PUBLISHED ON : அக் 07, 2016

வரப்போரமாக நின்று கொண்டிருந்த கொக்கைத் தேடி வந்தது கீரி.
''கொக்கே! கொக்கே! எனக்கு மீன் சாப்பிட வேண்டுமென்று, ரொம்ப நாளாக ஆசை. நீ எனக்கு இரண்டு மீன்களை பிடித்துத் தந்தால் ஆசை தீர உண்பேன்,'' என்றது கீரி.
''கொக்கே! என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஏதோ சிந்தனை செய்தபடியே, நின்று கொண்டிருக்கிறாயே... என்ன காரணம்?'' என்று கேட்டது கீரி.
''கீரியே! இந்த வாய்க்காலில் வசித்து வருகிற மீன்கள் எல்லாம் தந்திரமானவை. அவற்றைப் பிடிப்பது எளிதான காரியமல்ல! நான் நெடு நேரமாக இங்கு நின்று கொண்டிருக் கிறேன். இதுவரையிலும் ஒரு மீனைக் கூட, என்னால் பிடிக்க முடியவில்லை. நானெப்படி உனக்கு இரண்டு மீன்களை பிடித்துக் கொடுக்க முடியும்?'' என்று கேட்டது கொக்கு.
''கொக்கே! தயவு செய்து முடியாது என்று சொல்லி விடாதே! நான் இன்று எப்படியாவது மீன்களை சாப்பிட வேண்டுமென்று ஆவலோடு இருக்கிறேன்!'' என்றது கீரி.
''நீ ஆவலோடு இருந்து என்ன செய்வது? நானும் முயற்சித்துப் பார்க்கிறேன். மீன்கள் கிடைத்தால் உன்னிடம் கொடுக்கிறேன்,'' என்றது கொக்கு.
வாய்க்காலில் நின்றபடியே மீனைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது கொக்கு.
எவ்வளவோ முயற்சித்தும், அந்தக் கொக்கால் மீனைப் பிடிக்க முடியவில்லை.
கொக்கு கவலையோடு கீரியைப் பார்த்தது.
''கீரியே! நான் என்ன செய்வது! உனக்கு அதிர்ஷ்டமில்லையென்று நினைக்கிறேன். அதனால்தான் நான் எவ்வளவோ முயற்சித்தும் மீனைப் பிடிக்க முடியவில்லை. இன்று நானும் உன்னைப் போன்று நிறைவேறாத ஆசையுடன் தான் செல்ல வேண்டியிருக்கிறது!'' என கவலையுடன் கூறியது கொக்கு.
அதைக் கேட்ட கீரி வேறு வழியில்லாமல், அந்த இடத்தை விட்டுச் சென்றது.
கீரி சென்றதும், மகிழ்ச்சியடைந்தது கொக்கு. அந்த மகிழ்ச்சியோடு வாய்க்காலில் ஓடுகிற மீன் ஒன்றை தன் நீண்ட அலகினால் கொத்தி தூக்கிச் சென்றது.
அக்காட்சியை வரப்போரமாக ஊர்ந்து சென்ற ஓணான் பார்த்தது.
''கொக்கே! சற்று நேரத்திற்கு முன்னர் கீரியோடு நீ நின்றபோது மீனைப் பிடிக்க முடியவில்லையே என்று ஏமாற்றமடைந்தாய்...! ஆனால், இப்போதோ மிக எளிதாக மீனைப் பிடித்து விட்டாயே! அப்படியானால் நீ மீனைப் பிடிக்க முடியாதென்று கீரியிடம் நாடகம் தானே ஆடினாய்!'' என்று கேட்டது.
''ஆமாம். ஓணானே! நான் நாடகம்தான் ஆடினேன். என்னால் எளிதாக மீனைப் பிடிக்க முடியாதது போன்று நடித்தேன்,'' என்றது கொக்கு.
''எதற்காக அப்படி நடிக்க வேண்டும்? அந்த கீரிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உனக்கு ஏற்படவில்லையா?'' என்று கேட்டது ஓணான்.
''ஓணானே! நான் கீரிக்கு மீனைக் கொடுத்தால் அது அதன் ருசியில் சொக்கிப் போய் மீண்டும், மீண்டும் மீனை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில், என் துணை யில்லாமல் மீனைப் பிடிக்க முயற்சி செய்யும். ஒருவேளை அதன் முயற்சியில் வெற்றியடைந்து விட்டால், இந்த வாய்க்காலில் இருக்கிற எல்லா மீன்களையும் அது கொன்று இரையாக்கிவிடும். அதனால்தான் நான் மீனின் ருசியை அதற்குக் காட்டக் கூடாது என்பதால் அப்படி நடித்தேன்'' என்றது கொக்கு.
''கொக்கே! உன்னுடைய புத்திசாலித் தனத்தை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நீ மீன்களை இரையாக்கிக் கொள்கிறாய். அதே நேரத்தில் இந்த மீன்களின் மீது கருணையும் காட்டுகிறாய். உன்னுடைய செயலை பார்க்கிற வேளையில் எனக்கு வியப் பாகத்தான் இருக்கிறது,'' என்றது ஓணான்.
