PUBLISHED ON : பிப் 28, 2014

மணி அடித்தது. வாத்தியார் வகுப்பிற்குள் நுழைந்தார். வகுப்பிலே காலை வைத்ததும், 'சர சர' என்ற சத்தம் கேட்டது. கீழே பார்த்தார். தரை முழுவதும் வேர்க்கடலைத் தோல்கள் கிடந்தன. உடனே அவருக்கு பயங்கரமாகக் கோபம் வந்துவிட்டது.
''ஏ பையன்களா, வகுப்புக்குள் வேர்க்கடலை தின்றவர்கள் யார், யார்? உண்மையைச் சொல்லிவிடுங்கள்,'' என்றார்.
ஒருவரும் பதில் சொல்லவில்லை.
''சொல்லமாட்டீர்களா? சரி, முதலில் நீங்கள் எல்லாரும் சேர்ந்து இந்தத் தோல்களைப் பொறுக்கி வெளியே கொண்டு போய்ப் போட்டுவிட்டு வாருங்கள்,'' என்று உத்தரவு போட்டார் வாத்தியார்.
உடனே எல்லாப் பையன்களும் வேக வேகமாக வேர்க்கடலைத் தோல்களைப் பொறுக்க ஆரம்பித்தனர். ஆனால், ஒரே ஒரு பையன் மட்டும் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றான். அவனைப் பார்த்ததும் வாத்தியாருக்கு கோபம் அதிகமாகி விட்டது. 'விறு விறு' என்று அவன் அருகே சென்று அவனை அடிப்பதற்காகப் பிரம்பை ஓங்கினார். அவரது கோபத்தைக் கண்டோ அல்லது அவரது கையிலிருந்த பிரம்பைக் கண்டோ, அந்தப் பையன் நடுங்கி விடவில்லை. தைரியமாகவே நின்று கொண்டிருந்தான்.
''டேய், ஏன் சும்மா நிற்கிறாய்? நீயும் தோல்களை எடுக்கிறாயா, அல்லது... உம்,'' என்று பயமுறுத்தினார்.
''நான் வேர்க்கடலையை இங்கே சாப்பிடவில்லை. அதனால் தான் தோல்களை எடுக்கவில்லை!'' என்று தைரியமாகக் கூறினான் அந்தப் பையன்.
''என்ன எடுக்க முடியுமா, முடியாதா?'' என்று அந்தப் பள்ளிக்கூடமே கிடுகிடுக்கும் படி, உரத்த குரலில் கேட்டார் வாத்தியார்.
''ஐயா! தோல்களைப் போட்டவர் யார், யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உண்மையாகச் சொல்கிறேன் நான் போடவே இல்லை. குற்றம் செய்யாதபோது எதற்காக எனக்குத் தண்டனை? தோல்களை நான் எடுத்தால் நானும் வேர்க்கடலை தின்றதாகத்தானே அர்த்தம்? அதனால்தான் எடுக்கவில்லை. எடுக்க முடியாது,'' என்று அழுத்தமாகக் கூறினான் அவன்.
இதைக் கேட்டதும் வாத்தியார் அப்படியே அசந்து போய்விட்டார். அவரது கையிலிருந்த பிரம்பும் மெதுவாகக் கீழே இறங்கியது. அவன் கூறியது உண்மைதான் என்பதை அறிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் ஆகவில்லை. பேசாமல் திரும்பிப் போய் இடத்திலேயே உட்கார்ந்து விட்டார்.
வாத்தியாரிடம் அவ்வளவு தூரம் துணிவுடன் பேசி உண்மையை உணரச் செய்த அந்த மாணவன் யார் தெரியுமா உங்களுக்கு?
ஒரு சின்ன க்ளூ. அந்த மாணவன்தான் பிற்காலத்தில், சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம் என்று வீர முழக்கம் செய்தவர்.
விடை: இவர் தான் லோகமான்ய பால கங்காதர திலகர்.
