PUBLISHED ON : அக் 07, 2016

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
'பிக்பென்'னை பழுது பார்க்க!
உலகின் மிகப் பிரபல கடிகாரமான, 'பிக்பென்'னைப் பழுது பார்க்கும் பணி, அடுத்த ஆண்டு தொடங்கும் என, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, 2.9 கோடி பவுண்டு அதாவது, 290 கோடி செலவாகும் என அரசு தெரிவித்தது. பிக்பென் கடிகாரமும், அது அமைக்கப்பட்டுள்ள எலிசபெத் கோபுரமும், முற்றிலும் பழுதுபார்க்கப்படும். இதற்கு மூன்று ஆண்டு காலமாகும். கடிகாரம் ஓடுவது நிறுத்தப்பட்டாலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளை குறிக்க மணியடிக்கும்படி செய்யப்படும். கடந்த, 150 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரிட்டனின் அடையாளமாக இருந்து வருகிறது, 'பிக்பென்' கடிகாரம்.
பிரிட்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள கோபுர கடிகாரம், 1859ல் அமைக்கப்பட்டது. கடிகாரம் அமைந்துள்ள எலிசபெத் கோபுரத்தின் உயரம், 315 அடி. அது முற்றிலும் சரி செய்யப் படும். கடிகாரத்தை அடைய கோபுரத்துக்குள் தற்போது, 334 படிகள் உள்ளன. புதிதாக அங்கு, 'லிப்ட்' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகங்கள்!
விரல் நகங்களை வெட்டுகிறேன் என்ற பெயரில் சிலர், வேதனையை வரவழைத்து நகத்தை ஒட்ட வெட்டி விடுகின்றனர். ஒட்ட வெட்டுவதுதான் ஆரோக்கியம் என்று நினைப்பது தான், இதற்கு காரணம்.
அதேபோல், இன்னும் சிலர், விரல் நகங்களை, கடித்து துப்பிக் கொண்டே இருப்பர். பிசிறாக தொங்கும் தோலையும் சேர்த்து கடித்து துப்பிவிடுவர். இப்படி பிய்ந்த பகுதியில் அழுக்கு சேர்ந்து, 'செப்டிக்' ஆவதைத்தான், 'நகச்சுத்தி' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும், நகச்சுத்தி ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலில்தான் வரும். நகச்சுத்தி வந்த இடம் சிவப்பாக பளபளவென்று வீக்கத்துடன் இருக்கும். தொட்டாலே வலி துடிதுடிக்க வைத்துவிடும். நகச்சுத்தி வந்துவிட்டது என்று தெரிந்தாலே, சட்டென்று ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் செருகி விரலை ஊறுகாய் போட்டு விடுவர். இது தவறு.
எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலம் ஒரு வகையில், 'ஆன்டிசெப்டிக்' போல பயன்படும் என்றாலும், அது எந்த வகையிலும் நகத்தின் வலியை குறைத்துவிடாது. மேலும், வலியையும், வேதனையையும் அதிகப்படுத்தும் என்பதே உண்மை.
இதற்கு காரணம், விரலை எலுமிச்சம் பழம் சற்று முரட்டுத்தனமாக நெருக்கி அழுத்தியிருப்பதுதான். இதனால், புண்ணால் உருவான சீழ், நகத்தின் அடித்தளத்திற்கும் கீழே சென்று, விரல் நுனி எலும்பையும் பாதித்துவிடும். நகத்தின் கீழ்ப்பகுதி, 'செப்டிக்' ஆகிவிட்டால் வேறு வழியில்லை. விரலை எடுக்க வேண்டிய நிலை கூட வரலாம். முக்கியமாக, நீரிழிவு நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
மேலும், கால் கட்டை விரல், கைகளில் உள்ள விரல்களை விட சிக்கலானது. அது குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், அது தரும் வேதனைகளும் அதிகம்.
கடையில் புதிதாக, 'ஷூ' வாங்க வேண்டும் என்றால், அதை அணிந்து பார்த்து சரியாக இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். அணியும் போது கால் கட்டை விரலின் நுனிப்பாகம் மிகவும் இறுக்கமாக அழுத்தப்பட்டால், அதை வாங்கக் கூடாது. கடைக்காரர் சரியாகிவிடும் என்று சொன்னாலும் கேட்க வேண்டாம். அதையும் மீறி நீங்கள் டைட் ஆன, 'ஷூ'வை அணிந்தால், கால் கட்டை விரல் உங்களை பழிவாங்கிவிடும்.
பாதத்தின் மற்ற விரல் நகங்களை விட, கட்டை விரல் நகத்துக்குத்தான் பொறுப்பு அதிகம். அதனால், பாதிப்புகளும் அதிகம். இருக்கமான ஷூ போட்டு விரலை நசுக்கும் பட்சத்தில், நகத்தின் வளர்ச்சியில் பெரிய திசை மாற்றமே ஏற்படும். நகத்தின் பக்கவாட்டு விளிம்புகளின் வளர்ச்சி தூண்டப்படும். இதனால் தலைகீழாக இருக்கும், 'ப' எழுத்து வடிவில் நகம், கீழ்ப்பகுதியை உள்நோக்கி வளரத் துவங்கும். இதன் விளைவாக நகத்தின் அடித்தளம் சிதைக்கப்பட்டு, நக வளைவு வலியுடன் வீங்கி ரத்தம் கசியும்; சீழ் கட்டும்.
அறுவை சிகிச்சை கூட இதற்கு நிவாரணம் கிடையாது. நகத்தின் நடுப்பகுதியை விரல் நுனிக்கு பாதுகாப்பாக, அப்படியே விட்டுவிட்டு உள்நோக்கி வளரும் நகத்தின் பாகத்தை, அதன் வேரோடு அகற்ற வேண்டும். கட்டை விரலை, நாம் தொல்லை செய்தால்தான் இப்படிப்பட்ட விபரீதங்கள் ஏற்படுமே தவிர, மற்றபடி கட்டைவிரல் மிகவும் சாதுவானதுதான்.
வண்ண வண்ண தேவதை!
* வண்ணங்களால் எண்ணங்களைக் கவரும் வண்ணத்துப்பூச்சி பறக்கும் தன்மை பெற்றிருந்தாலும் அது பறவையல்ல. பூச்சி இனத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இது குளிர் ரத்தப் பிராணி.
* வண்ணத்துப் பூச்சிகளின் வருகை இயற்கையும், ஆரோக்கியமும் நிறைந்திருப்பதன் அறிகுறியாக கருதப்படுகிறது.
* மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியப் பங்காற்றும் வண்ணத்துப்பூச்சிகள், அதன் மூலம் தாவர பெருக்கத்திற்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும், மனிதனுக்கும் கூட நன்மை பயக்கின்றன.
* வண்ணத்துப் பூச்சி, முட்டைப் புழு, கூட்டுப்புழு, முதிர்ந்த வண்ணத்துப் பூச்சி, என நான்கு வளர்ச்சி நிலைகளையுடையது.
* தன், ஆறு கால்களில் உள்ள சுவை மொட்டுகளின் உதவியுடன், வண்ணத்துப்பூச்சிகள் ருசி அறிகின்றன.
* இதன் அடிவயிற்றில் உள்ள, 'ஸ்பைராக்கிள்' என்னும் பிளவின் மூலம் சுவாசிக்கிறது.
* அதிர்வுகளை உணரும் தன்மை பெற்றவை வண்ணத்துப்பூச்சிகள். அவற்றால் கேட்க முடியாது; காதுகள் கிடையாது.
* சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களை அறியும் திறன் பெற்றவை. அதன் முக்கிய உணவு தேன்.
* மணிக்கு, 50 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் பெற்றவை வண்ணத்துப் பூச்சிகள். அதன் உடல் வெப்பநிலை, 86 டிகிரிக்கு குறைந்தால் வண்ணத்துப் பூச்சிகளால் பறக்க முடியாது.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
