PUBLISHED ON : அக் 07, 2016

ஆக்ரா நகரில், கேசவ சர்மா என்றொரு அந்தணர் இருந்தார். அவர் மிகவும் கோபக்காரர்.
ஒருநாள்-
அவர் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, உணவில் தலைமுடி ஒன்று இருந்து விட்டது. இதை பார்த்த கேசவ சர்மா, மிகவும் கோபம் கொண்டவராய் சாப்பாட்டை உதறிவிட்டு, ''இன்னொரு முறை இம்மாதிரி உணவில் தலைமுடி இருந்தால் உன் தலையை மழுங்க மொட்டையடித்து விடுவேன்,'' என்று மனைவியை பார்த்துக் கூறினார்.
அன்று முதல் அவருடைய மனைவியும், எச்சரிக்கையுடன் இருந்தாள். அவ்வாறு இருந்தும், மீண்டும் ஒருநாள் உணவில், தலைமுடி இருந்துவிட்டது. இதை கண்டதும் கேசவ சர்மா கடுங்கோபம் கொண்டார்.
''அவ்வளவு தூரம் நான் சொல்லியும், நீ எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவில்லை அல்லவா? உன்னை சும்மாவிட மாட்டேன். உன் தலையை மொட்டையடித்தே ஆக வேண்டும்,'' என்று கூறி, முடி திருத்துபவனை அழைத்து வர சென்றார் கேசவ சர்மா.
கேசவ சர்மாவின் மனைவிக்கு பயமாகிவிட்டது.
'சின்னஞ் சிறிய குற்றத்திற்காக இவ்வளவு பெரிய தண்டனையா? நான் வேண்டுமென்றா இந்த குற்றத்தைச் செய்தேன்? அறியாமல் நேர்ந்த பிழைக்கு இவ்வளவு கொடிய தண்டனையா?' என்று மனம் வருந்தியவளாக, தன் தமையன்மார்களை அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினாள்.
''உன் கணவர் மிகவும் முரடர் ஆயிற்றே! ஒருமுறை சொன்ன சொல்லை மாற்ற மாட்டாரே! நீ சிறிது எச்சரிக்கையாக நடந்து கொண்டிருக்கக்கூடாதா?'' என்று அவளுடைய மூத்த சகோதரன் கூறினான்.
''நான் வேண்டுமென்றா செய்தேன்? தெரியாமல் நேர்ந்து விட்ட பிழை இது. நீங்கள்தான் எப்படியாவது இந்தக் கொடிய தண்டனையிலிருந்து என்னை காப்பாற்ற வேண்டும்,'' என்று சகோதரர்களிடம் கூறினாள் கேசவ சர்மாவின் மனைவி.
மூத்த சகோதரனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எவ்வாறு தங்கையை இக்கட்டிலிருந்து காப்பாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது, இளைய சகோதரன், ''அண்ணா, அத்தான் முடி வெட்டுபவனை அழைத்து வருவதற்குள், பீர்பலிடம் சென்று வருவோம். அவரிடம் கேட்டால் இதற்கு ஏதாவது யோசனை கூறுவார்,'' என்றான்.
''சரி, அப்படியே செய்வோம். நான் இங்கேயே இருக்கிறேன். நீ போய் பீர்பலிடம் எல்லா விவரங்களையும் கூறி, நம் சகோதரியின் தலை மொட்டையடிக்கப் படாமலிருப்பதற்கான யோசனையைக் கேட்டு வா,'' என்று தம்பியை பீர்பலின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான் அண்ணன்.
தம்பி சென்ற பின், அண்ணன் வீட்டுக் கதவைத் தாளிட்டு சகோதரிக்கு துணையாக வீட்டிற்குள்ளேயே இருந்தான்.
பீர்பலிடம் சென்ற இளைய சகோதரன், தன் சகோதரிக்கு நேர்ந்துள்ள இன்னலை விரிவாகக் கூறி, அதைப் போக்குவதற்கு ஏதாவது உபாயம் கூறுமாறு வேண்டினான்.
''கேசவ சர்மாவை நான் அறிவேன். முரட்டுத் தனமான சுபாவமுள்ளவன். பிடித்த பிடியை விட மாட்டான்,'' என்று கூறிய பீர்பல், சற்று நேரம் ஒன்றும் கூறாமல் மவுனமாக இருந்தார்.
திடீரென்று, ''ஆ! அதுதான் சரியான யோசனை!'' என்று கூறியவராக அவன் காதருகில் ரகசியமாக ஏதோ சொன்னார். அதைக் கேட்டதும் இளைய சகோதரனின் முகம் மலர்ந்தது. அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, கடைத் தெருவை நோக்கிச் சென்றான்.
கடை வீதியில் பிணத்தை எடுத்துக் செல்வதற்கான மூங்கிலும், தென்னை ஓலையும் வாங்கிக் கொண்டான். சவ அடக்கத்திற்கான சாமான்கள் முழுவதையும் வாங்கி விட்டு, சில ஆட்களுடன் கேசவ சர்மாவின் வீட்டுக்கு வந்தான்.
அவன் வந்தபோது கேசவ சர்மா, முடி திருத்துபவனுடன் வந்து வீட்டுக் கதவைத் தட்டினார். உள்ளேயிருந்தவர்கள் கதவைத் திறக்கவில்லை.
''மரியாதையாக கதவைத் திறக்கிறாயா இல்லையா? இல்லாவிட்டால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவேன்,'' என்று வெளியே இருந்தவாறே கோபமாகக் கத்திக் கொண்டிருந்தார் கேசவ சர்மா.
உடனே, இளைய சகோதரன் தன்னுடன் வந்திருந்த ஆட்களைப் பார்த்து, ''இவர்தான், இவரைப் பிடித்து கட்டி பாடையில் வையுங்கள்,'' என்றான்.
இளையவனுடன் வந்திருந்த ஆட்களும் கேசவ சர்மாவைப் பிடித்து இழுத்து வந்து, பாடையில் படுக்க வைத்து கட்டத் துவங்கினார்.
'''அடப்பாவிகளா! என்னை உயிருடனேயே கொளுத்தப் பார்க்கிறீர்களா? விடுங்கள் என்னை.உங்களை சும்மா விட மாட்டேன்,'' என்று கத்திக் கொண்டிருந்தார் கேசவ சர்மா.
''கூச்சல் போடாதீர்கள் அத்தான்! உங்கள் வாக்கை நிறைவேற்றுவதற்காகத்தான் இப்படிச் செய்கிறோம்,'' என்று அமைதியாகக் கூறினான் இளைய சகோதரன்.
''என் வாக்கை நிறைவேற்றப் போகிறாயா? என்ன உளறுகிறாய்?'' என்று இளைய மைத்துனனைப் பார்த்துச் சீறினார் கேசவ சர்மா.
''ஆமாம். கணவன் உயிருடன் இருக்கும்போதே, எந்த சுமங்கலிப் பெண்ணாவது மொட்டையடித்துக் கொண்டது உண்டா? கணவன் இறந்த பிறகுதான் மொட்டையடித்துக் கொள்ள வேண்டும். எனவேதான் அக்காவுக்கு மொட்டையடிப்பதற்காக வேண்டி உங்களை...'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே...
''மொட்டையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். என்னை விட்டாலே போதும். இனிமேல் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ள மாட்டேன்,'' என்றார் சர்மா.
தன் கணவரின் பிடிவாதத்திலிருந்து தன்னைக் காப்பாற்றியதற்காக, இளைய சகோதரனுக்கு நன்றி தெரிவித்தாள் கேசவ சர்மாவின் மனைவி.
''இது என்னுடைய யோசனை அல்ல. பீர்பல்தான் இவ்வாறு நடந்து கொள்ளுமாறு எனக்கு யோசனை கூறினார். எனவே, நம்முடைய நன்றிக்கு உரியவர் பீர்பல்தான்,'' என்றான் இளைய சகோதரன்.
கேசவ சர்மாவின் மனைவியும், பீர்பலுக்கு நன்றி தெரிவித்தாள்
