தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யார் இவர்

யார் இவர்

யார் இவர்


PUBLISHED ON : ஜூலை 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்று மாலை சூரியன் மறைய துவங்கியது; பறவைகள், கூடுகளை நோக்கிச் சென்றன. வேலை முடித்து, ஆடு, மாடுகளோடு வீடு திரும்பினர் மக்கள்.

அவன், நண்பர்களுடன், குளக்கரை பக்கமாக நடந்தான். அவனுக்கு மேலாக, ஒரு பறவைக் கூட்டம் பறந்தது. அந்த கூட்டத்தைப் பார்த்தான்; அவை, கிழக்கிலிருந்து, மேற்காக கூடுகளுக்கு திரும்பிகொண்டிருந்தன.

இதை கவனித்தவன், 'ஒரு கேள்வி கேட்கிறேன்; பதில் கூறுங்கள் பார்ப்போம்...' என, நண்பர்களிடம் சொன்னான்.

'கேள் பார்ப்போம்...'

'வானத்தில் கொக்குகள், எந்த வகை அளவில் பறக்கின்றன...'

'அவற்றின் இடை வெளிக்கு ஏற்ப பறக்கின்றன...' என்றனர்.

அவன் யோசித்தபடி, 'அப்படி இல்லை...' என்றான்.

'பின் எப்படி...'

'பறவைகள் பறப்பது, முக்கோணத்தின் இரு பக்கங்களில் உள்ள, நேர் கோடுகளின் வெளி அமைப்பில் உள்ளது. இந்த, இரு வரிசைக்கும் இடைவெளி துாரம், விரிகோணத்தில், 150 டிகிரி அளவில் இருக்கும்...' என்று விளக்கினான்.

நண்பர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஒரு நாள் காலை, 'அம்மா... சாப்பாடு தாங்க; பள்ளிக் கூடத்துக்கு நேரமாச்சு...' என்றான்.

'தம்பி... சோறு வடிக்க அரிசி இல்லை; பள்ளிக் கூடம் சென்று வா, எப்படியாவது அரிசி வாங்கி, மாலையில் சோறு வடிக்கிறேன்...' என, கண் கலங்க கூறினாள் அம்மா.

'சரிம்மா... மாலையில் சாப்பிடுகிறேன்...' என்று கூறி, தண்ணீரை குடித்து, பள்ளிக்குச் சென்றான்.

மாலை நெடுநேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. அம்மாவுக்கு பதட்டம் அதிகரித்து, தேட ஆரம்பித்தாள்.

அக்கம் பக்கமெல்லாம் விசாரித்தாள்; எந்த தகவலும் இல்லை.

'மதியம் பள்ளியில் இருந்தான்; அதன்பின் எங்கே போனான் என்று தெரியவில்லை...' என்ற பதில்களே கிடைத்தன.

பள்ளியை விட்டால், கோவிலில் தான் படிப்பான்.

நண்பன் ஒருவன், அவனை தேடி கோவிலுக்குச் சென்றான்.

கோவில் மண்டபத்தில் அவன் படுத்திருந்தான்; அவனைச் சுற்றி, சாக்பீசால் கணக்குகள் போடப் பட்டிருந்தன. தோளை தொட்டு எழுப்பினான். திடுக்கிட்டபடி, 'ஏண்டா எழுப்புன. இன்னும் பாதி கணக்கை முடிக்க வேண்டுமே...' என்றான்.

'நீ எங்கடா கணக்குப் போட்ட... துாக்கத்துல தானே இருந்த...'

'கனவுல தான்; ச்சே... கெடுத்துட்டியே...'

'வீட்டுக்கு போகலாம்... அம்மா அழுதபடியே இருக்கிறார்...'

'நான் கணக்கு போடாம வர மாட்டேன்...' என, தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்த நோட்டை எடுத்து, எழுத ஆரம்பித்தான். நண்பன் காத்திருந்தான். கணக்கை முடித்து, வீட்டிற்குப் புறப்பட்டான்.

அவன், எப்போதும், கணக்கையே நினைத்தான். தன், மூன்று வயது வரை, வாய் பேசமுடியாதவனாக இருந்தான்; இதனால் மிகவும் வருந்தினர் பெற்றோர்.

ஒரு நாள் -

வீட்டுக்கு வந்த பெரியவர், 'உன் மகனை பள்ளியில் சேர்த்து விடு; நன்றாக பேசுவான்...' என்று அவன் அப்பாவிடம் கூறினார். அந்த அறிவுரைப்படி, பள்ளியில் சேர்த்தனர். ஆறு மாதங்கள் பள்ளிக்கு சென்றவன், சரளமாக பேச ஆரம்பித்தான். அதன்பின், கணக்குகள் குறித்து மட்டுமே பேசினான்.

மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவன். தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று தான் இருப்பான்; விளையாட செல்ல மாட்டான்; வீட்டுக்குள்ளேயே முடங்குவான்.

சில நேரம், ஜன்னல் வழியே தெருவை பார்த்தபடியே இருப்பான். ஆசிரியர் நடத்தும் பாடங்களை ஊன்றி கவனிப்பான். இதெல்லாம், சராசரி பையன்கள் செய்கிற வேலையில்லை; அதனால் பெற்றோர் பயந்தனர்.

ஒரு நாள் -

வகுப்பில், கணக்கு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்; உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.

'வகுக்கப்படும் எண்ணை, அதே எண்ணால் வகுத்தால் ஈவு ஒன்றாகும்...' என்றார் ஆசிரியர்.

அவன் எழுந்து, 'அப்படி என்றால் பூஜ்ஜியத்தை, பூஜ்ஜியத்தால் வகுத்தால், ஈவு ஒன்று வருமா...' என்றான்.

'பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை...' என்றார் ஆசிரியர்.

'பூஜ்ஜியத்திற்கு இடது பக்கம் 1 என்று எழுதினால், அது, பத்தாகிறது அல்லவா! எனவே, பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை என்று சொல்லமுடியாது...' என்றான்.

அவனது கணித திறனை கேட்டு வியந்த ஆசிரியர், 'எனக்கு தெரியாத கணக்கெல்லாம் கூட, எளிய முறையில் போட்டு காட்டுகிறியே... யாரிடம் கேட்டு போடுற...' என்றார்.

'என் கனவில் கணக்கு தான் வரும்; மற்றவர்களுக்கு புரியாத கணக்கை கனவில் புரிந்துக் கொள்வேன். எந்த கணக்கை போட்டாலும், யாரோ எனக்கு சொல்லி தருவது போல இருக்கும்...' என்றான்.

அவர் யார் என்று கண்டுபிடிச்சிட்டிங்களா குட்டீஸ்...

ஹாய் குட்டீஸ் நீங்க தேடியது இவரை தான்... உலக புகழ் பெற்ற கணித மேதை, சீனிவாச ராமானுஜம். ஏழை குடும்பத்தில் பிறந்து, வறுமை வாட்டி வதைக்க, விடாப்பிடியான முயற்சியால், புகழ் நிலைக்க வாழ்ந்த கணித மேதை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us