தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏன் கொட்டின?

ஏன் கொட்டின?

ஏன் கொட்டின?


PUBLISHED ON : அக் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு தேள் ஆற்றின் கரையிலிருந்து மறுகரைக்குப் போக விரும்பியது. நீரின் வேகம், அதிகமாக இருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு பாலங்கள் ஏதும் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே கரையில் நின்றிருந்தது.

அப்போது, ஒரு கொழுத்த தவளை அங்கே வந்தது.

''வணக்கம் அண்ணா, உங்கள் அழகும், கம்பீரமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?'' என்று பணிவுடன் கேட்டது தேள்.

''என்ன உதவி?,'' என்று கேட்டது தவளை.

''அது ஒன்றுமில்லை. நான் அக்கரைக்குப் போக வேண்டும். உங்கள் முதுகில் என்னை ஏற்றிச் சென்று எதிர்க்கரையில் விட்டால், உங்கள் உணவுக்காக, ஏராளமான அபூர்வ பூச்சிகள் உள்ள இடத்தை உங்களுக்குக் காண்பிப்பேன்,'' என்றது தேள்.

''அதெல்லாம் முடியாது. உங்கள் இனத்தைப் பற்றி எனக்கு தெரியாதா? மிகவும் தந்திரமுள்ள விஷ ஜந்துக்கள் அல்லவா நீங்கள்? உங்கள் காரியம் ஆனதும் பிரதிபலனாக, உங்கள் விஷக் கொடுக்கால் உதவி செய்தவர்களையே கொட்டுவது தானே உங்கள் இயல்பு? உன்னிடம் நான் ஏமாறத் தயாராய் இல்லை,'' என்றது தவளை.

''அண்ணா, அப்படிச் சொல்லாதீர்கள். உதவி செய்பவர்களுக்கு தீங்கு செய்வேனா நான்? முதுகில் ஏற்றி செல்லும் போது உங்களுக்குத் தீங்கு செய்தால், உங்களோடு நானுமல்லவா நீரில் அடித்து செல்லப்படுவேன். உண்மையில், எதிர்க்கரையில் உள்ள என் உறவினர்களை பார்க்கவே செல்ல விரும்புகிறேன். எனக்கு உதவுவதால், உங்களுக்கும் லாபமுண்டு. ருசியான புதுவகைப் பூச்சிகளை நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம்,'' என்று பேசியது தேள்.

தவளை சற்று யோசித்தது. தேளின் வாதம் அதற்குச் சரியென்றே தோன்றியது. நம்மைக் கொட்டி நாம் இறந்தால், நம்மோடு தேளும் தானே தண்ணீரில் மூழ்கிச் சாக வேண்டும். தன் மரணத்தைத் தானே தேடிக் கொள்ளுமா என்று எண்ணியது. அதோடு அபூர்வப்பூச்சிகள் எதிர்க்கரையில் இருக்குமிடத்தை அறிந்து கொள்ளவும், அதற்கு ஆசையாக இருந்தது. எனவே, அது தேளை முதுகில் ஏற்றியவாறு ஆற்றில் குதித்து நீந்தியது.

ஆற்றில், நீரோட்டம் மிக வேகமாக இருந்ததால், தவளை அதைச் சமாளித்து நீந்த மிகவும் சிரமப்பட்டது. எப்படியோ கடுமையாக முயன்று நீந்தி எதிர்க் கரையை நெருங்கியது.

அப்போது, தேள் திடீரென்று வாக்குறுதியை மறந்து தவளையை தன் கொடுக்கால், முதுகில் கொட்டத் தொடங்கியது. விஷம் பரவி, தவளைக்கு வேதனை ஏற்பட்டது. அதனால், அதற்கு மேற்கொண்டு நீந்த முடியாமல் கால்கள் செயலற்றுப் போயின. நீரோட்டத்துடன் தேளுடனேயே வேகமாக இழுக்கப்பட்டது. முடிவில் இரண்டும் மூழ்கத் தொடங்கின.

அப்போது தவளை கோபத்துடன் ''முட்டாளே! பார்த்தாயா. உன் வார்த்தையைக் காப்பாற்றவில்லை. எதற்காக இப்போது என்னைக் கொட்டினாய்?'' என்று கேட்டது.

''அண்ணா தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் கொட்டாமல் இருக்க முடியவில்லை; என் இயல்பு அதுதான்,'' என்று கூறியபடி தவளையுடன் சேர்ந்து ஆற்றில் மூழ்கியது தேள்.

குட்டீஸ்... கெட்ட நண்பர்களுடன் இதற்குத்தான் சேரவே கூடாது என்பது. சரியா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us