் பிடிக்க ஓடுகிறேன்...'
'உயரப் பறப்பவற்றை தரையில் ஓடிப் பிடித்து விட முடியுமா...'
'வலையில், ஒரு பறவை மட்டும் இருந்தால் பிடிக்க இயலாது; ஆனால், ஏராளமாக உள்ளன; மாலை வந்தால் பிடித்து விடுவேன்...' என்று கூறியபடி, சோர்வு அடையாமல் பின் தொடர்ந்தான்.
மாலை வேளை வந்தது. பறவைகள், கூடுகளுக்கு விரைந்தன. ஒவ்வொன்றும் ஒரு திசையில், வலையை இழுத்து பறக்க முயன்றன. ஒன்று காட்டை நோக்கியது; இன்னொன்று மரத்தை நோக்கியது; மற்றொன்று, வயலை நோக்கி இழுத்தது.
அவற்றின் எண்ணம் நிறைவேறவில்லை. ஒற்றுமை குலைந்ததால், வலையோடு தரையில் விழுந்தன. மகிழ்ச்சியடைந்த வேடன், அவற்றை பிடித்து, கூடையில் அடைத்துக் கொண்டு சென்றான்.
குழந்தைகளே... ஒற்றுமை இல்லாவிட்டால், வலையில் சிக்கிய பறவைகளைப் போல் கஷ்டப்பட வேண்டியது தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணருங்கள்.
