PUBLISHED ON : டிச 27, 2013

மலைப்பாதையின் ஓரமாக அமைதியாக நின்று கொண்டிருந்தது ஒரு ஒட்டகம். அந்த ஒட்டகம் எப்போதுமே தன் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும். பிறவியிலேயே அந்த ஒட்டகத்திற்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.
வழக்கம்போல், அந்த ஒட்டகம் மலைப் பாதையில் தன் தலையை ஆட்டியபடி நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த ஓநாய் ஒட்டகத்தின் அருகே நின்றது. தனது தலையையும் ஆட்டியபடி ஒட்டகத்தைக் கேலி செய்தது.
''ஓநாயே, நான் தலையாட்டுவதைக் கண்டு பரிகாசம் செய்யாதே... எனக்கு இந்த நிலை பிறவியிலேயே ஏற்பட்டுவிட்டது,'' என்றது ஒட்டகம்.
''ஒட்டகமே, அதைப் பற்றி எனக்குக் கவலை யில்லை. இப்போது நான் உன்னைப் பரிகாசம் செய்ய வேண்டும். உன்னை நான் பரிகாசம் செய்து கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. அதனால், தொடர்ந்து உன்னை நான் கேலி செய்து கொண்டேயிருப்பேன்,'' என்றது ஓநாய்.
''ஓநாயே, நான் என்னுடைய உண்மையான மனநிலையினை உனக்குத் தெரியப்படுத்தி விட்டேன். அதனை நீ புரிந்துகொண்டு என்னை கேலி செய்வதை நிறுத்திவிடு... இல்லை யென்றால், நீ என்னுடைய கோபத்திற்கு ஆளாவாய்,'' என்றது ஒட்டகம்.
''ஒட்டகமே, உன்னுடைய பேச்சைக் கேட்டு நான் பயந்துவிட மாட்டேன். நான் தொடர்ந்து கேலி செய்து கொண்டே இருப்பேன்,'' என்றது ஓநாய்.
ஓநாய் அவ்வாறு கூறியபடியே ஒட்டகத்தை விடவும் வேகமாக தன்னுடைய தலையை ஆட்டிக் கொண்டிருந்தது.
அதனைக் கண்ட ஒட்டகமோ, ஆத்திர மடைந்தது. தன்னுடைய முன்னங் காலைக் கொண்டு ஓநாயின் முகத்தில் பலமாக உதைத்தது. ஒட்டகத்தின் இந்த அதிரடித் தாக்குதலை ஓநாய், எதிர்பார்க்கவில்லை. அது ஓவென அலறிக்கொண்டே ஓட்டமெடுத்தது. சிறிது நேரத்தில் ஓநாயின் மூக்கானது வீங்கி விட்டது. அதன் மூக்கானது குடை மூக்கு போன்று காட்சியளித்தது. அந்த நேரத்தில் ஓநாயின் எதிரே குதிரை ஒன்று வந்தது.
''ஓநாயே, உனக்கு என்னவாயிற்று? ஏன் நீ அழுகிறாய்? உன் மூக்கானது நன்கு புடைத்துக் கொண்டிருக்கிறதே! உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டது குதிரை.
''குதிரையே! சற்று தூரத்தில் இருக்கும் மலைப்பாதையில் ஒட்டகம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அது தலையை ஆட்டிக் கொண்டேயிருந்தது. நானும் அந்த ஒட்டகத்தைப் பார்த்து தலையாட்டினேன். அதனைப் பார்த்துத் தலையாட்டி கேலி செய்வது எனக்குப் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதனால் நான் தொடர்ந்து என் தலையை ஆட்டியபடி கேலி செய்து கொண்டிருந்தேன்.
''ஒட்டகமோ கேலி செய்யாதே என்று கேட்டுக் கொண்டது. நான் தொடர்ந்து ஒட்டகத்தைக் கேலி செய்து கொண்டிருந்தேன். முடிவில், அந்த ஒட்டகம் என்னுடைய முகத்தில் பலமாக உதைத்து விட்டது. நானும் மூக்கு வீங்கியபடி உன்னிடம் வந்து நிற்கிறேன்,'' என்றது ஓநாய்.
''அந்த ஒட்டகத்திற்கு இத்தனை திமிர் இருக்கிறதா? நாம் இருவருமாக சென்று அந்த ஒட்டகத்தை அடக்க வேண்டும். அப்போது தான் அந்த ஒட்டகத்தின் கொழுப்பெல்லாம் அடங்கும்,'' என்றது குதிரை.
''ஆமாம் குதிரையே, நீ சொல்வது சரிதான். அந்த ஒட்டகம் திமிர் பிடித்ததாகத்தான் தெரிகிறது. நாம் இருவரும் இப்போதே சென்று அந்த ஒட்டகத்தை அடக்கலாம். இதோ நான் இப்போதே உன்னோடு வருகிறேன்,'' என்றது ஓநாய்.
ஓநாயும், குதிரையும் வேகமாக மலைப் பாதையை வந்தடைந்தன. அங்கே ஒட்டகம் நின்று கொண்டு தலையை ஆட்டிக் கொண்டி ருந்தது.
''குதிரையே! அதோ தலையாட்டியபடி நிற்கிறதே அந்த ஒட்டகம்தான் என்னை எட்டி உதைத்தது,'' என்றது ஓநாய்.
குதிரை ஆவேசத்துடன் ஓநாயை அழைத்துக்கொண்டு ஒட்டகத்தை நெருங்கியது.
''ஒட்டகமே, உனக்கு என்ன திமிர் இருந்தால் என் நண்பனான ஓநாயை எட்டி உதைப்பாய்? உன் கால்களுக்குத் தான் பலம் இருக்கிறது என்று நினைத்தாயா? இப்போது தலையைத்தான் ஆட்டிக் கொண்டிருக்கிறாய். நான் மட்டும் உன்னை எட்டி உதைத்தால், தலையோடு உன் காலையும் சேர்த்து ஆட்டிக் கொண்டிருப்பாய்,'' என்று ஏளனமாக கூறியது குதிரை.
அதனைக் கேட்ட மாத்திரத்தில் ஒட்டகம் குதிரையை ஏறிட்டது.
''குதிரையே உன்னுடைய பேச்சை நான் வரவேற்கிறேன். ஆனால், அதே நேரத்தில் உன்னிடம் இன்னொன்றையும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நம் இருவரில் யாருடைய கால்கள் பலமாக இருக்கிறது என்பதை நாம் சோதனை செய்து பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்,'' என்றது ஒட்டகம்.
''ஒட்டகமே, சோதனைக்கு நான் தயாராக இருக்கிறேன்,'' என்றது குதிரை.
உடனே ஓநாய், ''குதிரையே, நீ என்னை மறந்துவிட்டாயா? எனக்காக வேண்டி நீ சோதனையில் கலந்து கொள்கிறாய். இதனைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க முடியுமா? எனவே, நாம் இருவருமாக சேர்ந்த படி இந்த சோதனையில் கலந்து கொள்ளலாம்,'' என்றது.
''சரி... சரி... நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு என்னை வெற்றி பெறலாம் என்று நினைக்கிறீர்கள். யாருக்கு வெற்றி கிடைக் கிறதென்று முயற்சி செய்து பார்க்கலாம்,'' என்றது ஒட்டகம்.
ஓநாயும், குதிரையும் அமைதியாக நின்று கொண்டிருக்க ஒட்டகம் சிறிது நேரம் யோசனை யோடு நின்று கொண்டிருந்தது. பின்னர் அது ஓநாயையும், குதிரையையும் பார்த்தது.
''நீங்கள் இருவரும் என் பின்னால் வாருங்கள். நான் எந்தெந்த இடத்தில் நடந்து செல்கிறேனோ அங்கெல்லாம் நீங்களும் நடந்து வர வேண்டும். அப்படி நீங்கள் நடந்து வந்தால்தான் உங்கள் கால்களில் பலம் இருக் கிறது என்பதை நான் ஒத்துக்கொள்வேன்,'' என்றது ஒட்டகம்.
''ஒட்டகமே, எங்கள் இருவரையும் பற்றி உனக்குத் தெரியாது. எங்கள் இருவரின் கால்களின் வலிமையை நீ உணரமாட்டாய். நீ எங்கு நடந்து சென்றாலும் உன்னைப் பின்தொடர்ந்து நாங்கள் வருகிறோம்,'' என்றது குதிரை.
''ஆமாம்... ஆமாம்... எங்கள் இருவரையும் பற்றி உனக்குத் தெரியாது,'' என்றது ஓநாய்.
''யாரைப் பற்றி யாருக்குத் தெரியப் போகிறது என்பதை இன்னும் சிறிது நேரத்தில் பார்த்துவிடலாம்,'' என்றது ஒட்டகம்.
ஒட்டகம் மலைப்பாதையைக் கடந்து பாலைவனப் பாதையின் வழியாக நடந்து சென்றது. குதிரையும், ஓநாயும் வேறு வழி யில்லாமல் ஒட்டகத் தின் பின்னே அந்தப் பாலை வனப் பாதையின் வழியாக நடந்து சென்றன.
தனக்குப் பழக்கப் பட்ட அந்த பாலை வனத்தில் வேகமாக நடந்து சென்றது ஒட்டகம். ஆனால், குதிரையாலும், ஓநாயாலும் தங்களுக்குப் பழக்க மில்லாத அந்தப் பாலைவனப் பகுதியில் வேகமாக நடக்க முடியவில்லை. சிறிது தூரம் நடந்து சென்றதும் குதிரை பாலைவன மண்ணில் சிக்கியபடி கால்கள் இடறியவாறு பொத்தென்று கீழே விழுந்தது.
குதிரை விழுந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளாத ஓநாயும் பொத்தென்று கீழே விழுந்தது. மணலின் சூடு தாங்க முடியவில்லை. முன்னால் வேகமாக சென்று கொண்டிருந்த ஒட்டகம் பின்னால் திரும்பிப் பார்த்தது.
''நண்பர்களே, உங்கள் கால்களின் பலம் இவ்வளவுதானா?'' என்று கேட்டது.
குதிரையும், ஓநாயும் உன்னால் நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என நினைத்து நொந்துபோயின.
இது தேவையா குட்டீஸ்... பிறரை கேலி செய்தால் இப்படித்தான் துன்பம் வரும்.
***
