PUBLISHED ON : செப் 26, 2014

சீர்காழி என்னும் ஊரில் ராஜேந்திரகுமார் என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்து, சொத்தில் ஒரு பகுதியைப் பிரித்து அவர்கள் மூவருக்கும் தந்தார். அவர்கள் மூவரும் வெவ்வேறு ஊர் களில் வணிகம் செய்து, அங்கே வளமாக வாழ்ந்து வந்தனர்.
சில ஆண்டுகள் சென்றன-
செல்வந்தர் ராஜேந்திர குமாரின் மனைவி இறந்து விட்டார். அவர் தனியாகவே வாழ்ந்து வந்தார்.
மூன்று மகன்களும் அவரிடம் வந்தனர்.
''அப்பா! நீங்கள் ஏன் தனியே துன்பப்பட வேண்டும்? எங்களில் யார் வீட்டில் விருப்பமோ அங்கே தங்குங்கள். உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார்கள்.
அவர்கள் சொல்வது அவருக்கும் சரி என்று பட்டது. தள்ளாத வயதில் மகன்களுடன் தங்குவதே நல்லது. எதற்கும் சிந்தித்து முடிவு செய்வோம் என்று நினைத்தார்.
''இரண்டு மாதங்களுக்கு பிறகு வாருங்கள். என் எண்ணத்தைச் சொல்கிறேன்,'' என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
'மகன்களைத் தந்தை காப்பாற்றுவதைப் போல தந்தையை மகன்கள் காப்பாற்றுவார்களா? இதை எப்படி அறிவது' என்று சிந்தித்தார்.
நல்வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.
வேலையாளை அழைத்த அவர், ''நம் தோட்டத்தில் மரத்தில் குருவி ஒன்று கூடு கட்டி உள்ளது. குருவியை ஒன்றும் செய்ய வேண்டாம். குஞ்சுகளை மட்டும் எடுத்து வா,'' என்றார்.
அவனும் அந்தக் கூட்டில் இருந்த குஞ்சுகள் மூன்றை எடுத்து வந்தான்.
அந்தக் குஞ்சுகளை ஒரு கூண்டில் அடைத்தார் அவர். அந்தக் கூண்டை ஜன்னல் அருகே தொங்க விட்டார்.
கூண்டிற்குள் இருந்த குஞ்சுகளைப் பார்த்தது தாய்க் குருவி. கூண்டைச் சுற்றிச் சுற்றி வந்து பரிதாபமாகக் கூவியது.
பறந்து சென்ற அது வேளை தவறாமல் உணவு கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டியது.
சில நாட்கள் சென்றன-
அந்தக் குஞ்சுகளுக்கு இறக்கைகள் முளைத்தன. கூண்டுக்கு உள்ளேயே பறந்தன.
இதைப் பார்த்த அவர் வேலையாளிடம், ''நீ தாய்க் குருவியைப் பிடிக்க வேண்டும்,'' என்றார்.
கூண்டிற்கு வெளியே பசையைத் தடவினான் அவன். குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட வந்த தாய்க் குருவி அந்தப் பசையில் ஒட்டிக் கொண்டது. அதனால் விடுபட முடியவில்லை.
இதைப் பார்த்த அவர் கூண்டைத் திறந்தார். குஞ்சுகள் மகிழ்ச்சியுடன் வெளியே பறந்து சென்றன.
பசையில் ஒட்டியிருந்த தாய்க் குருவியை அந்தக் கூண்டிற்குள் அடைத்தார்.
தாய்க் குருவிக்குக் குஞ்சுகள் உணவு கொண்டு வரும் என்று காத்திருந்தார்.
அந்தக் கூண்டின் பக்கம் எந்தக் குஞ்சும் வரவில்லை. கூண்டிற்குள் இருந்த தாய்க் குருவி பசியால் வாடியது. இரக்கப்பட்ட அவர் கூண்டைத் திறந்தார்.
தாய்க் குருவி பறந்து சென்றது.
இரண்டு மாதங்கள் சென்ற பின் மகன்கள் மூவரும் அங்கே வந்தனர்.
''அப்பா! என்ன முடிவு செய்தீர்கள்?'' என்று கேட்டனர்.
''மகன்களே! நான் இங்கேயே இருந்து பழகி விட்டேன். என்னை இப்படியே இருக்க விடுங்கள். உங்களுடன் வர வற்புறுத்தாதீர் கள்,'' என்றார் அவர்.
இதனால்தான் பெரியவங்க சொன்னாங்களோ, 'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு'ன்னு!
***
